

தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் மலர்களின் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கேராளாவில் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இந்தப் பண்டிகையின்போது வண்ண மலர்களால் போடப்படும் அத்தப்பூ கோலத்துக்குத் தமிழகத்தில் இருந்து டன் கணக்கில் மலர்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த மழையால் விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பண்டிகை வேளையில் வழக்கமான கொண்டாட்டங்கள் இல்லாததால் மலர்களின் விற்பனை சரிந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெய்த மழை ஏற்படுத்திய சேதத்தைத் தொடர்ந்து ஓணம் கொண்டாட்டத்தைக் கேரள அரசே ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரிசி ஏற்றுமதியில் சரிவு
நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரிசி ஏற்றுமதி 37சதவீதம் சரிந்துள்ளது. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த வேளாண் பருவத்தில் அரிசி உற்பத்தி 11.56 கோடி டன்னை எட்டி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. முந்தைய பருவத்தில் (2017 ஜூலை - 2018 ஜூன்) அது 11.29 கோடி டன்னாக இருந்தது. நடப்பாண்டில் ஜூலை வரையிலான 4 மாதங்களில் 31 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இது 26.5 சதவீதம் குறைவு. அதேபோல் சாதாரண அரிசி ஏற்றுமதி 37சதவீதம் சரிந்து 17 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.
சோயாபீன்ஸ் உற்பத்தி அதிகரிப்பு
ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த பருவத்தில் சோயாபீன்ஸ் 1.38 கோடி டன் உற்பத்தியாகி உள்ளதாக முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கடந்த வேளாண் பருவத்தில்
(2018 ஜூலை- 2019 ஜூன்) 1.38 கோடி டன் சோயா பீன்ஸ் உற்பத்தியாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது 25 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் சோயா உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம் வகிக்கிறது.
தொகுப்பு:சிவா