Published : 02 Nov 2019 11:53 am

Updated : 02 Nov 2019 11:53 am

 

Published : 02 Nov 2019 11:53 AM
Last Updated : 02 Nov 2019 11:53 AM

மரபுக் கைவினை: கலம்காரி - இயற்கைத் துணித் தயாரிப்பின் கொடை

kalamkari

சாளை பஷீர்

நான் எந்த ஊருக்குப் பயணப்பட்டாலும் அங்கு காதி, கதர், சர்வோதயக் கடைகளைத் தேடுவது உண்டு. அண்மையில் கேரளத்தின் கோழிக்கோட்டுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, வைக்கம் முகம்மது பஷீர் தெருவிலுள்ள காதி எம்போரியத்துக்குச் சென்றிருந்தேன்.

செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு சிவப்பு வடிவக்குறிகளுடன் சில சட்டைகள் தொங்கின. கலம்காரி என்று பெயரிடப்பட்ட அது இயற்கையாக நிறமூட்டப்பட்ட சட்டை என்று கடைக்காரர் கூறவே, ஆர்வத்துடன் அணிந்து பார்த்தேன். பஞ்சுத் துவாலையின் மென்தீண்டலை உணர முடிந்தது. அன்றிலிருந்து இதை எப்போது அணிந்தாலும் முதன்முதலாக அது தந்த மென்தீண்டல் உணர்வையே மீண்டும் மீண்டும் தந்துகொண்டிருக்கிறது. விலை உயர்ந்த ஆயத்த சட்டைகளோடு ஒப்பிடும்போது அரசு தரும் தள்ளுபடி போக, கலம்காரி சட்டை ஒன்றின் விலை ரூபாய் 435 மட்டுமே!

சிந்து சமவெளியும் ஆந்திரமும்

கலம்காரியின் பிறப்பிடம் சிந்து சமவெளி என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அலைந்து திரியும் கதைசொல்லிகளான நாட்டாரிசைப் பாடகர்கள், ஓவியர்கள் ஆகியோரிடம் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற இந்தக் கலையை கோல்கொண்டா, மச்சிலிப்பட்டினம், சோழ மண்டலப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இன்றைய ஆந்திர மாநிலத்தில் அங்கீகரித்து வளர்த்தெடுத்து இருக்கின்றனர். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு இந்தக் கலை மேலும் செழித்திருக்கிறது.

ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துறைமுக நகரான காக்கிநாடாவிலிருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆரியவட்டம் கிராமம். இங்கு 37 ஆண்டுகளாக ‘சூரியா கலம்காரி நிறுவன'த்தை நடத்திவருகிறார், அதன் உரிமையாளர் சூரியநாராயணா. இவருடைய நிறுவனம் காதி கிராம & தொழில் ஆணையத்துக்காக கலம்காரி ஆடைகளைத் தயாரித்து வழங்குகிறது.

எப்படி உருவெடுக்கிறது கலம்காரி?

காதி ஆணையத்திலிருந்து வெண்ணிறப் பருத்தித் துணிப்பொதியின் வருகையுடன் கலம்காரிக்கான பணிகள் தொடங்குகின்றன. முதலில் சாணிக்கரைசலில் மூன்று நாட்கள் துணியை ஊற வைத்து வெளுக்கின்றனர்; செயற்கை வெளுப்பான்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நன்கு சலவை செய்த பிறகு கதிரொளியில் உலர்த்துகின்றனர். உலர்ந்த துணியைக் கடுக்காய்க் கரைசலில் முக்கி மீண்டும் கதிரொளியில் உலர்த்துகின்றனர். இளம் பொன்னிறத்தைப் பெறும் துணியில் கரையை அச்சிடுகின்றனர்.

மரக்கறி, வித்துக்கள், வேர்கள், இலைகள், மலர்களையும் இரும்பு, வெள்ளீயம், செம்பு உள்ளிட்ட தாதுக்களைப் பயன்படுத்தி சாயம் சேர்த்து, பருத்தி இழைத் துணிகளில் கையாலும் அச்சுக்கட்டையாலும் வடிவங்களைப் பதிக்கின்றனர். முதலில் கறுப்பும் பிறகு செந்நிறமும் அச்சிடப்படுகின்றன. துருப்பிடித்த இரும்பு, கசீன் எனப்படும் ஒரு வகை பால் புரதம், வெல்லம் ஆகியவற்றில் இருந்து கறுப்பு நிறம் உருவாக்கப்படுகிறது.

செஞ்சாயப் பொடியைப் பயன்படுத்தி சிவப்பு நிறம் உருவாக்கப்படுகிறது. மஞ்சள் கிழங்கு, உலர்ந்த மாதுளையைப் பயன்படுத்தி மஞ்சள் நிறமும் கடுக்காய்ப் பூக்கள், உலர்ந்த மாதுளையிலிருந்து பச்சை நிறமும் அவுரி இலைகளிலிருந்தும் நீல நிறமும் உருவாக்கப்படுகின்றன.

