எது இயற்கை உணவு 17: தண்ணீரால் மட்டுமே விளைவது நல்லதா?

எது இயற்கை உணவு 17: தண்ணீரால் மட்டுமே விளைவது நல்லதா?
Updated on
2 min read

அனந்து

ஹைட்ரோஃபோனிக்ஸ் (Hydrophonics) இயற்கை வேளாண்மை சார்ந்ததா?

ஹைட்ரோஃபோனிக்ஸ் என்பது மண் இல்லாமல், நீரை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு, நீரின் மூலமே எல்லா சத்துக்களும் ஊட்டப்பட்டு தாவரங்களை விளைவிக்கும் முறை. மண்/மண் வளம் இல்லாத மேலை நாடுகளில், தட்பவெப்ப நிலைமையும் பெரிதாக உதவாத இடங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒரு முறை. பெரும் பணக்காரர்களும் பெருநிறுவனங்களும் பயன்படுத்தும் வழிமுறை.

மேற்கிலிருந்து வரும் பல தொழில்நுட்பங்களைப் போல் நம் நாட்டுக்கு, சிறு குறு நிலங்கள் நிறைந்த இடங்களுக்குத் தேவையில்லாத ஒரு தொழில்நுட்பம் இது. அவசரச் சிகிச்சைக்கு கொடுக்கப்படும் குளுக்கோசையே 365 நாளும் உணவாகப் பாவிப்பதைப் போன்றது! துரித, பெருநிறுவனத் தயாரிப்புகளை மட்டுமே நம் உடலுக்கு முழு ஆற்றலும் அளிக்கும் உணவாகப் பாவிக்க முடியாதில்லையா?

மண், அதிலிருந்து கிடைக்கும் சத்துகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றின் பங்கு ஏதுமற்ற வேளாண் முறையா இது?

நல்ல மண் வளமே நல்ல பயிர்களை வளர்ப்பதற்கு அடிப்படை; நல்ல பயிர்களே நல்ல மனிதர்கள்/கால்ந‌டைகள் வளர்வதற்கு உத்தரவாதம்; இவை எல்லாம் சேர்ந்தே பூமி வளமாக இருப்பதற்கான அறிகுறியாக அமைகின்றன. இப்படி இருக்கும்போது, மண்ணே இல்லாமல் எல்லா இடுபொருட்களையும் நீரில் கலந்து கொடுத்து உற்பத்தி செய்வதை வேளாண்மை என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஆனால், மேற்கத்திய நிறுவனங்கள் இதை விரும்புகின்றன. ஏனென்றால், இந்த முறையில் விளைபவற்றை ‘ஆர்கானிக்' என்ற அடையாளத்துடன் எளிதாக விற்பனை செய்ய முடிகிறது. ஆனால் உண்மையில், பெரும் பங்கு ஹைட்ரோஃபோனிக்ஸ் வேளாண்மையில் வேதி வழிமுறைகளே கடைபிடிக்கப்படுகின்றன.

நாம் முன்பே பார்த்ததுபோல், இயற்கை வேளாண்மை என்பது விற்பனை சார்ந்தது மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதில் மண்ணுக்குப் பெரும் இடமும் முக்கியத்துவமும் உண்டு. நல்ல மண் வளமே நல்ல வேளாண்மைக்கான அடிப்படை. அது இல்லாமல் எப்படி உற்பத்தி நடக்கும்? மண் இல்லாமல் கால்நடைகளும் பயிர்களும் சாத்தியமா என்ற அடிப்படைக் கேள்வி எழ வேண்டாமா? வெள்ளைக்காரர்காளைப் பார்த்து இதுவரை சூடு போட்டுக்கொண்டது போதாதா?

ஹைட்ரோபோனிக்ஸில் விளைவிக்கப்பட்டவை என்ன சத்தைக் கொண்டிருக்கும்? அவற்றின் சத்துகள் பற்றி ஆய்வுகள் இல்லை. வேர்களின் பங்கு எவ்வளவு முக்கியம், அவற்றின் மூலம் நுண்ணுயிரிகள் முதல் மனிதன்வரை, ஒளிச்சேர்க்கை முதல் மற்ற அம்சங்கள்வரை எல்லாமே ஒரு முடிவுறாத வலைப்பின்னல். இந்த மண்-உணவு வலை மிகமிக முக்கியம். இந்த வாழ்க்கை வலை பூமிக்கும், இயற்கை வேளாண்மைக்கும் மிக மிக அவசியம்.

ஆக, ஹைட்ரோஃபோனிக்ஸில் உற்பத்தி ஆகும் உணவு, உணவுதானா என்று கேள்வி கேட்க வேண்டுமே தவிர, இதற்கு இயற்கை வேளாண்மையில் இடமுண்டா என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், அமெரிக்காவில் இப்போது பெருநிறுவனங்கள் தரும் நெருக்கடியால் பெரும் அங்காடிகள், பெரும் பகாசுர உற்பத்தியாளர்கள் தரும் அழுத்தத்தால், ஆர்கானிக் சான்றிதழ் வலைக்குள் இதை நுழைக்கின்றனர். இது தவறு. இந்த நடைமுறை அங்கு கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண் வழிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் ஹைட்ரோபோனிக்ஸ் புறம்பானது.

கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in