

சு. அருண் பிரசாத்
அமேசான் காடுகளில் சமீபத்தில் மனிதர்கள் மூட்டிய காட்டுத் தீ, மரங்கள், செடி கொடிகள், எண்ணற்ற உயிரினங்கள் என ஒரு உயிரினப் பன்மை தொகுப்பையே முற்றாக அழித்திருக்கிறது. அதே போன்றதொரு நிகழ்வு இந்தியாவிலும் கடந்த வாரம் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் உள்ள ‘சஞ்சய் காந்தி தேசிய பூங்கா'வை ஒட்டி ‘மிதி' ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கிறது ‘ஆரே மில்க் காலனி' காட்டுப் பகுதி.
ஆரேயில் உள்ள மரங்கள், புல்வெளிகள், புதர்கள், சதுப்புநிலங்கள் போன்றவை அடங்கிய சூழல் தொகுதி சிறுத்தை, வலசைப் பறவைகள், பாம்பு, தேள், சிலந்தி, வண்ணத்துப்பூச்சி உள்பட இன்னும் பல்வேறு தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வாழிடமாக உயிரினப் பன்மையுடன் செழித்திருந்தது. பல புதிய வகைச் சிலந்திகளும் தேள்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆரே காடு, ‘மும்பையின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது! இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலுள்ள பகுதியில்தான் 2,800 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.
எதற்காக? மும்பை மெட்ரோ ரயில் நிலைத்தின் கார் நிறுத்துமிடத்துக்காக! உலகில் மிகவும் நெரிசல்மிக்க உள்ளூர் ரயில் போக்குவரத்தில் மும்பை நகரம் முன்னணியில் இருக்கிறது. இதை சீரமைப்பதற்கு மும்பையின் வட பகுதியில் இருந்து தெற்கு நோக்கி மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ரூ. 900 கோடி மதிப்பீட்டில் உருவாகும் இந்த கார் நிறுத்துமிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 7 அன்று அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த காடழிப்பு நடந்திருக்கிறது.
உதவாத உத்தரவு
ஆரே காட்டுப் பகுதியில் மரம் வெட்டுவதற்கு தடை கோரிய வழக்குகளை பம்பாய் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று மரம் வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டபோது, 95 சதவீத மரங்கள் அதற்கு முன்பாகவே வெட்டப்பட்டிருந்தன. அக்டோபர் 21 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அன்றைக்கே நடக்கிறது. வார்லி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 3,500 குடும்பங்கள் ஆரே காட்டுப் பகுதியிலுள்ள 7 குக்கிராமங்களில் வசித்து வந்தனர். அவர்கள் இப்போது இடப்பெயர்வுக்கு ஆளாக நேரிடும்.
சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதியான ஆரே காலனி ‘வகைப்படுத்தப்படாத காடு’ என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. காடு என்று ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ‘வகைப்படுத்தப்படாத காடுகள்’ அரசுகளால் பொதுவாகப் பாதுகாக்கப்படுவதில்லை. வளர்ச்சி என்ற சொல் தன்னளவில் நேர்மறையானப் பொருளைக் கொண்டிருந்தாலும், அதன் பெயரால் நிகழும் மனிதர்களின் தொடர் செயல்பாடுகள், இயற்கையைக் கொடூரமாக அழிக்கும் வேலையை மட்டுமே செய்கின்றன; ஆரேயும் இதிலிருந்து தப்பவில்லை.