செய்திப்பிரிவு

Published : 07 Sep 2019 11:05 am

Updated : : 07 Sep 2019 11:05 am

 

வானகமே இளவெயிலே மரச்செறிவே 34: காட்டுயிருக்கு புதிய அச்சுறுத்தல்

theodre-baskaran-series
காட்டுக்கழுதை குட்டி மீது கண் வைக்கும் நாய்கள். படம்: கல்யாண் வர்மா

சில நாட்களுக்கு முன் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்தபோது கவனித்த ஒரு காட்சி என்னை மிகவும் பாதித்தது. இது வலசை பருவம் என்றாலும் ஏரிகளிலும் வானிலும் வெகு சில பறவைகளே கண்ணில் பட்டன. எழுபதுகளில் இதே ஏரிகளில் நிறைய நீர்ப்பறவைகள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். கடந்த அரை நூற்றாண்டில் 60% காட்டுயிர் அழிக்கப்பட்டுவிட்டது என்ற கணிப்பு அண்மையில் வெளியானது. காட்டுயிர் சீரழிவுக்கு வாழிட அழிப்பு எனப் பல காரணங்கள் உண்டு. அதில் இப்போது புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது, அது தெரு நாய்கள்.

நம் நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணிப்பின்படி 6 கோடி நாய்கள் உள்ளன. இவை எதைத் தின்று வாழ்கின்றன? குப்பைக் கூளத்தையும் கழிவையும் உண்டு நடமாடும் நோய்க்கிடங்குகளாக இவை திரிகின்றன. பிணந்தின்னிக்கழுகுகள் அற்றுப்போய்விட்ட நிலையில் தெருநாய்கள் ஆடு, மாடுகளின் சடலங்களைத் தின்கின்றன. அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம்.

ஆய்வு சுட்டிக்காட்டும் உண்மை

அத்துடன் காட்டுயிர்களுக்கு தெரு நாய்கள் பெரும் ஆபத்தாக உருவாகியிருக்கின்றன என்று அண்மை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2016-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பாய்வு இரு விதமான ஆபத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. பல சரணாலயங்களின் உள்ளேயும் விளிம்புப் பகுதிகளிலும் நாய்கள் திரிவதைப் பார்க்கலாம்.
முதலாவது நாய்களில் காட்டுயிர்களுக்கு தொற்றக்கூடிய நோய்கள், வேங்கைப் புலி போன்ற விலங்குகளை அழித்துவிடும். தன்சானியாவில் ஆயிரக்கணக்கான சிங்கங்கள் நாயின் நொடிப்பு நோய் (Canine distemper) எனும் நோய்க்கு பலியாகின. நம் நாட்டிலும் சில வேங்கைகள் இந்நோய்க்கு பலியாகின என்ற தகவல் கிடைத்துள்ளது.

நாய்களிடமிருந்து ரேபிஸ் எனும் வெறிநாய்க்கடி நோய் காட்டுயிர்களுக்குத் தொற்றுவது நம் நாட்டில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் ஷோலாபூர் அருகே சிலரை ஓநாய்கள் தாக்கின. மருத்துவச் சோதனையில் ஒரு ஓநாய்க்கு ரேபிஸ் நோய் இருந்தது தெரிய வந்தது.

இரண்டாவது காட்டுயிர்களை, அதிலும் சிற்றுயிர்களை நாய்கள் இரையாகக் கொள்வது. இப்படி கொல்லப்படுவதில் பாலைவன நரி போன்ற அரிய உயிரினங்களும் அடங்கும். அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் சில உயிரினங்களும் நாய்களுக்குப் பலியாகின்றன.


ராஜஸ்தானில் கானமயில்களை நாய்கள் விரட்டி கொல்வது பதிவாகியுள்ளது. அஸ்ஸாமில் தங்க மந்திகள் (Golden langur) நாய்களுக்கு பலியாகின்றன. கர்நாடகத்திலுள்ள மகடிப் பறவை சரணாலயத்துக்குக் குளிர்காலத்தில் வலசை வரும் பட்டைத்தலை வாத்துக்களை நாய்கள் கொன்று தின்கின்றன. சிறிது தூரம் ஓடித்தான் இந்த வாத்தால் பறக்க முடியும். இதனால் நாய்கள் எளிதாக அவற்றைப் பிடித்துக் கொல்கின்றன.

