தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
Updated on
1 min read

நடப்பாண்டில் முதல் ஏழு மாதங்களுக்கான இந்தியத் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தமாக 64.98 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த முறை உற்பத்தி அதிகரித்திருக்கிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 8.3 சதவீதம் உற்பத்தி அதிகரித்து 17.61 கோடி கிலோ சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனத் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சியில் நீர் வளத் திட்டம்

தண்ணீரைச் சேமிக்கவும் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் மத்திய அரசு ‘நீர் வளத் திட்டம்’ (ஜல் சக்தி அபியான்) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த நிகழ்வை வேளாண் துறையும் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து நடத்தின. சீரான தண்ணீர் பயன்பாட்டின் மூலம் அதிக மகசூலை பெற மக்கள், உழவர்களிடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நுண்ணீர்ப் பாசனம், சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம் ஆகிய திட்டங்களின் மூலம் அதிக மகசூல் பெறும் முறையைப் பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

கோவையில் விதை விநாயகர்

நம் நாட்டு வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் நீர்நிலைகளை மையமாக கொண்டே நடைபெற்றுவருகின்றன. விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சிலைகளை வடிப்பதற்குப் பயன்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பெயின்ட்களில் உள்ள வேதிப்பொருட்களால் நீர்நிலைகள் கடுமையாக மாசுபடும்.

அந்த மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக கோவையில் விதையால் செய்யப்பட்ட விநாயகர் சிலை அறிமுகப்படுத்தப்பட்டது. தொகுப்பு: சிவா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in