

பருவநிலை நிதி: இந்தியக் கோரிக்கை எடுபடுமா?
நியூயார்க்கில் செப்டம்பர் 23 அன்று நடைபெறும் ஐ.நா. பருவநிலை மாநாட்டுக்கு உலக நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கும்வேளையில், இந்திய நிதி அமைச்சகம் முக்கியச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றத்துக்கு வரலாற்றுரீதியில் காரணமாக உள்ள வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். கரியமில வாயு வெளியேற்றத்தில் உலகளவில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கும் வளர்ந்து வரும் மற்ற நாடுகளுக்கும் 2020-ல் சுமார் 10,000 கோடி டாலர் நிதியுதவி அளிக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொண்டு வளர இது உதவும் என்று அந்தக் குறிப்பு கூறுகிறது.
சுட்டெரிக்கும் பூமி
புவியின் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. வெப்பநிலை கணக்கெடுப்புத் தொடங்கிய பிறகு 2016-ல்தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டிருந்தது. அதைவிடவும் அதிகமாக இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை காலத்தில் வடக்கு அரைக்கோளத்தின் சராசரி வெப்பநிலை 1.13 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. 20-ம் நூற்றாண்டு சராசரி, 2015, 2017-ம் ஆண்டுகளின் வெப்பநிலை ஆகிய எல்லாவற்றையும்விட இது அதிகம்.
இதைப் போலவே, பூமியின் சராசரி வெப்பநிலையும் மேற்பரப்பு வெப்பநிலையும் 1.23 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. பொதுவாக அதீதத் தட்பவெப்ப நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கும் எல் நினோ
விளைவு, வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்ட 2016, 2019-ம் ஆண்டுகளில் ஏற்படாததுதான் இதில் புரிபடாத ஆச்சரியம்.