உள்நாட்டுக் கால்நடைகளை அழிக்கும் தமிழகச் சட்டம்?

உள்நாட்டுக் கால்நடைகளை அழிக்கும் தமிழகச் சட்டம்?

Published on

ச.ச.சிவசங்கர்

2017-ல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகமே திரண்டு எழுந்தது நினைவிருக்கலாம். ஆனால், ஜல்லிக்கட்டு தேவை என்று எதற்காகத் தமிழகம் போராடியதோ, அதற்கு எதிரானதொரு சட்ட முன்வடிவம் சத்தமேயில்லாமல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதன் முக்கிய நோக்கம், நம் உள்நாட்டு மாட்டு இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால், இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவமோ மாடுகள் இயல்பாக இனப்பெருக்கம் செய்வதே பிரச்சினை என்பது போன்ற அம்சத்தை உள்ளடக்கியுள்ளது.

‘தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் - 2019’ என்ற சட்ட முன்வடிவம் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவம் பெரும்பாலான உழவர்களின் கவனத்தைச் சென்றடையவில்லை. உழவர்களிடம் கருத்தும் கேட்கப்படவில்லை. அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்ட முன்வடிவம், உழவர்களிடையே விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்தச் சட்ட முன்வடிவத்தின்படி புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகக் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதன்படி, கால்நடை வளர்ப்புத் தொழில் முழுமையாக இந்த அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுவிடும். இந்தச் சட்ட முன்வடிவம் சொல்லும் விதிமுறைகளை கால்நடை வளர்ப்போர் பின்பற்ற வேண்டிய நெருக்கடி ஏற்படும். உடற்தகுதியில்லாத காளைகளைக் கொல்வதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு என்ற விதிமுறையும் இந்தச் சட்ட முன்வடிவத்தில் இருக்கிறது. இந்தச் சட்ட முன்வடிவம் குறித்து துறைசார் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்:

பாமயன், இயற்கை வேளாண் வல்லுநர்

இந்தியாவைப் பொறுத்த அளவில் பால் நுகர்வு அதிகமாக உள்ளது. அதாவது நேரடிப் பால் பயன்பாட்டைக் காட்டிலும், பால் பொருட்களின் எண்ணிக்கைக்குப் பெரும் சந்தை இருக்கிறது. அதைக்க் கைப்பற்றுவதைப் பெருநிறுவனங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவில் ஏ2 பால் விற்பதற்கான வியாபார ஒப்பந்தம் ஒரு நியூஸிலாந்து நிறுவனத்துக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதைப் பரவலாக்குவதற்கான முன்னேற்பாடுகளே இந்தச் சட்ட முன்வடிவம்.

இந்தச் சட்ட முன்வடிவத்தின்படி கால்நடை வளர்ப்போர் அரசிடம் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். அதனால், அந்த அமைப்பு என்னவெல்லாம் சொல்கிறதோ அது அனைத்தையும் உழவர்கள் பேசாமல் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். பின்னர் படிப்படியாக இந்தத் தொழில் சிறுவணிகர்களின் கையிலிருந்து பெருநிறுவனங்கள் வசம் போவதற்கான சாத்தியம் மிக அதிகம்.

கடந்த 2013-ல் கொண்டுவரப்பட்ட கால்நடை இனப்பெருக்கச் சட்ட முன்வடிவத்தில் சொந்தமாகக் காளை வைத்திருப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு, இந்தச் சட்ட முன்வடிவத்தில் இல்லை. அதுவே இந்தச் சட்ட முன்வடிவத்தில் இருக்கும் பெரிய அபாயம். அத்துடன் வருங்காலத்தில் கால்நடை இனப்பெருக்கத்துக்குச்
சினை ஊசியை மட்டுமே சார்ந்திருந்தால், காளை மாடுகளை முழுவதுமாக இழக்கக்கூடிய சாத்தியம் இருப்பது பேராபத்து.

கார்த்திகேய சிவசேனாதிபதி நிறுவனர், சேனாபதி காங்கயம் மாடு ஆராய்ச்சி அறக்கட்டளை

இந்தச் சட்ட முன்வடிவத்தின்படி நாட்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் புதிதாக உருவாக்கப் படும் அதிகார அமைப்பில் பதிவு செய்தாக வேண்டும். காலங்காலமாக மாடுகளைப் பராமரித்துவரும் உழவர்கள் பின்பற்றிவரும் நடைமுறையை வலிந்து் மாற்றுவதாக புதிய சட்ட முன்வடிவம் முன்வைக்கும் கட்டுப்பாடுகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் மாடுகளின் இனப்பெருக்கத்துக்கான கலப்பின, மரபு
மாடுகளுக்கான சினை ஊசிகளை அரசே மலிவு விலையில் விற்பனை செய்கிறது. அத்துடன் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பில் பெரிய பிரச்சினைகள் இல்லை.

