விதைகள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்
பெ.பாரதி
இன்றைய காலகட்டத்தில் விதைகள் நிறுவனமயமாகிவிட்டன. அப்படியாக வாங்கப்படும் விதைகள் எளிதில் பூச்சிகளால் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதனால் உழவுத் தொழிலின் செலவினம் கூடுவது மட்டுமல்லாமல் உற்பத்திசெய்யப்படும் உணவின் ஆரோக்கியமும் குறைகிறது.
இந்தப் பின்னணியில் இன்றைக்கு மரபு விதைகள் அத்தியாவசியமானவை ஆகின்றன. இதை வலியுறுத்தும் வகையில் அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 18-ம் தேதி ‘தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்க’த்தின் சார்பில் மரபு விதைகள் விற்பனைக் கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த விழாவில், மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, நவரா, கல்லுருண்டை, சின்னாறு 20, பால்குடவாழை, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு, கேழ்வரகு, எள், துவரை, நாட்டுச் சோளம், காய்கறி, கீரை உள்ளிட்ட பல்வேறு விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இயற்கை இடுபொருட்களான ஆவூட்டம், மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம், மூலிகைச் செடிகள், மரப்பாச்சிப் பொம்மைகள், பனை விதைகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த விழாவில் அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் உழவர்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான விதைகளை வாங்கிச் சென்றனர். இந்த விழாவில் வேளாண் அறிஞர் பாமயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
“உழவர்களின் மத்தியில் விதைகளைத் தங்கவைக்க வேண்டும். உழவர்களுக்குள் விதைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். இயற்கை உரங்களைக் கொண்டு பயிர்செய்யப்படும் எந்தப் பயிரையும் பூச்சிகள் தாக்குவதில்லை. சூழலியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, சுமூக ரீதியாகப் பார்க்கும்போது மரபு விதைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டின் இறையாண்மை வேளாண்மையில்தான் உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு உண்டாக்குவதற்குத்தான் இந்த விதைத் திருவிழா ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது” என பாமயன் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
மேலும் பேசிய அவர், “தற்போது 35 சதவீத விதைகள் கம்பெனிகளின் வசம் சென்றுவிட்டன. காலப் போக்கில் விதைகள் அனைத்தும் கம்பெனிகளின் வசம் சென்றுவிட வாய்ப்பபுள்ளது. முழுமையாக கம்பெனிகள் விதைகளைக் கைப்பற்றினால் அவர்களை மட்டுமே உழவர்கள் நம்பி இருக்க வேண்டும்” என்ற தன் அச்சத்தையும் வெளிப்படுத்தினார். உழவர்கள் உற்பத்திசெய்யும் எண்ணெய் வித்துக்களான தேங்காய், ஆமணக்கு, கடலை, எள் போன்றவற்றைக் கொண்டு இயற்கை முறையில் எண்ணெய் தயாரித்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய என்ன வழிமுறைகள் உள்ளன என்பது இந்த விதைத் திருவிழாவில் உழவர்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்டது.
பெரும்பாலும் விதை விழாவில் நெல்மணிகள் மட்டுமே காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும். ஆனால், இந்த விதைத் திருவிழாவில், நெல்மணிகள் மட்டுமன்றி, காய்கறி விதைகள், எண்ணெய் வித்துக்கள், மரக்கன்றுகள், மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உணவு போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பனங்கிழங்கைக் கொண்டு என்ன உணவு தயார் செய்யலாம், பனையிலிருந்து கிடைக்கும் வெல்லம், கருப்பட்டி, பனை ஓலைக் கூடைகள் அனைத்தையும் உழவர்கள் எவ்வாறு உற்பத்தி செய்வது ஆகியவை குறித்தும் இந்த விழாவில் விளக்கப்பட்டது சிறப்பான அம்சம்.
“மானாவாரிப் பயிர்களான சோளம், பருத்தி, முந்திரி, கம்பு உள்ளிட்டவற்றையும் அவற்றில் உள்ள அனைத்து வகையையும் இங்குக் காட்சிப்படுத்தி உழவர்களுக்கு விளக்கியுள்ளோம். அதில் பருத்தி வகைகளில் ஒன்றான வறட்சியைத் தாங்கக்கூடிய, நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட கருங்கண்ணிப் பருத்தியைக் காட்சிப்படுத்தியுள்ளோம். இது குறித்து உழவர்களுக்கு விளக்கமும் கொடுத்துள்ளோம்.
இந்த விதைத் திருவிழாவில் ஞெகிழி முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, காகித, துணிப்பைகளே பயன்படுத்தப்பட்டன. மேலும், கண்காட்சிக்கு வந்த அனைவருக்கும் எவர்சில்வர் டம்ளரில் கம்மங்கூழ், கேழ்வரகுக்கூழ் உள்ளிட்ட இயற்கை உணவும் மதியம் அறுசுவை உணவும் இலவசமாக வழங்கப்பட்டது” என விழா ஏற்பாட்டாளர் ரமேசு கருப்பையா கூறினார்.
2017-லிருந்து நடத்தப்பட்டுவரும் இந்தத் திருவிழா மூலம் உழவர்கள் பலர் பயன்பெற்று வருகிறார்கள். இந்தத் திருவிழா மூலம் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு உழவர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடம் உருவாகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
