

- விபின்
இந்தியா 31 சதவீதப் புல்வெளிப் பகுதிகளை இழந்திருப்பதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. பாலைவனமாவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டுக்கான அறிக்கையில் இந்திய அரசு இதைத் தெரிவித்துள்ளது. 56 லட்சம் ஹெக்டேர் புல்வெளி நிலம் குறைந்துள்ளது. மொத்தப் புல்வெளிப் பரப்பில் 1.8 கோடி ஹெக்டேரில் இருந்து 1.23 கோடி ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
ராஜஸ்தானில் ஆரவல்லி புல்வெளிப் பகுதிதான் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள புல்வெளிப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
புல்வெளிப் பகுதிகள் குறைந்துவருவதற்கு அதிகமான கால்நடை மேய்ச்சல், விழிப்புணர்வு அற்ற தன்மை, புல்வெளிப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவது, மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற பல காரணங்களை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பொதுநிலம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. 2005-க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் 9.05 கோடி ஹெக்டேராக இருந்த பொதுநிலம், 7.3 கோடி ஹெக்டேராகக் குறைந்துள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது.அதேவேளையில் வேளாண் நிலம் 11.3 கோடி ஹெக்டேரில் இருந்து 13.4 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.