பால் உற்பத்தியில் தண்ணீரின் பங்கு

பால் உற்பத்தியில் தண்ணீரின் பங்கு
Updated on
2 min read

சு. முத்துக்குமார்

மூன்றாவது உலகப் போர் மூளுமானால் அது தண்ணீருக்கானதாக இருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவ்வளவு முக்கியத்துவம் கொண்டது நீர். எல்லா உயிர்களின் சீரான உடல் நடுநிலைத்தன்மையை (Homeostasis) பாதுகாப்பதே இதன் முக்கியப் பணி.

அவற்றில் சில உடல் வெப்பநிலைப் பராமரிப்பு, வளர்ச்சி, செரிமானம், ஊட்டச்சத்து இடப்பெயர்ச்சி/கடத்துதல், இனப்பெருக்கம், அமிலக் கார சமநிலை, வளர்சிதை மாற்றம், மூட்டு உயவு, கழிவு நீக்கம், ரத்த அழுத்தம், கண் பார்வை, இறுதியாக உற்பத்தி ( பால் ) ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

எந்த ஒரு உயிரினமானாலும் அது 20% தண்ணீர்ச் சத்து இழப்பு ஏற்படும்போது அது உயிரிழப்பில்கூட முடியலாம். முக்கியமாகப் பாலில் 87-88 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. ஆகவே, தண்ணீர் ஒரு தவிர்க்க முடியாத ஊட்டச்சத்து. இதன் முக்கியத்துவம் பெரும்பான்மையான பண்ணையாளர்களுக்குத் தெரிவதில்லை.

தண்ணீர் உட்கொள்ளும் அளவைப் பாதிக்கும் காரணங்கள்

* உடலியல் நிலை
* உடல் எடை
* பால் உற்பத்தியின் அளவு
* உடல் அளவு
* உலர் பொருள் தேவை
* தீவனத்தின் வகை
* சூழ்நிலைக் காரணிகளான வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசை வேகம் ஆகியவை
* தீவனத்தின் ஈரப்பதம்
* தண்ணீரின் உப்புத்தன்மை
* தண்ணீரின் வெப்பநிலை
* தண்ணீரில் கரைந்துள்ள நச்சுத்தன்மை கொண்ட கரைப்பொருட்கள்
* தண்ணீரின் அமிலக் காரச் சமநிலை
* தண்ணீர் கொடுக்கப்படும் காலம்/ நேரம்/ அளவு
* தண்ணீர் காட்டும்போது மற்ற மாடுகளுடனான சமூக, குணாதிசய உறவு.

தண்ணீர்த் தேவையை எவ்வாறு கணக்கிடுவது

உற்பத்தி, உடல் பராமரிப்பு ஆகிய இரு வகையான தேவைகளைச் சார்ந்து தண்ணீர் கணக்கிடப்படுகிறது. அதிகமாகப் பால் கறக்கும் பசுவுக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும். ஏனெனில் பாலில் 87 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

தண்ணீர்த் தேவைகள்

1. ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் 3-5 லிட்டர் தண்ணீர் தேவை.

2. உடல் பராமரிப்புக்கு மாட்டின் உடல் எடையில் 10 சதவீதம் தண்ணீர் தேவைப்படுகிறது. உ-தா: 470 கிலோ எடை கொண்ட பசு நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் கறப்பதாகக் கொண்டால் அதற்கான தண்ணீர் தேவை கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. உற்பத்திக்கு : 15 * 4 = 60 உடல் பராமரிப்புக்கு: 470*10%= 47 மொத்தம் : 107 லிட்டர்/ நாள்.

3. பண்ணை பராமரிப்பிற்குக் கூடுமான அளவு தண்ணீரை விரயம் செய்யாமல் தேவைக்கேற்பப் பயன்படுத்தலாம்.

4. கோடைக் காலத்தில் மாட்டை இரண்டு முறை குளிப்பாட்ட வேண்டும். வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மாட்டைப் பாதுகாத்துக்கொள்ள இது உதவும். கோடைக்காலத்தில் ஒரு மாட்டுக்கு ஏறக்குறைய 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாகத் தேவைப்படும்.

5. கன்றுக்கான தண்ணீர் தேவை கீழ்க் கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

வயது மாதங்களில் தண்ணீர் (லி /நாள்)
01 5.0 - 7.5
02 5.5 - 9.0
03 8.0 - 10.5
04 11.5 - 13.5

6. கறவையில் இல்லாத சினைமாட்டுக்கு ஏறத்தாழ 35-45 லிட்டர் நாள் ஒன்றுக்குத் தேவைப்படுகிறது.

பண்ணையாளர்களுக்கான பரிந்துரை

கால்நடைகளுக்கு எல்லா நேரத்திலும் தூய்மையான குடிநீர் கட்டாயம் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோடைக் காலத்தில் தூய்மையான குளிர்ந்த நீர் கொடுப்பதால் வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மாட்டைப் பாதுகாக்க முடியும்.

நாம் தாகம் வரும்போது தண்ணீர் குடிக்கிறோம். ஆனால், மாட்டைப் பொறுத்தவரை நாம் தண்ணீர் காட்டும் நேரத்தில்தான் குடிக்க வேண்டிய கட்டாயம். இதைத் தவிர்க்க வேண்டும். மாட்டுக்குத் தாகம் வரும்போது தண்ணீர் குடிக்கும் அளவு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அதுவே சிறந்த பராமரிப்பாக இருக்கும்.

கட்டுரையாளர்,
சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத் தொழில்நுட்ப வல்லுநர், கால்நடை மருத்துவர்
தொடர்புக்கு: 9976645554

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in