அச்சுக்கட்டையைக் கொண்டு வேலைப்பாடுகளைப் பதித்த பிறகு மூன்று நாட்கள்வரை துணி உலர்வதற்காகக் காத்திருக்கிறார்கள். அதன் பிறகு பசையின் மணத்தைப் போக்குவதற்கு ஆற்று நீரில் அலசப்படுகிறது. பிறகு நூறு பாகை வெப்பத்தில் செஞ்சாயப் பொடியுடன் ஜாதிக்காய் இலைகளைச் சேர்த்து கொதிக்க வைக்கின்றனர். இதன்மூலம் கறுப்பு, சிவப்பு நிறங்கள் கன்றுவதுடன் கூடுதலான பசையும் கடுக்காய்ச் சாறும் நீக்கப்படுகின்றன.

விறைப்பாக்குவதற்காகவும் மேலும் வண்ணம் சேர்ப்பதற்கு வசதியாக இருப்பதற்காகவும் பசும்பாலையும் சோற்று வடிகஞ்சியையும் துணியில் தெளித்துக் காய வைக்கின்றனர். இதன் பிறகு துணியில் ஐந்திலிருந்து ஆறு வகை நிறங்களைச் சேர்க்க முடியும். இறுதியாக, படிகாரக் கரைசலில் முக்குவதன் மூலமாகத் துணியிலிருந்து தூசு அகற்றப்பட்டு மெருகேறுகிறது.

சூரிய நாராயணாவின் நிறுவனத்தில் ஆண்களுக்கான சட்டையுடன் லுங்கி, குர்தா, பெண்களுக்கான மேலாடை, சேலை, தையல் துணி, படுக்கை விரிப்பு, தலையணை உறை, தோள் பை, கைக்குட்டை ஆகியனவும் தயாரிக்கப்படுகின்றன.

கலம்காரி ஆடைத் தயாரிப்பின் மூலப்பொருட்களில் பயன்படும் செஞ்சாயப் பொடியும் அவுரியும் ராஜஸ்தானிலிருந்து வருபவை. மற்ற அனைத்தும் ஆரியவட்டத்தின் சுற்றுவட்டாரங்களில் கிடைப்பவையே. இங்கு தயாராகும் கலம்காரிக் கதராடைகள் மதுரை மாவட்ட சர்வோதய சங்கம், கேரளத்தின் கோழிக்கோடு சர்வோதய சங்கம், பைய்யனூர் காதி மையம் ஆகிய இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

பின்னடைவும் மீள் வருகையும்

ஆயத்த ஆடைகளின் உற்பத்தியை ஆலைகள் குவியல்குவியலாகத் தொடங்கிய காலகட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்த கலம்காரி ஆடைகள், தற்போது மக்களிடையே ஏற்பட்டுவரும் இயற்கை, மரபு சார்ந்த விழிப்புணர்வின் காரணமாக மீண்டும் செல்வாக்கு பெறத் தொடங்கியுள்ளன. காந்தி கனவு கண்ட கிராமியத்
தற்சார்பு உற்பத்திப் பொருளாதாரத்தின் மிகச் சிறந்த வகைமாதிரியாகத் திகழ்கிறது ஆந்திரத்தின் கலம்காரி ஆடை. இந்த ஆடைத் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கையின் தழுவலும் தனிமனித திறனும் ஈடுபாடும் தோய்ந்துள்ளன.

ஆயத்த ஆடைகளைப் போல அல்லாமல் கலம்காரி ஆடைத் தயாரிப்பில் ஏராளமான ஆட்களுக்கு வேலை கிடைக்கிறது. கைவினைக் கலையும் கலைஞரும் ஊக்குவிக்கப்படுகின்றனர். தாவரப் பொருட்களின் தேவையால் காடும் இயற்கை வளமும் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. சாணம், பால் ஆகியவற்றின் தேவையால் மாடு வளர்ப்பும் பெருகுகிறது. தயாரிப்புக் கழிவுகளால் மண்ணும் நீரும் மாசுபடுவதில்லை என்பதுடன், இந்தக் கழிவுகள் அவற்றுக்குச் செறிவூட்டவும் செய்கின்றன என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓவியத்தின் நிதானம்

ஒரு ஓவியத்துக்குத் தேவையான நிதானத்தைப் போலக் கலம்காரி ஆடையொன்று ஆயத்தமாவதற்கு கிட்டதட்ட ஏழு நாட்கள் தேவைப்படுகின்றன. கலம்காரி ஆடையின் ஒவ்வொரு இழைக்குள்ளும் நம் சிந்து சமவெளி முன்னோர்களின் நினைவுகள், கதை சொல்லிகளின் வண்ணமயக் கதாபாத்திரங்கள் பிணைந்துள்ளன.
இனிமேல் கலம்காரி ஆடையை அணிந்திருப்பவர்கள், ஆயத்த ஆடை அணிந்திருப்பவர்களைப் பார்த்து தங்கள் சட்டையின் கழுத்துப்பட்டையைக் கம்பீரமாக உயர்த்திவிட்டுக் கொள்ளலாம்.

சூரிய நாராயணா கைபேசி: 94403 42231
சூரியா கலம்காரி ஆடைத் தயாரிப்பு காணொளி:

கட்டுரையாளர்,
இயற்கை ஆர்வலர்
தொடர்புக்கு: shalai_basheer@yahoo.com


கலம்காரிஇயற்கைத் துணிதுணித் தயாரிப்புகாதிகதர்சிந்து சமவெளிஓவியத்தின் நிதானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author