

சேலத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்கவுள்ளது. தலைவாசல் கூட்டு சாலையை ஒட்டி அமைந்துள்ள, கால்நடைப் பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான 900 ஏக்கர் பரப்பளவில், 396 கோடி ரூபாய் செலவில் நவீனப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு அமைய உள்ள ஆராய்ச்சி மையத்தில் மீன், ஆடு, மாடு, கோழிகள் வளர்ப்பு, கலப்பின மாடுகள் ஆகியவற்றை உருவாக்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கால்நடை ஆம்புலன்ஸ்
கட்ந்த வாரம் கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் 22 புதிய கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். இந்த சேவையைப் பெற 1962 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பார்கள். இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், ஜெனரேட்டர், ஹைட்ராலிக் லிப்ட், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இடம்பெற்றுள்ளன. 2016ஆம் ஆண்டு திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவை தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டது.
மானியத்தில் கறவை மாடுகள்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மானியத் திட்டத்தில் கறவை மாடு வழங்க நடப்பாண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.4 கோடி மதிப்பிலான கறவை மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் சிவகங்கையை அடுத்த, அழகச்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மானியத் திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் இதைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு அபராதம்
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டு அளவு அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டுக்கான காரணங்களுள் ஒன்று, டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவை எரிப்பது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் பஞ்சாப் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் பஞ்சாப் விவசாயிகள் பயிர்க் கழிவை எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதேகர் சாகிப் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்கள் நிலத்தில் உள்ள கோதுமைப் பயிர்களின் கழிவை எரித்துள்ளனர். இந்தச் செயலில் ஈடுபட்ட விவசாயிகள் 28 பேருக்கும் 92,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விவசாயிகளில் 21 பேர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு: விபின்