இந்தியாவிலேயே கால்நடைப் பல்கலைக்கழகம் முதலில் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதனால் கால்நடைகள் மீது இயல்பாகவே பல ஆண்டு காலமாக நம்மிடையே கவனம் அதிகம். இந்நிலையில் இந்தக் கால்நடை இனப்பெருக்கச் சட்ட முன்வடிவத்தின் அவசியம் என்ன? இப்படி ஒரு சட்ட முன்வடிவம் குறித்து யாரிடமும் கருத்துக் கேட்கப்படவில்லை.

கிராமத்தில் பசு மாடு வைத்திருப்பவர், தெரிந்த உழவரின் காளையோடு இனச்சேர்க்கைக்கு விடலாம். அதனால் அவருக்கு ஆகும் செலவு மிகச் சொற்பம். இந்தச் சட்ட முன்வடிவம் நடைமுறைக்கு வரும்போது, அந்த உரிமை பறிபோகும் சாத்தியம் உண்டு. அப்படிப் பயன்படுத்துபவர்களை ஏன் இந்த அரசாங்கம் தடுக்க வேண்டும், இந்தச் சட்ட முன்வடிவத்தில் ஜெர்சி போன்ற அயல் நாட்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் நாட்டு மாடு வைத்திருக்கக் கூடாது, சினை ஊசிதான் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது எதற்காக? மேலும் இந்தச் சட்ட முன்வடிவத்தின் விதிகளை மீறுவோருக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பதெல்லாம் கால்நடை வைத்திருப்போரை மிரட்டவே பயன்படும்.

பெரும் வணிக நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சட்ட முன்வடிவம், உழவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கக்கூடியது. சினை ஊசி மூலமாக மட்டுமே மாடு இனப்பெருக்கம் செய்ய வேண்டும் எனும்போது, பெருநிறுவனங்களின் தலையீட்டால் சினை ஊசி விலை ரூ.500 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. இப்படிப் படிப்படியாகக் கால்நடைத் துறை தனியார் வசம் போவதால் அயல்நாட்டு மாட்டினங்களின் வருகை அதிகரிக்கும். உள்நாட்டு மாடுகளின் எண்ணிக்கை சரிவதற்கான சாத்தியம் அதிகம்.

ஹிமாகிரண்,
இயற்கை வேளாண் செயல்பாட்டாளர்

அரசு ஒரு சட்டத்தை இயற்றும்போது முதலில் அதற்கான தேவை உள்ளதா என்று பார்க்க வேண்டும். அந்தத் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். இந்தச் சட்டத்தைப் பொறுத்த அளவில் உழவர்களிடமும் பெண்களிடமும் கருத்து கேட்க வேண்டும். மாடு வைத்திருப்பவர்கள், வாங்குபவர்கள் முதல் அதற்குச் சிகிச்சை அளிப்பவர்கள் வரை அனைவருமே பதிவுசெய்தாக வேண்டும் என்பதுதான் இந்தச் சட்ட முன்வடிவத்தின் அடிப்படைச் சிக்கல். ஒரு மாட்டுக்குப் பதிவுசெய்யக் கட்டணம் தோராயமாக ரூ.50 என்று வைத்துக்கொள்வோம். இது போக மாட்டுத் தொழுவம் உள்ளிட்ட அனைத்தையுமே பதிவுசெய்ய வேண்டும். அதற்குத் தனிக் கட்டணம்.

அப்படியென்றால் 5 முதல் 10 மாடு வைத்திருப்பவர்களுக்குப் பதிவுக் கட்டணம் எவ்வளவு ஆகும்?
இனப்பெருக்கத்துக்குச் சினை ஊசி மட்டும்தான் என்று வந்துவிட்டால், எவ்வளவு விலை கொடுத்தும் விதைகளை உழவர்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளதுபோல், சினை ஊசியை அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வாங்கியாக வேண்டும். காலப்போக்கில் சிறு, குறு உழவர்கள் ஒதுக்கப்பட்டு பெருநிறுவன ஆதிக்கம் தொடங்கிவிடும். இந்தச் சட்ட முன்வடிவத்தில் உழவர்களின் நலனுக்காக எதுவும் இருப்பதுபோல் தெரியவில்லை. இதைச் சட்டமாக்குவதற்கு முன் தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக உழவர்களின் கடமை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in