

இந்தியா கூடுதலாகக் கரும்பு உழவர்களுக்கு மானியம் அளிப்பதாக உலக வர்த்தக அமைப்பின் (WTO) தீர்வுக் கூட்டத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், கவுதமாலா ஆகிய நாடுகள் கூட்டாகப் புகார் அளித்திருந்தன. இந்தப் புகாரை விசாரிக்கத் தனிக் குழு அமைக்க இந்த மூன்று நாடுகளும் கடந்த மாதம் உலக வர்த்தக அமைப்பின் தீர்வுக் கூட்டத்தில் வலியுறுத்தின. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு இந்தியா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடை விதித்துவிட்டது.
இந்நிலையில் சென்ற வாரம் 15-ம் தேதி நடந்த தீர்வுக் கூட்டத்தில் மீண்டும் அதே கோரிக்கை அந்த நாடுகள் சார்பாக முன்வைக்கப்பட்டது. இரண்டாம் முறை கோரிக்கையைத் தடைசெய்யும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லையென்பதால் அந்தப் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் கரும்பு உழவர் மானியம் குறித்த விசாரணையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பத் துறையின் சார்பில் நடத்தப்படும் ‘மசாலாப்பொடிகள், ஊறுகாய் தயாரித்தல்’ பயிற்சி நடத்தப்படவுள்ளது. இந்த மாதம் 28, 29 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.1,500. பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்குத் துறைத் தலைவரை 0422 6611268 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
பண்ணைக்குட்டைகள் அமைக்க மானியம்
மதுரை மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பாக விவசாய பட்டா நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தையில் விற்க, கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட உற்பத்தியாளர் குழுக்களுக்கு மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் மையம் அமைக்க 75 சதவீதம் மானியம் (அதிகபட்சமாக ரூ.10 லட்சம்) வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு மதுரை டி.பி.கே., ரோடு வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரைத் தொடர்புகொள்ளலாம். தொடர்பு எண்: 0452-267 7990. இந்தத் தகவலை மதுரை ஆட்சியர் ராஜசேகர் பகிர்ந்துள்ளார்.
வெங்காயம் விலை உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்துக் குறைவானதால் வெங்காயத்தின் (பெல்லாரி) விலை உயர்ந்துள்ளது. அதனால் கிலோ ரூ.25 அளவில் விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.10 கூடியுள்ளது. அதே வேளை தக்காளி விலை, வரத்து அதிகமானதால் குறைந்துள்ளது. ரூ.40 அளவில் விற்கப்பட்ட தக்காளி கிலோவுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதுபோல் கத்திரிக்காய், அவரைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள், ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்கள் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.
தொகுப்பு: விபின்