

கு.வி. கிருஷ்ணமூர்த்தி
ஹைதராபாத் சமஸ்தானத்தின் அடிலாபாத் மாவட்டத்தில் 1940-ம் ஆண்டு ஒரு புரட்சி ஏற்பட்டது. இப்பகுதியின் முக்கிய வேளாண் பழங்குடிகளான கோண்ட், கோலம் ஆகியோருக்குச் சொந்தமான நிலங்களில் தெலுங்கு, மராட்டிய வேளாண் மக்கள் ஊடுருவினார்கள். இந்த ஊடுருவல் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டது. இந்தப் புதிய சாதி மக்களின் தாக்கத்துக்கு இரண்டு பழங்குடிச் சமவெளிக் கிராமங்கள் வீழ்ந்தன.
இதே வேளையில் இடமாற்றப் பயிரிடல் சுழற்சியால் தரிசாக விடப்பட்டிருந்த நிலங்கள், வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக மாற்றப்பட்டு இடமாற்ற வேளாண்மையைத் தடைசெய்தன; டானோரா காட்டுப் பகுதியிலிருந்த கோண்ட், கோலம் பழங்குடி மக்களின் குடிசைகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன. இதனால் கும்ரா பீமு என்ற தலைவரின்கீழ் அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள இந்தப் பழங்குடி மக்கள் தொடர்ந்து முயன்றனர். ஆனால், அதில் தோல்வியடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு
மறுவாழ்வுக்காகக் காட்டில் உறைவிடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற பழங்குடிகளின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், அவர்களாகவே புதிய குடிசைகளை அமைத்துக்கொண்டு இடமாற்ற வேளாண்மைக்காகக் காட்டு நிலங்களைச் சுத்தம் செய்ய முயன்றனர். காட்டில் உருவான இந்தப் புதிய கிராமங்களை அழிக்கவந்த காவல் படையை பீமு தலைமையில் கோண்ட் மக்கள் எதிர்கொண்டனர்.
என்றாலும், காவல்படையைச் சமாளிக்க முடியாமல் பழங்குடிகள் மலைப்பகுதியில் தஞ்சமடைந்தனர். அரசு சரணடையுமாறு கூறியபோது, இழந்த காட்டு நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வலியுறுத்தி சரணடைய மறுத்தனர். இதனால் காவல் படை இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் தலைவன் பீமுவும் பல பழங்குடிகளும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வுகளை ஹைமென்டோர்ஃப் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
மலைரெட்டிகளின் போராட்டம்
பிரிட்டிஷ் அரசு, ஹைதராபாத் சமஸ்தானத்தின் புதிய வனச் சட்டங்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், கோதாவரி பள்ளத்தாக்கைச் சேர்ந்த மலைரெட்டி பழங்குடிகள். இடமாற்ற வேளாண்மையைப் பரவலாகப் பின்பற்றி வந்த அவர்கள், அரசுச் சட்டங்களால் குறுகிய பகுதிகளிலும் குறைந்த தரிசுக் காலச் சுழற்சியுடன் (5 ஆண்டுகளுக்குக் குறைவாக) தொடர்ந்து நிலம் சிதையும்வரை வேளாண்மை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இதனால் வெறுப்படைந்த அந்தப் பழங்குடிகள் கோதாவரி ஆற்றின் மறுபகுதியிலுள்ள பள்ளத்தாக்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இந்தப் பகுதி பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு விரைவாக வனச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மலைரெட்டிகள் மீண்டும் ஆற்றைக் கடந்து முந்தைய காட்டுப்பகுதிகளில் இடமாற்ற வேளாண்மையைத் தொடர்ந்தனர். அதனால் சமஸ்தானப் படையால் துரத்தப்பட்டனர்.
இந்தப் பழங்குடி மக்கள் மாறி மாறித் தம்முடைய இடமாற்ற வேளாண்மையைத் தொடர்ந்ததால், அரசு அதிகாரிகள் இந்தப் போராட்ட முறையைக் கையாள முடியாமல் திகைத்தனர். இதே போராட்ட முறை பழைய மதராஸ் மாகாணத்தின் பல இடங்களில் பின்பற்றப்பட்டது. இறுதியாக மலைரெட்டிகளின் உரிமைப் போராட்டம் பிரிட்டிஷ் அரசால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இப்படியாக பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் வனச் சட்டங்களாலும், அந்த அரசுக்குக் கீழ்படிந்த பல இந்திய அரசர்களாலும் ஜூம் என்ற மிகப் பழமையான இடமாற்ற வேளாண்மை இந்தியாவில் அழிக்கப்பட்டுவிட்டது. டாங்கியா (taungya) என்று பெயரிடப்பட்ட ஜூம் போன்ற மற்றொரு வேளாண் முறை இன்று இந்தியாவின் பல மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.
இதுவும் ஒரு சில மலைவாழ் பழங்குடிகளால் பின்பற்றப்பட்டாலும் ஜூம் வேளாண் முறைக்கும் இதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. இதில் பயிர்களுடன் காட்டு மரங்களும் வளர்க்கப்படுகின்றன; பெரும்பாலும் ஒரே காட்டுப்பகுதியில் தொடர்ந்து வேளாண்மை நடைபெறுகிறது. இடம் மாற்றப்படுவதில்லை.
(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in