Published : 24 Aug 2019 11:01 AM
Last Updated : 24 Aug 2019 11:01 AM

சென்னை 380: சூழலியல் பாதுகாப்புக்கு அடித்தளமிட்டவர்கள்

சுந்தர்

சென்னை நகரமும் அதன் சுற்றுப் பகுதிகளும் இயல்பாகவே சூழலியல் வளம் நிறைந்திருந்தன. காலப்போக்கில் ஒவ்வொன்றும் கபளீகரம் செய்யப்பட்டும் கட்டுப்பாடற்ற நகர்மயமாக்கத்தின் விளைவாலும் சென்னை இன்று ஆரோக்கியமாக வாழத் திண்டாடிக் கொண்டிருக்கிறது. சென்னை நகரம் நிர்மாணிக்கப்பட்டு 380 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், அதன் சூழலியல் பாதுகாப்புக்கு அடித்தளமிட்ட முக்கிய ஆளுமைகள் யார், யார்?:
வால்டர் எலியட் (1803-1887): பரிணாமவியல் கொள்கையைக் கண்டறிந்த சார்லஸ் டார்வினுடன் எலியட் தொடர்பு கொண்டிருந்தார்.

ஆய்வு உதவிக்காக, இந்தியாவின் பல்வேறு பறவைகளுடைய தோலை அவருக்கு அனுப்பியிருக்கிறார். மதராஸ் மாகாண ஆளுநருக்கான அவையில் 1821 முதல் 1860 வரை உறுப்பினராக இருந்த எலியட், அன்றைய மதராஸில் பணியாற்றினார். தாமஸ் ஜெர்டான் என்கிற மற்றொரு இயற்கை ஆர்வலருடன் இணைந்து, ‘Madras Journal of Literature and Science' இதழில் தென்னிந்தியாவின் பாலூட்டிகளை வகைப்படுத்தி எழுதியுள்ளார். மூங்கணத்தான் (Madras Tree Shrew) என்ற உயிரினத்தின் அறிவியல் பெயரின் பிற்பாதி, இவரது நினைவாக அனதனா எலியோட்டி (Anathana elliotti) என்று வைக்கப்பட்டுள்ளது.

தாமஸ் சி. ஜெர்டான் (1811-1872):

தற்போது அழிவின் விளிம்பில் உள்ள ஜெர்டான் கல்குருவி (Jerdon’s courser) உள்ளிட்ட நிறைய உயிரினங்கள் இவருடைய நினைவாகப் பெயரிடப்பட்டவை.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராகப் பணியாற்றிய ஜெர்டான், இயற்கை வரலாற்றிலும் பேரார்வம் கொண்டிருந்தார்.

இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றியுள்ள இவர், 1844 முதல் 1847 வரை அன்றைய மதராஸில் இருந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்களைப் பற்றி விவரித்த மூன்று பாகங்களால் ஆன ‘இந்தியாவின் பறவைகள்’ என்ற நூல் நவீன இந்தியாவின் தொடக்ககாலக் காட்டுயிர் நூல்களுள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
டக்ளஸ் தீவார் (1875-1957): இந்தியக் குடிமைப் பணியில் இருந்த டக்ளஸ், அன்றைய மதராஸில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். சமவெளிப் பறவைகள், இந்தியப் பறவைகள் எனப் பறவைகள் குறித்து ஏராளமான புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். ‘தி மெட்ராஸ் மெய்ல்’ இதழுக்குத் தொடர் பங்களிப்பாளராகவும் இருந்துள்ளார்.

மா. கிருஷ்ணன் (1912-1996):

இந்திய உயிரினங்கள், பறவைகள், ஆறுகள், மலைகள் போன்றவற்றை நம்முடைய மரபுப் புதையலாக நாம் கருத வேண்டும் என்பது இவருடைய அறைகூவலாக இருந்தது. நாட்டின் தொடக்ககால சூழலியலாளர்களுள் முதன்மையானவரான கிருஷ்ணன், காட்டுயிர் குறித்து 1940-களிலேயே தனி ஆளாக எழுதிக்கொண்டிருந்தார். 1938-ல்
தமிழில் எழுதத் தொடங்கியவர், சிறிது காலத்திலேயே ஆங்கிலப் புலமை பெற்று ஆங்கிலத்திலும் எழுதத் தொடங்கினார்.

கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று அந்தக் காலகட்டத்தில் கருதப்பட்ட காட்டுயிர்கள் குறித்து விரிவாக எழுதினார். சென்னை நகரின் காட்டுயிர் பற்றி ‘தி சதர்ன் டைரி’ என்ற பெயரில் ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ இதழிலும், தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மை கன்ட்ரி நோட்புக்’ என்ற பெயரில் ‘தி ஸ்டேட்ஸ்மென்’ செய்தித்தாளிலும் பத்திகளை எழுதியுள்ளார். இந்திய காட்டுயிர் வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராக இருந்தார்.

கிஃப்ட் சிரோமணி (1932-1988):

சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, அன்றைய சென்னைவாசிகளிடையே இயற்கை குறித்த ஆர்வம் கிளர்ந்தெழக் காரணமாக இருந்தவர். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் புள்ளியியல் துறைத் தலைவராக 1970, 80களில் சிரோமணி பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள் குறித்து ‘புள்ளியியல் துறையின் அறிவியல் அறிக்கைகள்’ என்ற ஆய்விதழில் அநேகக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.

கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்திலுள்ள பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், அந்திப்பூச்சிகள் ஆகியவற்றின் பட்டியல் அந்தக் கட்டுரைகளில் வெளியாயின. பறவை நோக்கர்களுக்காக பெங்களூருவில் இருந்து வெளியான செய்திமடல் ஒன்றில், மதராஸின் பறவைகள் குறித்து அவ்வப்போது எழுதிவந்தார்.

திருத்தம்

ஆகஸ்ட் 17 'உயிர் மூச்சு' இதழில் வெளியான 'தப்பிப் பிழைக்குமா நீலகிரி?' கட்டுரையில் கருத்து தெரிவித்திருந்த எழுத்தாளர் ‘காட்வின் வின்சென்ட் போஸ்கோ’வின் பெயரை ‘காட்வின் வசந்த் போஸ்கோ’ என்று திருத்தி வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி: சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரை,
Madras, Chennai: A 400-year Record of
the First City of Modern India, Volume 1 நூல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x