

பிளாஸ்டிக் கழிவிலிருந்து மோட்டார் இயக்கும் மாற்று எரிபொருளையும், கரிமூட்டம் மூலம் பயிர்களைக் காக்க உதவும் பூச்சிமருந்தையும் தயாரிக்க முடியும் என்பதை அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
பயோடீசலில் ஆர்வம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ‘ஓடம்’ தொண்டு நிறுவனம் மூலம் காட்டாமணக்கு விதையிலிருந்து பயோடீசல் தயாரிக்கப்பட்டுவருகிறது. இது பற்றி இணையதளம் மூலம் தகவலறிந்த அமெரிக்காவிலுள்ள கென்டகி பல்கலைக்கழக வேதியியல் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் தொடர்புகொண்டனர். அவர்களுடைய தயாரிப்பு முறை குறித்தும் கேட்டறிந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, பிளாஸ்டிக் கழிவைக் கொண்டு மாற்று எரிபொருள் தயாரிக்கும் திட்டம் குறித்தும், திருச்சுழி பகுதியில் கரிமூட்டம் போடும் தொழில் அதிகமாக உள்ளதால், அதை மதிப்பு கூட்டப்பட்ட தொழிலாக மாற்றுவது குறித்தும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அவர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர்.
புதிய ஆராய்ச்சி
இந்த ஆராய்ச்சிகளுக்காக, திருச்சுழி அருகே சத்திரம் கிராமத்தில் உள்ள ஓடம் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்வராஜ் பயோடீசல் தயாரிப்பு மையத்தில் கென்டகி பல்கலைக்கழக வேதியியல் பொறியியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெப்ரிஸி மற்றும் மாணவ, மாணவர்கள் 12 பேர் கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கினர்.
பிளாஸ்டிக் கழிவுகளான உடைந்த நாற்காலி, தண்ணீர் பாட்டில் மூடிகள் (2, 4, 5, 6 வகை எண்கள் கொண்ட) போன்றவற்றைக் கலனில் எரியூட்டி, அதிலிருந்து வெளியாகும் வாயுவைக் குளிர்விப்பதன்மூலம் கிடைக்கும் திரவம் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு லிட்டர் தயாரிக்க ரூ.20 செலவாகும்.
பூச்சிவிரட்டி
அதேநேரம், விருதுநகர் மாவட்டத்தில் பிரதானத் தொழில்களில் ஒன்றான கரிமூட்டம் போடும் தொழிலை மதிப்பு கூட்டப்பட்ட தொழிலாக மாற்றும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. கரி மூட்டத்திலிருந்து வெளியேறும் வாயுவைக் குளிர்விப்பதன்மூலம் கிடைக்கும் திரவத்தோடு, குறிப்பிட்ட அளவு நீரைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். அப்படித் தெளிக்கும்போது அது பூச்சிவிரட்டியாகப் பயன்படுகிறது.
இது `உட் வினிகர்’ என்று அழைக்கப்படுகிறது. பயிர்களில் இதைத் தெளிக்கும்போது, பூச்சிகள் சாவதில்லை. இதன் மணம் பூச்சிகளுக்குப் பிடிக்காததால், அவை இடம்பெயர்ந்துவிடுகின்றன. இதற்கு புச்சிகொல்லி விலையில் 10 சதவீதம் போதும்.
மாற்று எரிபொருள்
“பிளாஸ்டிக் கழிவை எரிக்கும் போது, அதிலிருந்து வெளிவரும் வாயுவைக் குளிரவைப்பதால் கிடைக்கும் திரவத்தை மோட்டாரில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவை எரிப்பதன் மூலம் ஒரு லிட்டருக்கும் அதிகமான அளவு மாற்று எரிபொருள் திரவம் கிடைக்கும்.
இதன்மூலம், ஒரு லிட்டர் டீசலில் ஒரு மணி நேரம் இயங்கும் மோட்டாரை 2.15 மணி நேரம்வரை இயங்கவைக்க முடியும். உற்பத்திச் செலவும் மிகக் குறைவு" என்கின்றனர் ஓடம் தொண்டு நிறுவனச் செயல் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவும் பேராசிரியர் ஜெப்ரிஸியும்.
புதிய தொழில்
கரி மூட்டம் போடப்படும்போது கரி, கரித்தூள் கிடைக்கும். 100 கிலோ விறகைக் கரிமூட்டம் போட்டால் 20 கிலோ மட்டுமே கரி கிடைக்கும். ஆனால், மாணவர்கள் உருவாக்கிய முறைப்படி விறகுகளைக் கலனில் வைத்து எரித்து, அதன் மூலம் வெளியாகும் வாயுவைச் சேகரித்துக் குளிரவைத்தால் கிடைக்கும் திரவத்தைப் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்த முடியும்.
இந்தப் பூச்சிவிரட்டி ஆபத்து இல்லாதது என்பதால் பயிர்கள் நன்கு வளரும், சாகுபடியும் அதிகரிக்கும். மேலும், கரித்தூளை அச்சுகள் மூலம் கட்டிகளாக மாற்றி வீடுகள், ஹோட்டல்களில் அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். “இது நீண்டநேரம் எரியக்கூடியது, இத்தொழில்நுட்பங்கள் குறித்து உள்ளூர் விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளதாக,” இருவரும் தெரிவித்தனர்.
படங்கள்: இ.மணிகண்டன்