

வி. விக்ரம்குமார்
நிறைய குறுமரங்களும் புதர்களும் கைகோத்து உருவாக்கியிருந்த அடர்ந்த மரக்கவிகை, அந்தப் பகுதிக்கு மெல்லிய இருளை வழங்கியிருந்தது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் உயிர்ப்பெற்ற காவிரி ஆற்றின் வலப்புறத்தில் மணல் மீது தண்ணீர் தவழ்ந்துகொண்டிருந்தது.
இருள் கவிழ்ந்த சூழலில் வானில் இருந்து சிறகுகளுடன் தேவதை தரையிறங்குவதைப் போல, விசிறி வடிவ வாலுடன் அழகிய குருவி ஒன்று புதரிலிருந்து சட்டெனத் தரையிறங்கியது. என் முன் தோன்றிய அந்தப் பறவை, ‘வெண் தொண்டை விசிறிவால் குருவி’ (White throated fantail) என்று புலனுக்கு எட்டியது.
தொடர்ந்த ஆட்டம்
பொம்மலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்ட நடனங்களின் கலை நுணுக்கத்தை ரசித்திருக்கிறேன். முதன் முதலாக ‘குருவியின் விசிறியாட்ட’த்தை இயற்கைச் சூழலில் ரசிக்கும் வாய்ப்பு அன்றைக்குத்தான் கிடைத்தது. பக்தர்கள் காவடி தூக்குவதைப் போல, அந்தச் சிறிய பறவை விசிறிபோல விரிந்த வால் இறகுகளைத் தூக்கிக்கொண்டு இடமும் வலமும் என குதித்துக் குதித்து நடனமாடிக்கொண்டே முன்னே சென்றது.
நடன அசைவுகளுடன் நகர்வது; தட்டுப்படும் பூச்சிகளை பிடிப்பதற்காக சட்டென நிற்பது; தரையில் ஊரும் எறும்புகளை கவ்விப் பிடிப்பது; அக்கம் பக்கம் பார்ப்பது; பின் மீண்டும் தரையோடு குதித்து நகர்வது என அந்தப் பறவையின் வித்தியாசமான செயல்பாடுகளைக் கவனித்துக்கொண்டே மிதவேகத்தில் பின்தொடர்ந்தேன்.
சுண்ணாம்பைக் கொண்டு கோடு கிழித்ததைப் போல வெண்புருவங்கள்; தொண்டைப் பகுதியில் பிறைவட்ட வடிவில் வெள்ளை நிறப் பகுதி; கூர்மையான கருவிழிகள்; உடலின் மேல் பகுதியில் கருமை கலந்த சாம்பல் நிறம்; விசிறி வாலின் முனையில் ஒரு வெண்மை; வெண் தொண்டை விசிறிவால் குருவியின் அடையாளக் குறிப்புகள் இவை.
இன்னொரு விசிறி
தரையிலேயே நீண்ட நேரம் உணவு தேடிய அந்தக் குருவி, பறந்து சென்று அருகிலிருந்த மருதாணிச் செடியில் இளைப்பாறத் தொடங்கியது. மருதாணிச் செடியின் மெல்லிய கிளை அதன் எடையைத் தாங்க முடியாமல், மேலும் கீழும் ஆடிக்கொண்டே இருந்தது. பின் கனத்த தண்டுடைய பெரு மரக்கிளைக்குத் தாவி அந்தப் பறவை ஓய்வெடுத்தது. நகரும்போது தனது வாலை விசிறிபோல விரித்திருந்த அந்தக் குருவி, மரக் கிளைகளில் அமரும்போது வாலைச் சற்றுக் குறுக்கிக்கொண்டதைக் கவனிக்க முடிந்தது.
சில நிமிடங்களில் ‘Spot breasted fantail’ வகையும் அங்கு உலவ ஆரம்பித்தது! இரண்டும் ஒரே இனமாகக் கருதப்பட்டு சமீபத்தில் பிரிக்கப்பட்ட இனங்கள் என்பது கூடுதல் தகவல். வெண் தொண்டை விசிறிவால் குருவியின் அடையாளங்களுடன் கூடுதலாக மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் அதற்குக் காணப்பட்டன.
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com