Published : 30 Nov 2019 10:35 am

Updated : 30 Nov 2019 10:36 am

 

Published : 30 Nov 2019 10:35 AM
Last Updated : 30 Nov 2019 10:36 AM

பருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி!

climate-change-issue-un-report

2015 டிசம்பர் 12 அன்று உலகின் கவனம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குவிந்திருந்தது. மனிதகுலத்தின் முதன்மைப் பிரச்சினையாக இன்றைக்கு மேலெழுந்துள்ள பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் வழிகளைக் கண்டடைய, பருவநிலை மாநாட்டில் உலகத் தலைவர்கள் கூடியிருந்தார்கள்.

பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருத்தல், பாதிப்புகளை மட்டுப்படுத்துதல், பருவநிலைத் தகவமைப்பு, பருவநிலை நீதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ‘பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை’ அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது; அதன்மீது விமர்சனங்கள் இருந்தாலும், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அது கருதப்படுகிறது.

பருவநிலை நெருக்கடி

18, 19-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவால், போக்குவரத்து, தொழிற்சாலை என எல்லா நவீன வசதிகளும் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. புவியில் மனிதகுலம் தோன்றியதில் இருந்து தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம்வரை வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு குறிப்பிட்ட அளவிலேயே தொடர்ந்துவந்தது. ஆனால், தொழிற்புரட்சியின் விளைவாக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகப்படியாக வெளியேற்றப்பட்டன. இது புவியின் சூழலியலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி பருவநிலை நெருக்கடிக்கு வழிவகுத்தது.

இதன் விளைவால் தொடர்ந்து புவி வெப்பமாதல், பனிப்பாறைகள் உருகுதல், கடல்மட்ட உயர்வு, கடும் வறட்சி, திடீர் வெள்ளம், அடிக்கடி புயல்கள் உருவாதல் என எளிதில் கணிக்க முடியாத இயற்கை நிகழ்வுகள் உலகெங்கும் ஏற்படத் தொடங்கியுள்ளன.

அலறச் செய்யும் அறிக்கை!

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme - UNEP) கடந்த பத்தாண்டுகளாக உலக நாடுகளின் பசுங்குடில் வாயு வெளியேற்ற அளவை ஆராய்ந்து, ‘வாயு வெளியேற்ற இடைவெளி அறிக்கை’யை (Emissions Gap Report) வெளியிட்டுவருகிறது. கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் உலக நாடுகளின் வெளியேற்ற அளவுக்கும் உள்ள இடைவெளி, அதனால் எழும் சிக்கல்கள் ஆகியவற்றை இந்த அறிக்கை விளக்குகிறது.

பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ள, பசுங்குடில் வாயுக்களின் அதிகப்படியான வெளியேற்றம் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் ஆண்டுக்கு 1.7 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து, புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 3.2 டிகிரி செல்சியஸுக்கு உயர்த்தும் மோசமான நிலைமைக்கு வழிவகுத்திருப்பதாக இந்த ஆண்டின் அறிக்கை கூறுகிறது.

இதற்கு முதன்மைக் காரணமாக ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது; சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட நான்கு முன்னணி வாயு வெளியேற்ற நாடுகள், எஞ்சிய 16 நாடுகள் ஆகியவற்றின் மொத்த வாயு வெளியேற்றம் உலக அளவில் 78 சதவீதம்.

சவால்கள்

புவியின் சராசரி வெப்பநிலை ஏற்கெனவே 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்ட நிலையில், பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் இன்றைய வேகத்திலேயே தொடர்ந்தால், சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தும் வாய்ப்பை உலகம் இழக்க நேரிடும்; இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 3.2 டிகிரி கூடுதல் வெப்பநிலையைத் தொட்டுவிடும்.

