

கடந்த ஆண்டு படைப்புழுத் தாக்கத்தால் இந்திய மக்காச்சோள உற்பத்தி பெரிதும் பாதிப்படைந்தது. இந்தப் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் விதமாக வேளாண் துறையால் விலையில்லா மருந்து தெளிக்கும் திட்டம் முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படைப்புழுக்களை முன்கூட்டியே கட்டுப்படுத்தும் வகையில் நடவுசெய்யப்பட்ட 15 நாட்கள் ஆன நிலையில் ஒரு முறையும் 40 நாட்கள் ஆன நிலையில் ஒரு முறையும் மருந்து தெளிக்கப்பட உள்ளது. படைப்புழுத் தாக்குதல்களைக் கண்டறிந்தவுடன் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் துறை அலுவலா்களிடம் அணுகித் தகவல்களை அளிக்கக் கோரப்பட்டுள்ளது.
லக்கோட் பழ சீசன் தொடங்கியது
தோட்டக்கலைத் துறையின் குன்னுார் பழப்பண்ணையில் லக்கோட் பழ சீசன் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக அளவில் இந்த வகைப் பழம் விளைகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பழத்தின் மகசூல் குறைந்திருந்தது. இந்தப் பழப்பண்ணையில் லக்கோட் மரக் கன்று ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ லக்கோட் பழம் தரத்தின் அடிப்படையில் ரூ. 15 முதல் 35 ரூபாய்வரை விற்கப்படுகிறது.
நெல் நடவுப் பணிகள் துரிதம்
கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது. தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்தது. தற்போது வடகிழக்குப் பருவமழையும் சராசரி அளவுக்குப் பெய்துவருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நெல் நாற்று நடவுப்பணிகள் துரிதம் அடைந்துள்ளன.
தங்கம் சாப்பிட்ட மாடு
ஹரியாணா மாநிலம் சிர்சாவுக்கு அருகில் கலனவலியில் காய்கறிக் கழிவோடு 40 கிராம் தங்க நகைகளைக் காளை மாடு ஒன்று விழுங்கிவிட்டது. ஜனக்ராஜ் என்பவரது குடும்பம் வீட்டு நகைகளைச் சமையலறைப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தியுள்ளது. அந்தப் பாத்திரத்தில் காய்கறிக் கழிவைப் போட்டுவைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் மறந்து காய்கறிக் கழிவுடன் நகைகளையும் வெளியே கொட்டியுள்ளனர்.
அந்த வழியாகக் காளை ஒன்று காய்கறிக் கழிவுடன் சேர்த்து நகைகளையும் விழுங்கிவிட்டது. இதை சிசிடிவி காட்சிகள் மூலமாக அவர்கள் கண்டுபிடித்தனர். அந்தக் காளையைக் கண்டுபிடித்து அதற்கு மலம் இளக்கி மருந்து கொடுத்துக் காத்திருக்கிறார்கள் அந்தக் குடும்பத்தினர்.
தொகுப்பு: விபின்