Published : 05 Oct 2019 10:55 AM
Last Updated : 05 Oct 2019 10:55 AM

விலங்குகளின் முதல் எதிரி யார்?

சுந்தர்

தேசியக் காட்டுயிர் வாரம்: அக்டோபர் 2 – 8

இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரை ‘தேசியக் காட்டுயிர் பாதுகாப்பு வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. காட்டுயிர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காட்டுயிர்களின் முக்கியத்துவத்தை மக்களிடம் உணர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், காட்டுயிர்களைப் பாதுகாக்கக் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்தல், காட்டுயிர் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் கலந்தாலோசித்து அதற்குரிய தீர்வுகளை எட்டுதல் ஆகியவை காட்டுயிர் வாரத்தின் முதன்மை நோக்கங்கள்.

இந்தியா உட்பட உலகமெங்கும் ஆண்டு முழுவதும் சூழலியல், காட்டுயிர் பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன; நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. என்றாலும், மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற காடுகள் நிர்மூலமாக்கப்படுகின்றன. சூழலியல் சங்கிலியின் முக்கியக் கண்ணியாக இருக்கும் விலங்குகளின் வாழ்விடத் தகர்வால் மனிதர்களை அவை அடிக்கடி எதிர்கொள்ள நேரிடுகிறது.

தங்கள் வாழ்வாதரத்துக்கான போராட்டத்தில் பலியாகும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அந்த இனம் அழிய நேர்கிறது; இதன் விளைவாகக் காட்டுயிர்ச் சமநிலை சீர்குலைந்து, சூழலியலில் கடுமையான தாக்கம் ஏற்படுகிறது. இந்தியாவில் யானை, புலி, சிறுத்தை, கரடி ஆகிய விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான எதிர்கொள்ளல் பற்றிய தொகுப்பு:

யானைகள்

60 சதவீத ஆசிய யானைகள் இந்தியாவில்தான் வாழ்கின்றன. கூட்டமாக வாழும் இயல்புடைய யானைகள், உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் காடு முழுக்க அலைந்து ஒரு நாளின் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன.
இந்தியாவில் சமூக, மத, பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் யானை, 2010-ல் நாட்டின் மரபு விலங்காக அறிவிக்கப்பட்டது. கங்கை நதியில் இருந்து யானைகள் பாதுகாப்புவரை ‘மகத்துவமானது’ என்று அடையாளப் படுத்தப்பட்டு, இந்தியாவில் புனிதப்படுத்தப்படும் ஒவ்வொன்றுமே மிக மோசமான முறையில்தான் இயல்பில் நடத்தப்படுகின்றன.

மக்கள்தொகைப் பெருக்கம், மோசமான நகர்மயமாக்கம், வேளாண்மை விரிவாக்கம், காடழிப்பு, காடுகளுக்குள் சாலைகள், ரயில் பாதைகள் அமைத்தல், உயர் மின்னழுத்தக் கோபுரங்கள் நிறுவப்படுதல் ஆகியவை காடுகளில் உள்ள யானைகள், இன்னபிற விலங்குகளின் வாழிடத் தகர்வுக்கு முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றன.
இந்தியாவில் மொத்தம் 27,312 யானைகள் இருப்பதாக 2017-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்திருக்கலாமே அன்றி, அதிகரித்திருக்க வாய்ப்பில்லை. 2010 எண்ணிக்கையை ஒப்பிடும்போது தற்போது 10 சதவீதம் குறைந்திருப்பது யானைகளின் பாதுகாப்பில் ஒரு எச்சரிக்கைப் புள்ளி. யானைகள் ஒரு குட்டியை ஈனுவதற்கு 22 மாதங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஆகவே, இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க நீண்டகாலம் ஆகும்.

கடந்த வாரம் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் ரயில் மோதி யானை ஒன்று மிக மோசமாகக் காயமடைந்து சிறிது நேரத்தில் இறந்துபோனது. 2015-ல் இருந்து 2018 வரையிலான காலத்தில் 373 யானைகள் பலியாகி இருக்கின்றன; சென்ற ஆண்டில் மட்டும் 75 யானைகள் மேற்கண்ட பல்வேறு காரணங்களால் பலியாகி இருக்கின்றன. 101 யானை வழித்தடங்களில் மூன்றில் இரண்டு பங்கு வழித்தடங்களில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் கடந்துசெல்வதாகப் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.

புலிகள்

வங்கப் புலிகளின் இருப்பிடமான மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள், புலிகளின் மிகப் பெரிய ஒற்றை வாழிடமாகத் திகழ்கிறது. மனித - விலங்கு எதிர்கொள்ளலின் உச்சமாகக் கருதப்படும் புலி எதிர்கொள்ளல் இங்குதான் அதிகமாக நிகழ்கிறது. நவீன காலத்துக்கு முன்புவரை ஆண்டுக்கு ஐம்பது, அறுபது பேர் இந்த எதிர்கொள்ளல் நிகழ்வதால் பலியாகிக் கொண்டிருந்தனர்.

சிறுத்தைகள்

மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், அசாம், இமாச்சலப் பிரதேசத்தின் பழங்குடி பகுதிகளைத் தவிர்த்த இடங்கள் சிறுத்தைத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழும் பகுதிகள். இந்தியாவில் சுமார் 10,000 சிறுத்தைகள் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 சிறுத்தைகள்வரை மனிதச் செயல்பாடுகளால் கொல்லப்படுகின்றன.

கரடிகள்

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசாவில் அதிக அளவில் கரடி எதிர்கொள்ளல் நிகழ்கிறது. 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 87 கரடிகள் இறந்திருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் விஷம் வைத்தும், மின்சாரம் செலுத்தியும் பத்துக் கரடிகள் கொல்லப்பட்டிருக்கின்றன; காரணம் தெரியாமலும், மற்ற விபத்துகளாலும், சாலை அல்லது ரயில் விபத்துகளாலும் 22, 20, 11 கரடிகள் முறையே இறந்திருக்கின்றன; இயற்கையாக இறந்துபோன கரடிகளின் எண்ணிக்கை 23.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x