Published : 30 Nov 2019 10:35 AM
Last Updated : 30 Nov 2019 10:35 AM

புதிய பறவை 14: கவி பாடப்பட்ட பறவை

தண்ணீர்ப் பிரவாகம் அதிகம் இருந்த ஆற்றுப் பகுதி. நீருக்குள் தீவுகளாகக் காட்சியளித்த பாறைகளில் நிறையப் பறவையினங்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. கரைகளின் இருபுறமும் ஓங்கி வளர்ந்திருந்த மூங்கில் மரங்களில், பறவைகளின் கூடுகள் அமைந்திருந்தன. கணக்கிலடங்கா நீர்ப் பறவைகள், தண்ணீர் ஓட்டத்தையும் மீன் ஓட்டத்தையும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தன. எத்திசை நோக்கினும் பறவைகளின் உருவமும் குரலுமே அங்கே வியாபித்திருந்தன!

மரங்களின் நிழலால் பச்சை நிறம் பிரதிபலித்த தண்ணீரில் காபி நிறத்திலான பாறைகள் அசைவற்றிருந்தன. அவற்றில் வெண்மையும் கருமையும் கச்சிதமாகப் பொருந்திய வெள்ளை அரிவாள்மூக்கன்கள் (Black headed ibis) சுற்றம் பார்த்துக்கொண்டிருந்தன. அன்றில் பறவையின் உறவினர் பறவை இது.

பல இறகுகளைக் கோதிக்கொண்டும், இரை தேடிக்கொண்டும் சில. நீரில் நனைந்த உடலை உலர்த்திக்கொண்டிருந்தன. முகத்திலிருந்து வியர்வை வடிவதைப் போல, மீன் தேடிய அரிவாள்மூக்கன்களின் கருநிற அலகின் நுனியிலிருந்து நிறமற்ற நீர்த்துளிகள் தண்ணீருக்குள் சொட்டு சொட்டாக வழிந்தன.

பாடப்பட்டப் பறவைகள்

சற்றுத் தொலைவில் இருந்த அரிவாள்மூக்கன்கள், பத்து நிமிடத்துக்குப் பிறகு எனக்கு வெகு அருகாமையிலிருக்கும் பாறையில் வந்திறங்கின அந்தப் பாறையைச் சுற்றி நிறைய மீன்கள் உலாவிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. சங்கப் பாடல்களில் இடம்பெற்ற பறவை இனத்தின் உறவினரை வெகு அருகில் கண்டுகளித்ததில் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.

இலக்கியங்களில் அன்றில்கள் இடம்பிடித்ததற்கான காரணத்தை அவற்றின் உருவமும் செயல்பாடுகளும் எனக்கு உணர்த்தின. இவ்வளவு கலைநயமிக்க பறவையை மெய்சிலிர்த்து கவிபாடாமல் இருக்க முடியுமா!

ரத்த நிறம்

பறவையின் பின்பகுதியில் மயிலின் தோகைப்போல் இறகுகள் காட்சியளித்தன. உடலின் முன் பகுதியில் இருந்த சிறகுத் தூவிகள், காற்றில் வண்ணமற்று ஓவியம் வரைந்துக்கொண்டிருந்தன. அரிவாள்போல் நயமாக வளைந்த அலகைக்கொண்டு ஆழமற்ற தண்ணீர்ப் பகுதியை துழாவிக் கொண்டிருந்தது ஓர் அரிவாள்மூக்கன்.

அலகின் நுனி முதல் கழுத்தின் அடி வரை மையிருட்டுக் கருமை. கால்களில் கரும்பின் நிறம் வியாபித்திருந்தது. வெண்ணிற உடலின் இறகுகள் சலசலத்தபோது தேவதையின் சாயல். உடலோடு இறகுகள் சேரும் பகுதியில் தென்பட்ட வெளிர் சிவப்பு நிறம் இயற்கையின் அதிநுட்பமான வண்ணக் கலவை. முதலில் பார்த்தபோது ரத்தம் வடிகிறதோ என்று மனம் பதறாமல் இல்லை. ஆனால், அது உடலோடு இறக்கைகள் சேரும் இடத்தின் நிறம் என்று பின்னர் தெரிந்துக்கொண்டேன்.

இரையை முழுமையாக உண்ட திருப்தியில் வெள்ளை அரிவாள்மூக்கன்கள் ஒவ்வொன்றாய் கலைந்து செல்லத் தொடங்கின.

- வி.விக்ரம்குமார், சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x