1.5 டிகிரி செல்சியல் அளவுக்குள் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு இருப்பதற்கு வாயு வெளியேற்றத்தின் அளவு 2030-க்குள் 25 ஜிகா டன் (1 ஜிகா = நூறு கோடி) அளவுக்குக் குறைக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால், வாயு வெளியேற்றம் இன்றைய வேகத்திலேயே தொடர்ந்தால், 2030-ல் 56 ஜிகா டன்னாக, நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைவிட இருமடங்கை மீறவே செய்யும். உயிரினப் பேரழிவு, உலகின் பெரும்பகுதி வாழத் தகுதியற்றுப் போதல் உள்ளிட்ட மோசமான நிகழ்வுகளுக்கு இது இட்டுச் செல்லும்.

அரசுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

பருவநிலை நெருக்கடியைக் கட்டுப்படுத்த அரசியல்வாதிகள் செயலாற்ற வலியுறுத்தி உலகம் முழுக்க மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்; பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் அதிகாரபூர்வ நடவடிக்கையை அமெரிக்கா ஒருபுறம் தொடங்கிவிட்டது; அதேநேரம் இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் ஆக்கபூர்வ முன்னெடுப்புகளையும் சில நாடுகள் தொடங்கியுள்ளன. ஆனால், அவற்றின் அளவும் வேகமும் போதுமான அளவு உள்ளதாகச் சொல்ல முடியாது.

பருவநிலை நெருக்கடியை சமாளிக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, உலக நாடுகள் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் (COP25) இந்த வாரம் கூடுகின்றன. இத்தகையை சூழலில் வெளியாகி இருக்கும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ள கடந்த காலத்தில் போதுமான நடவடிக்கைகளை அரசுகள் எடுக்காததன் விளைவாகவே, நிலைமை இன்றைக்குக் கைமீறிச் சென்றுகொண்டிருக்கிறது.

வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்துவதற்கான தொழில்நுட்பமும் கொள்கை அறிவும் நம்மிடம் இருக்கும்போது, மாற்றம் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஆனால், நிலைமையின் தீவிரத்தை உலகம் இன்னும் உணரவில்லை, குறைந்தபட்சம் உலகத் தலைவர்கள் செயல்படத் தயாரில்லை என்பதே இன்றைய நிலைமை. சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் பெருந்தொகுப்பான பருவநிலை நெருக்கடி, இன்றைக்கு உலகில் வாழும் அனைவரிடமும் ஓர் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

நாமும் நமது சந்ததிகளும் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டுமானால், பருவநிலை நெருக்கடிக்கான காரணங்களை நாம் வாழும் காலத்திலேயே குறைத்தாக வேண்டும். அப்படிக் குறைக்காவிட்டால் இந்த உலகம் நம் கைகளில் இல்லை என்பதைத்தான் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
என்ன செய்யப் போகிறோம்?

1.5 டிகிரி உயர்ந்தால் நமக்கு என்ன ஆகும்?

19-ம் நூற்றாண்டில் இருந்து பூமியின் சராசரி வெப்பநிலை ஏற்கெனவே 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்ட நிலையில், ஐ.பி.சி.சி (பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு) கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை 1.5 டிகிரி அல்லது 2 டிகிரி செல்சியல் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்படுத்தும் விளைவுகளை அறிவித்தது. இந்த உயர்வு வெப்ப அலைகள், நீர் பற்றாக்குறை, கடலோர வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களுக்கு வழிவகுக்கும்.

கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்ந்துவரும் 60 லட்சம் பேர், கடல்மட்ட உயர்வால் வாழிடத்தை இழப்பார்கள். சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே பெரும் சேதம் நிகழும் என்றால், அதைத் தாண்டி ஏற்படும் ஒவ்வோர் உயர்வும் மிக மோசமான ஆபத்துகளை நமக்கு ஏற்படுத்தும்.

- சு. அருண் பிரசாத், தொடர்புக்கு:arunprasath.s@hindutamil.co.in


Climate change issueUN climate reportபருவநிலை நெருக்கடிபருவநிலை மாநாட்டுபசுங்குடில் வாயு வெளியேற்றம்பாரிஸ் பருவநிலை உடன்படிக்கைஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம்United Nations Environment ProgrammeUNEPவாயு வெளியேற்ற இடைவெளி அறிக்கைEmissions Gap Reportசராசரி வெப்பநிலைவெப்பநிலை உயர்வு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author