Published : 31 Aug 2019 11:10 am

Updated : 31 Aug 2019 11:10 am

 

Published : 31 Aug 2019 11:10 AM
Last Updated : 31 Aug 2019 11:10 AM

எது இயற்கை உணவு 18: நாம் சாப்பிடுவது ஆரோக்கிய விதை உணவா?

seed-of-wellness

அனந்து

இயற்கை வேளாண்மையில் விதை ஏன் முக்கியமாகிறது?

விதை, அதிலும் மரபு விதையும் அதன் பன்மைத்தன்மையும் இயற்கை வேளாண்மையில் மிக முக்கியமானது.
விதை என்பது உழவின்/உயிரின் அடிப்படை. அதை இழந்தால் அனைத்தையும் நாம் இழந்துவிடுவோம். விதைப் பன்மயம் என்பது நாட்டின், உணவு உற்பத்தியின், உழவர்களுடைய வாழ்வாதாரத்தின் அடிப்படை. அப்படிப்பட்ட விதைப் பன்மயத்தை அழிக்க முற்படும் விதை வியாபாரத்தை மீறி, நூற்றுக்கணக்கான மரபு விதைகளை நாடெங்கிலும் காப்பாற்றி வருகிறார்கள் விதை விற்பன்னர்கள்.

இயற்கை வேளாண்மைக்கு விதைதான் அடிப்படை வளம். பொருளாதாரரீதியாக மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல்ரீதியாகவும் உழவரைப் பாதிக்கக்கூடிய முதல் இடுபொருள் விதையே. அதனால்தான் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கு வீரிய விதைகள் எனக் கூறப்படும் சோதா விதைகள் பயன்படுவதில்லை.

விதை வெறும் வியாபாரமல்ல

விதை வியாபாரமாக மட்டுமே பார்க்கப்பட்டால், அதன் விற்பனையில் கொள்ளை லாபம் மட்டுமே குறியாக மாறினால், நமது மரபு விதைகள், அதிலிருந்து கிடைக்கும் சத்து, சுற்றுச்சூழல், உழவர்களின் வாழ்வாதாரம் என எல்லாம் தூக்கியெறியப்படும். அப்படிப் பசுமைப் புரட்சிக்குப் பிறகு நாம் இழந்த விதைகள் ஏராளம்; நெல்லில் மட்டும் பல்லாயிரம்.

நாம் விளைவித்த 2 லட்சத்துக்கு மேற்பட்ட 95 சதவீதம் நெல் வகை தொலைந்து இன்றைக்கு வெறும் 11 வகையாகக் குறுகிவிட்டன. காலம் காலமாக நாம் பாதுகாத்து வந்த உழவின் ஆணிவேரான விதைகளை இழந்தோம்; வியாபாரச் சுழலில் சிக்கிச் சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம், இயற்கை வளம், ஊட்டச்சத்து என எல்லாவற்றையும் இழந்தோம். ஒவ்வொரு பருவத்துக்கு, ஒவ்வொரு சூழலுக்கு, வயதுக்கு, நோய்க்கு எனப் பல பொக்கிஷங்கள் நம் கையைவிட்டு அகன்றன.

நெருக்கடிகளை மீறிய முயற்சி

சோதா விதைக்கும், மரபணு மாற்றுப் பயிருக்கும் அடிமைப்பட்டுக் குறுகிய காலச் சிறு லாபத்தை (அந்த லாபம் யாருக்கு என்பது வேறு கதை!) மட்டுமே கவனத்தில் கொண்டிருந்ததால், நமது மரபு விதைகளைத் தொலைத்தோம். அந்த விதைப் பன்மயம் மீண்டு வந்தால், பயிர்ப் பன்மயமும் நம் தட்டுக்கு வந்துசேரும்; ஊட்டச்சத்தும் நம்முடைய உயிர்ச் சூழலும் உயரும்; மிக முக்கியமாக‌ நாட்டின் உணவு உற்பத்தி, உழவர் வாழ்வாதாரம் தற்சார்பு போன்றவையும் உயரும். அரசு, பகாசுர நிறுவனங்களின் களியாட்டங்களை மீறி இன்று உழவர்கள் பலரும், ஆங்காங்கே சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆயிரம் மரபு விதைகளைப் புதையல் போலப் பாதுகாத்துவருகிறார்கள்.

நமது பங்கு என்ன?

மரபு விதைகளை மீட்டெடுக்க, நம் உழவர்கள் மட்டும் விழித்துக்கொண்டால் போதாது. நுகர்வோரும் அரசும் அரசுக் கொள்கைகளும் இவற்றைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்க வேண்டும். இன்றைய சூழலில் எப்படி நம் உழவர்களின் கைகளைவிட்டு அகன்று விதை ஒரு வியாபாரப் பொருளாக, பெருலாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறியுள்ளது.

அதை எதிர்கொண்டு எப்படி நாடு முழுவதும் உள்ள உழவர்கள் பலர் மரபு விதைகளையும் விதை பன்மயத்தையும் தங்கள் முயற்சியால் மீட்டெடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.
அப்படி ஒரு நகரவாசியாக, நுகர்வோராக நமக்குத் தேவையான விளைபொருட்களை மரபு விதைகளைப் பாதுகாப்பவர்களிடமும் நமது மரபு ரகங்களை விற்பனை செய்யும் இயற்கை அங்காடிகளிலிருந்தும் வாங்கலாம். இவர்களை எல்லா வழிகளிலும் ஆதரிக்க வேண்டும்.

ஊட்டச்சத்துமிகுந்த விதைகள்

அரிசியாக இருந்தால் நமது பண்டைய ரகங்களான கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, குள்ளக்கார், பூங்கார், மாப்பிளைச்சம்பா, காட்டுயாணம், கவுணி எனப் பல வகையை வாங்கிப் பயன்படுத்தலாம். அவற்றின் மருத்துவக் குணம், சத்து போன்றவற்றால் கூடுதல் பயனும் பெறலாம். மாடித் தோட்டங்களில், சமூகக் கூடங்களில், பள்ளிக் கூடங்களில், சிறுசிறு தோட்டங்களில் மரபு விதைகளை வளர்த்துப் பெருக்கலாம்.

அவற்றைக் கொண்டு நமது சமையலறைக்குச் சத்து நிறைந்த, அருமையான, சுவை மிகுந்த காய்கறிகளைப் பெற்றுப் பயன்படுத்தலாம். நம் உழவர்களுக்கு உறுதுணையாகச் சில மரபு விதைகளையும் காப்பாற்றலாம். அப்படி நாம் காப்பாற்றிய விதைகளை பரிசாக/நன்கொடையாக நன்றி நவில்தலாக உழவர்களுக்குத் திரும்ப அளிக்கலாம். நமக்காகச் சிரமேற்கொண்டு உணவு உற்பத்தி செய்யும் நமது உழவர்களுக்கு இதைச் செய்வது நமக்குப் பெருமை மட்டுமல்ல, கடமையும்தானே!

கட்டுரையாளர்,
இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com


விதைஎது இயற்கை உணவுஆரோக்கிய விதைஇயற்கை வேளாண்மைவியாபாரமல்லநெருக்கடிகள்உழவர்கள்ஊட்டச்சத்து விதைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author