ஏரின்றி அமையாது உலகு: மண்ணையும் மக்களையும் அறியாத குளிர் அறைக் கோமான்கள்

ஏரின்றி அமையாது உலகு: மண்ணையும் மக்களையும் அறியாத குளிர் அறைக் கோமான்கள்
Updated on
2 min read

இந்தியாவின் இறையாண்மை வேளாண்மையில் உள்ளது. வேளாண்மையின் இறையாண்மை விதைகளில் உள்ளது, விதைகளின் இறையாண்மை உழவர்களின் கைகளில் இருக்க வேண்டும்.

ஆனால், அந்த விதைகளைக் கைப் பற்றும் வேட்டையைப் பன்னாட்டு நிறுவனங்கள் விரைவுபடுத்துகின்றன. நமது நாட்டின் பல்லாயிரமாண்டு வள ஆதாரமான விதைகளை மரபீனி மாற்றம் மூலம் கொள்ளையிட வருகின்றன சில நிறுவனங்கள். அரசின் சில ஆதரவு அமைப்புகளேகூட மரபீனி மாற்ற விதைகளை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தாலும், சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ‘மரபீனி மாற்ற விதைகள் வேண்டும்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். அதற்கு ஒத்தூதும் வகையில் வேளாண்மை அமைச்சர் ராதா மோகன் சிங் ‘இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மரபீனி மாற்றப் பயிர்கள் முதன்மையானவை' என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்.

முன்னுக்குப் பின் முரண்

அது மட்டுமல்ல மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பி.டி. பருத்தி விளைச்சலால் உழவர்களின் வருமானம் கட்டுக் கடங்காது உயர்ந்துவிட்டதாம். அட ஆண்டவனே, இந்தியாவில் நடக்கும் உழவர்களின் தற்கொலையில் மகாராஷ்டிரம் தானேய்யா முதலிடத்தில் இருக்கிறது. இந்த வகையில் முன்னாள் அமைச்சர் சரத் பவார்கூடத் தேவலை போல் தெரிகிறதே.

ஆக, மத்திய அமைச்சர்களின் மேதாவிலாசம் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த விதை உரிமையையும் ஒருசில நிறுவனங்களின் கைகளில் கொடுத்துவிட்டு, நமது அரசுத் துறைகள் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டார்களோ, என்னவோ?

என்ன வழி?

பருத்தி உழவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் பருத்தி விலை வீழ்ச்சி என்பதோடு, அதை வாங்குவதற்கு யாருமில்லை என்பதும் முக்கியக் காரணம். பருத்தியை அப்படியே இருப்பு வைக்க முடியாது, அதைக் கொட்டை நீக்கினால் இருப்பு வைக்கலாம். இதற்குப் பருத்தியிலிருந்து கொட்டையைப் பிரிக்கும் ஜின்னிங் ஆலைகளை ஆங்காங்கே நிறுவினால் போதும். இதற்கான முதலீடு மிகமிகக் குறைவு. சில ஆயிரம் ரூபாயே போதும். ஊருக்கு ஒன்றாக இதை நிறுவினால், உழவர் தற்கொலைகளை ஓரளவு தடுத்திருக்க முடியும்.

அதேபோல, பால் என்ற அருமையான பொருள் இன்றைக்கு வீதிகளில் கொட்டப்படுகிறது. இதற்கான காரணம் உற்பத்திப் பெருக்கம் மட்டுமல்ல, அதை முறையாகச் சந்தைப்படுத்தும் திறன் இல்லை என்பதே. இந்தியாவில் குழந்தைகளுக்கான சத்துப் பற்றாக் குறை ஆப்பிரிக்க நாடுகளைவிட அதிகம். அப்படியானால் இந்த அருமையான, சத்துமிக்க பால் நமது குழந்தைகளிடம் அல்லவா கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இதற்கான திட்டம் ஏதாவது இருக்கிறதா? பரவல்மயப்படுத்தப்பட்ட ஒரு விநியோக முறை, இந்தச் சிக்கலை மிக எளிதாகத் தீர்த்துவிடும்.

கிராமங்கள் தெரியாது

இந்தத் திசைவழியும் தீர்மானிப்பும் ஏன் நமது குளிரறைக் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரவில்லை? ஏனென்றால் இவர்களில் பலர் கிராமங்களை மறந்தும்கூட எட்டிப்பார்க்காதவர்கள். அரசு அலுவலர்கள் தரும் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு, மேசை முன் உட்கார்ந்து மட்டுமே தீர்மானிக் கின்றனர். பெரிய பதவியில் உள்ள ‘அதிகாரிகள்' முன்பதிவு செய்யாத ரயில் பயணங்களிலோ, பேருந்துகளிலோ பயணித்ததே கிடையாது. இவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில், திறப்பு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளின் நடனங்கள் போன்ற கேளிக்கை நிகழ்வுகள் தவிர, உண்மையைக் கண்டறியும் சூழல் இருப்பதே கிடையாது. எனவே, இவர்களுடைய திட்டங்களும் அப்படித்தான் இருக்கும்.

விரல் விட்டு எண்ணக்கூடிய துடிப்புள்ள சில மாவட்ட ஆட்சியர்கள், மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருந்ததால் பல நல்ல காரியங்களை ஆற்ற முடிந்ததைச் சமீபக் காலத்தில் நேரடியாகப் பார்த்திருக்கிறோம். எனவே, மக்களின் உண்மை நிலையைக் கண்டறிய, பழைய பிரித்தானிய ஆட்சி அணுகுமுறை பயனற்றது.

மாற்றம் வேண்டும்

நம்முடைய மன்னர்களைப் பற்றி படிக்கும்போதுகூட, மாறுவேடத்தில் சென்று மக்களின் கருத்தை அறிந்தவர்களைக் காண முடிகிறது. எனவே, ஓராண்டு போனாலும், வரும் ஆண்டுகளில் உண்மை நிலையைக் கண்டறிந்து நாட்டின் அடிப்படை ஆதாரமான வேளாண்மையைக் காக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு முனைய வேண்டும். மோடிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் உழவர்கள். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் சிறுபான்மையினர். அவர் களுடைய மொழியிலேயே சொல்ல வேண்டு மானால், ‘பெரும்பான்மையினர் வாழ இனிமேலாவது வழிகாட்டுங்கள்'.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர்
மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in