Published : 28 Sep 2019 10:43 AM
Last Updated : 28 Sep 2019 10:43 AM

பசுமை எனது வாழ்வுரிமை 02: பழங்குடிகளுக்கு பிரிட்டிஷார் விதித்த தடை

கு.வி. கிருஷ்ணமூர்த்தி

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைகூட இந்தியாவில் ஒரு டஜன் பழங்குடி சமூகங்கள் வேட்டையாடுதல் - உணவு சேகரித்தல் முறையையே முற்றிலும் பின்பற்றி வந்தன. இந்தச் சமூகங்கள் நாட்டின் முழு நீள – அகலத்துக்கும் பரவி காணப்பட்டன. இவர்களுக்குப் பயிர் வளர்ப்பும் வேளாண்மையும் அறவே தெரியாது.

அந்த வகைப் பழங்குடிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த பின்னணியில், பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு காடுகளைத் தன்னுடைய உடைமையாக்கிக்கொண்டு கட்டுப்பாடுகளைப் புகுத்தியது. இதன் காரணமாக இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. உணவுக்காகக் காட்டில் வேட்டையாடுவதைச் சட்டங்கள் மூலம் பிரிட்டிஷ் அரசு முற்றிலும் தடை செய்தது.

பழங்குடி எதிர்ப்பு

வேட்டையாடுதல் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டபோதும், அதுவரை அவர்கள் அனுபவித்துவந்த பொதுச் சொத்தான காடுகளின் மீதான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்ட போதும் ஆந்திரத்தைச் சேர்ந்த செஞ்சு பழங்குடி மக்கள் பெரும் கொதிப்படைந்தனர். அரசு அதிகாரிகளுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். என்றாலும், எண்ணிக்கையில் அதிகமில்லாததால் அவர்களுடைய போராட்டங்களை பிரிட்டிஷ் அரசு எளிதில் அடக்கியது. வலுக்கட்டாயமாக வேளாண்மையில் ஈடுபடவும் கூலிவேலையாக செய்யவும் அவர்கள் தூண்டப்பட்டனர். கர்னூல் பகுதி செஞ்சுக்கள் சைலம் கோவில் பகுதிகளில் கொள்ளைக்காரர்களாக மாறினார்கள்.

இதே போன்ற நிலைமை தென்னிந்தியக் காடர் பழங்குடி மக்களுக்கும் ஏற்பட்டது. அரசுக்கும் வனச்சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து இவர்களும் போராடினார்கள். என்றாலும், குறைந்த எண்ணிக்கையின் காரணமாக வன நிர்வாகத்தின் ‘பாட்டாளி வர்க்க அடிமைகளாக' அவர்கள் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

திசை திருப்பல்

சோட்டா நாக்பூர் (இன்றைய ஜார்கண்ட்) பகுதியிலிருந்த பிரோர் பழங்குடி மக்களும் பிரிட்டிஷ் வனச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை மேற்கொண்டு ஓய்ந்து போனார்கள். 1911-ல் 2,340 ஆக இருந்த இவர்களுடைய எண்ணிக்கை, 1921-ல் 1,610 ஆகவும் அடுத்த பத்தாண்டில் ஏறத்தாழ 750 ஆகவும் குறைந்தது. எஞ்சியவர்கள் கூலித் தொழிலுக்கும் வேளாண்மைக்கும் சென்றனர்.

மத்திய இந்திய வேட்டைப் பழங்குடி மக்களான பைகாக்களின் மக்கள்தொகையும் அதிகமாகக் குறைந்தது. 1930-களில் இந்தியப் பழங்குடி மக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொண்ட அறிஞர் வெரியர் எல்வின், பைகா மக்களின் போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒரு பைகா பழங்குடி அவரிடம் கூறிய தகவல்: “காலனி ஆதிக்க அரசு நூற்றுக்கணக்கான சட்டங்களைப் புகுத்தினாலும் நாங்கள் வேட்டையாடுதலைத் தொடர்ந்து மேற்கொண்டுதான் இருந்தோம். எங்களில் ஒருவர் வன அதிகாரியிடம் பேச்சுக் கொடுத்து திசை திருப்பிவிடும்போது, எங்களுடைய இதர மக்கள் மான்களை வேட்டையாடச் சென்று விடுவார்கள். இதைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.”

பிரிட்டிஷ்காரர்களின் முரண்பாடு

அடிப்படை உணவுக்காகச் சூழலியலும் அதைச் சேர்ந்த விலங்குகளும் பேரளவில் பாதிக்கப்படாத வகையில், காலம் காலமாக, சுயகட்டுப்பாட்டுடன் பழங்குடி மக்கள் வேட்டையாடி வாழ்ந்து வந்தார்கள். அதைச் சட்டங்கள் மூலம் தடைசெய்துவிட்டு, ஆங்கிலேயர்களும் அவர்களுக்கு அடிபணிந்த இந்திய மன்னர்கள்- மக்களும் கேளிக்கை, விளையாட்டு என்ற அடையாளங்களுடன் காட்டில் விலங்குகளை வேட்டையாடிக் கொல்லத் தடையின்றி அனுமதிக்கப்பட்டனர். இதற்கு ‘ஷிகார்’ (Shikar) என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

ஒரு பிரிட்டிஷ்காரர் 1860 - 1870-க்குள் 400 யானைகளை ‘வீரத்தின் அடையாளமாக' (?) கொன்றிருக்கிறார். நாட்டில் அடுத்தடுத்து பதவிவகித்த வைஸ்ராய்கள் அடிக்கடி வேட்டையாட அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு நிகழ்வின்போது ஒரே நாளில் ‘உலக சாதனையை' முறியடிப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான பறவைகள் சுடப்பட்டன. குவாலியர் மகாராஜா 1900-1910 காலகட்டத்தில் மட்டும் 700 புலிகளுக்கு மேல் சுட்டுக் கொன்றார் என்று ஸ்காட் பென்னட், ஜே.ஜி. எலியட் போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பிரிட்டிஷ் அரசால் வேட்டையாடி வாழ்வது தடை செய்யப்பட்ட பழங்குடி ஆண்கள், பொழுதுபோக்கு வேட்டையில் ஆங்கிலேயர்களுக்கு உதவ பெரிதும் கட்டாயப்படுத்தப்பட்டதுதான்!

(தொடரும்) கட்டுரையாளர்,
ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x