

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்
தோட்டக்கால் நிலங்களில் நன்கு உழவுசெய்த நிலையில் நிலத்தைச் சமன்படுத்தி விதைகளை ஊன்றிப் பயிர் வளர்ப்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. விதைகளை வரிசை முறையில் கயிற்றைப் பிடித்து ஊன்றுவது அல்லது நிலத்தில் உள்ள சிறிய குச்சிகளால் வரை அமைத்து அதனுள் ஊன்றி பின்னா் மண்ணைக் கொண்டு விதைகளை மூடி விடுவது ஆகியவை நடைமுறையில் உள்ள முறைகள்.
நவீன வேளாண்மையில் தோட்டக்கால் நிலங்களாகட்டும், மானாவாாியாகப் பயிர் செய்யும் நிலமாகட்டும், ஆழச்சால் அகலப்பாத்தி அல்லது மேட்டுப்பாத்தி அமைத்து விதைகளைப் பாத்தியின் இருபுறமும் ஊன்றிப் பயிர்ப் வளர்ப்பது நல்ல பலன் கொடுக்கும். இதற்காக நிலத்தை நன்கு உழவு செய்த பின் 1 அடிவரை மேல் மண்ணைக் கூட்டி மேடு அமைக்க வேண்டும். நிலத்தின் சாிவுக்குத் தகுந்தவாறு 1.2 மீட்டர் அகலம் மேட்டுப் பாத்தியும் இரு கரைகளில் 30 செ.மீ அளவான சால் அமைக்க வேண்டும். அதன் பிறகு மேட்டுப்பாத்தியின் இரு கரைகளிலும் விதையை ஊன்றுவது பல வழிகளிலும் சிறந்தது.
இதனால் நீாின் பயன்பாடு அதிகாிக்கிறது. பயிாின் துாித வளர்ச்சிக்கு இம்முறை சிறந்தது. தோட்டக்கால் நிலங்களில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும்போது அதன் இறுதி நிலைக் குழாய்கள் மேட்டுப் பாத்தியின் நடுவில் பாத்திக்கு நீளவாக்கில் அமைக்கலாம். நீர் பயிாின் தூரில் சென்றடைய வழிவகுக்கிறது. இதனால் நீர் விரயமாவது தவிர்க்கப்படும். மழைக்காலத்தில் இப்பாத்தியின் இரு கரைகளிலும் அமைந்த சால் வழியே தேவைக்கு அதிகமாக உள்ள நீர் வழிந்தோடி விடும். இம்முறையில் டிராக்டருடன் இணைத்த மேட்டுப்பாத்தி அமைக்கும் இயந்திரமும் கூடவே விதைப்பு செய்யும் இயந்திரமும் பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இக்கருவியின் மூலம் மக்காச்சோளம், கொண்டைக்கடலை, சோளம், பயறு வகைப் பயிர்களை ஊன்றலாம்.
மானாவாரி நிலங்களில் விதைப்பு
மானாவாாி நிலங்களில் பரவலாகச் சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்கள் ஆகிவற்றின் விதைகளை உழவுசெய்த நிலத்தில் தூவி விதைப்புச் செய்ய வேண்டும். அதன் பிறகு முட்செடிகளை ஒரு படலாகக் கட்டி விதைத்த நிலத்தில் இழுப்பதன் மூலம் விதைகள் மேல் மண்ணால் மூடப்பட்டுவிடும்.
இந்த நடைமுறை வழக்கமான ஒன்று. தற்போது நவீன வேளாண்மையில் இந்த முறை மாறி பயறு வகை விதைகள், நிலக்கடலை, மக்காச்சோளம், சிறுதானிய விதைகளான சோளம் போன்ற பயிர்களின் விதைகளை விதைப்புக் கருவி மூலம் விதைப்பதென்பது நல்ல பலனைக் கொடுக்கிறது. இவ்விதைப்புக் கருவி தற்போது டிராக்டருடன் இணைந்து பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. முன்புகாளைமாடுகள் கொண்டு உழவு செய்யும் கலப்பையுடன் இணைந்து செயல்படக் கூடியதாகவும் பயன்பாட்டில் இருந்தது.
இதனால் விதைப்புக்கு எடுக்கும் காலம் மிகவும் மிச்சமாகிறது. விதை உாிய ஆழத்தில் விழுவதும் உாிய இடைவெளியை வாிசைக்கு வாிசை செடிக்குச் செடி பராமாிப்பதும் எளிதாகிறது. இக்காரணங்களால் பயிருக்குத் தேவையான சூாிய ஒளி, நீர், சத்துக்கள் ஆகியவற்றை மண்ணிலிருந்து பயிர் எடுத்துக்கொள்ள ஏதுவாக ஆகிறது.
மரவகைப் பயிர்களான தென்னை போன்ற மரக்கன்றுகளைக் குழி எடுத்து நடும் பழக்கம் உள்ளது. தற்போது குழியெடுக்கவும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகாித்துள்ளது.
தென்னை போன்ற சல்லி வேர் கொண்ட மரவகைகளுக்கு முறையே 1 மீட்டர் நீளம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து, அதில் உாிய இயற்கை உரங்கள் கலந்த மணல் கலவையை இட்டு மேல் மட்டத்திலிருந்து 1 அடி ஆழத்தில் தென்னங்கன்றுகளை நடவு செய்யலாம். பிற மரவகைப் பயிர்களுக்குச் சராசாியாக ஒன்றரைக் கன அடி அளவான குழிகளை எடுத்து அதனுள் கன்றுகளை நடவுசெய்யலாம். மரவகைப் பயிர்களில் ஒரு கன்றுக்கும், மறு கன்றுக்கும், வாிசைகளுக்கும் உள்ள இடைவெளி மரத்திற்கு மரம் மாறுபடும்.
மத்திய தென்னை வளர்ச்சி வாரிய பண்ணையில் 67 ஆயிரம் கன்றுகள் உருவாக்கும் பணி தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை அருகில் 102 ஏக்கர் பரப்பளவில் நாற்றுப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்குத் தேவையான தென்னை நாற்றுகள் உருவாக்கப்பட்டு மானிய விலையில் வழங்கப்பட்டுவருகிறது. மேற்கு கடற்கரை நெட்டை, சாவுக்காடு சிவப்பு குட்டை, மலேசியா மஞ்சள் குட்டை, மலேசியா பச்சைக் குட்டை ஆகிய ரகங்கள் இங்கே கிடைக்கும். நெட்டை ரகம் ரூ.65-க்கும் குட்டை ரகம் ரூ. 80-க்கும் விற்கப்படுகின்றன.
கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com