வெளிமான்கள் பலி

சென்னையிலுள்ள கிண்டி தேசியப் பூங்காவிலுள்ள வெளிமான்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து ஏறக்குறைய அற்றுப்போயிருப்பதற்கு தெருநாய்களே காரணம். அங்கு நடமாடும் நாய்கள், மான்குட்டிகளை விரட்டி எளிதாக இரையாக்கிக் கொள்கின்றன. வெளிமான்கள் அரிதான இனம் என்றும் இங்குள்ள புதர்க்காடுகள் அவற்றின் வாழிடம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதேபோல் ஒடிஷாவிலுள்ள வெட்னாய் என்ற சரணாலயத்திலும் வெளிமான்களின் குட்டிகள் நாய்களுக்கு இரையாகின்றன என்று காட்டுயிரியலாளர் பிதம் சட்டோபாத்யாய ‘கன்சர்வேஷன் இந்தியா' எனும் இணைய இதழில் பதிவுசெய்திருக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த கள ஆய்வாளர்களான சுமன் ஜமானி, அர்ஜுன் வஸ்தா முதுமலையில் ஐந்து நாய்கள் கூட்டாக புள்ளி மான் ஒன்றைக் கொன்று தின்றதைப் பதிவுசெய்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளனர். இது போன்று வேறு பல இடங்களிலும் இப்படி நடக்கிறது என்கிறார்கள்.

தேசிய காட்டுயிர் வாரியத்தின் (National Board of Wildlife) உறுப்பினர் எச். எஸ். சிங், குஜராத்திலுள்ள வெளிமான்களுக்கு தெருநாய்களால் பெரும் ஆபத்து என்கிறார். மெசானா மாவட்டத்தில் வெளிமான்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திலிருந்து ஆயிரத்துக்குக் குறைந்ததற்கு தெருநாய்கள்தான் காரணம் என்கிறார். அதேபோல் கட்ச் பகுதியில் உள்ள காட்டுக்கழுதை சரணாலயத்தில், காட்டுகழுதையின் குட்டிகளை நாய்கள் கொல்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமனாகும் தெரு நாய்

நம் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் குறிப்பாக ஒடிஷா, ஆந்திரா, தமிழ்நாடு பகுதிகளில் அரிதாகிவரும் கடல் ஆமைகள் குளிர்காலத்தில் மணலில் குழி பறித்து முட்டையிட ஆயிரக்கணக்கில் வருகின்றன. இங்கு சுற்றித் திரியும் நாய்கள், மோப்பத்தால் அந்தக் கூடுகளைக் கண்டறிந்து முட்டைகளை தோண்டியெடுத்துத் தின்றுவிடுகின்றன. அதனால் இந்த ஆமைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. அதிலும் அந்தமான் தீவுகளுக்கு இனப்பெருக்கத்துக்கு வரும் தோணி ஆமைகள் (Leatherback turtle) இடும் முட்டைகளில் 90 சதவீதம் நாய்களால் தின்னப்படுகின்றன என்கிறார்
எச்.எஸ். சிங்.

இதனால் கடலாமைகளிலேயே உருவில் பெரிய இந்த உயிரினத்தின் எதிர்காலம் கேள்விக்குறியதாக இருக்கிறது என்கிறார்கள் காட்டுயிர் ஆய்வாளர்கள். இந்த ஆமைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற கார்த்திக் ஷங்கர் எழுதிய ‘From Soup to Superstar' (2015) என்ற நூலில், இந்தப் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக மனிதனின் உற்ற தோழன், காட்டுயிருக்கு பல இடங்களில் எமனாக மாறிவிட்டது. நம் நாட்டில் 80 வகை உயிரினங்களுக்கு நாய்கள் ஆபத்தாக உள்ளன. இவற்றில் 31 உயிரினங்கள் அரியவகை மட்டுமல்ல எண்ணிக்கையிலும் குறைந்தவை.

பெரிதாகிக்கொண்டே போகும் இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி? உலகிலேயே அதிகமான தெருநாய்கள் உள்ள நாடு இந்தியா. இந்த எண்ணிக்கையில் எல்லா நாடுகளையும் மிஞ்சுவது மட்டுமல்ல… மனிதர்-நாய் என்ற விகிதாச்சாரத்திலும் இந்தியா முன்னணியில் உள்ளது. விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,

நம் நாட்டில் முப்பத்தி ஐந்து மனிதர்களுக்கு ஒரு நாய் யாருக்கும் சொந்தமற்றும் தன்னிச்சையாகவும் உலவிக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு மோசமான பிரச்சினை இருக்கிறது என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். போகாத ஊருக்கு வழிகாட்டும் நாய் கருத்தடை (Animal birth control) போன்ற திட்டங்களால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதையும் புரிந்துகொண்டு, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து அறிவியல்ரீதியில் தீர்வு காண முயல வேண்டும்.

- சு. தியடோர் பாஸ்கரன் , சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

வானகமே இளவெயிலே மரச்செறிவே
Popular Articles

You May Like

More From This Category

More From this Author