

ச. தனராஜ்
உலக பழங்குடிகள் நாள் ஆகஸ்ட் : 9
பழங்குடிகளின் உரையாடல் மனிதர்களுடன் முடிந்துவிடுவதில்லை. மனிதர்களுடன் பேசுவதைத் தாண்டி மரம், செடி கொடிகள், வளர்ப்பு விலங்குகள், முன்னோர்கள், தெய்வங்கள்வரை நீண்டுகொண்டே செல்கிறது அவர்களுடைய உரையாடல்.
இயற்கை தங்களுக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை பழங்குடிகளிடம் உண்டு. ‘அழுது கும்பிட்டால் மழை
வரும்' என்று பளியர் பழங்குடிகள் நம்புகிறார்கள். காடுகளில் பூ பூக்க வேண்டும், தேன் நிறைய கட்ட வேண்டும் என்று தங்கள் தெய்வங்களுக்குத் தை மாதம் பொங்கலிட்டு இவர்கள் வழிபடுகின்றனர். நிலத்தைத் தாயாக
வழிபடும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பைகா பழங்குடிகள், உழவு செய்வதற்கு இரும்புக் கலப்பையைக்கூடப் பயன்படுத்துவதில்லை.
நீர், நிலம், வனம், பாறை, மரம், செடி கொடி, விலங்குகள் எனத் தங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் வழிபடும் பழங்குடிகள், தாங்கள் வணங்கும் தெய்வங்களுடன் தங்கள் முன்னோர்களின் ஆன்மாவும் காட்டிலேயே தங்கித் தங்களை வழிநடத்துவதாக நம்புகிறார்கள். தாங்கள் இருக்கும் இடத்தைத் தொட்டு வணங்கி, தங்கள் முன்னோர்கள், வன தேவதைகளுடன் உரையாடிய பின்பே எந்தொரு பணியையும் தொடங்குவது பழங்குடிகளின் வழக்கம். அதேபோலத் தங்கள் வேலை முடிந்த பிறகு, நன்றி தெரிவிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
வன்கொடுமை இல்லை
சமூக வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டாலும், பழங்குடிகளின் வாழ்க்கை மற்ற சமூகங்களில் இருந்து வேறுபட்டும் மேம்பட்டும் காணப்படுகிறது. எல்லோருக்கும் சம வாய்ப்பு, சம மரியாதை அளிப்பது பழங்குடிச் சமூகம், பழங்குடிக் கலையின் தனிசிறப்பு. ஆண், பெண் வேறுபாடின்றி வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுதல், குடும்ப விவகாரங்களில் பெண்கள் முடிவெடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தல், வரதட்சிணை முறை
இல்லாதது, கைம் பெண் மறுமணம்
போன்ற பழக்கங்கள் பழங்குடிகளிடம் இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கின்றன.
இவற்றின் காரணமாகவே பழங்குடிச் சமூகங்களில் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதில்லை எனலாம். கணவன், மனைவி சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை என்றால் தாங்களாகவே பிரிந்துவிடுவதும், தேவைப்பட்டால் மறுமணம் செய்துகொள்வதும் பழங்குடிச் சமூகங்களில் வெகு இயல்பாக நடக்கிறது. முதியோர், ஆதரவற்றோரை ஒட்டுமொத்தப் பழங்குடி கிராமமும் பாதுகாத்து அரவணைப்பது அறுபடாத பண்பாகத் தொடர்கிறது.
பழுத்த பழம் மட்டுமே!
பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை தேடுவதை மையப்படுத்திய தற்போதைய கல்விச் சூழலில், போட்டி மனப்பான்மையற்ற வாழ்க்கைக்கான கல்வியைப் பழங்குடிகள் பயில்கின்றனர். எல்லாப் பாலூட்டிகளும் தங்கள் குட்டிகளுக்குச் செயல்முறையில்தான் கற்றல் பயிற்சியை அளிக்கின்றன. விலங்குகளைப் போல் தம் பெற்றோரிடம் இருந்தே ஒரு பழங்குடிக் குழந்தை கற்கத் தொடங்குகிறது. எதை, எப்போது, எப்படிக் கற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைப் பெற்றுள்ள அந்தக் குழந்தை பெற்றோர், சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் இருந்து கல்வி கற்றுத் தேர்கிறது.
பழங்குடிகளைப் பொறுத்தவரை அறம் சார்ந்த வாழ்க்கை முறை விழுமியங்களே குழந்தைகள் மீது இடப்படும் முதன்மை முதலீடு. இந்த விதையே திரும்பத் திரும்ப முளைப்பதால் மனித குலத்தின் அடிப்படை அறம் அவர்களிடம் நிலைத்திருக்கிறது. இச்சமூகங்களின் காடு சார்ந்த வாழ்க்கை, வாய்மொழிக் கதைகள், பாடல்கள், நம்பிக்கைகள், விடுகதைகள், தொன்மங்கள், மரபு அறிவு, மூலிகைப் பயன்பாடு ஆகியவற்றை இந்த அறவுணர்வே தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
விலங்குகள், இயற்கை குறித்த எல்லா ஞானமும் இப்படித்தான் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன. காடும் மலையும் மட்டுமல்லாது; அவற்றைப் பற்றிய பழங்குடிகளின் மரபு அறிவும் பொதுச்சொத்துதான்! இந்த அறிவின் அடிப்படையிலேயே தேவைக்கு
அதிகமாகக் காட்டில் எந்தப் பொருளையும் பழங்குடிகள் எடுப்பதில்லை. மரங்களில் இருந்து பழுத்த பழங்களை மட்டுமே பறிக்கிறார்கள்.
பூவுலகை காக்க
அனைத்து மனிதர்களின் தேவைகளையும் இந்த பூமியால் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், ஒரு மனிதனின் பேராசையைக்கூட பூமியால் பூர்த்திசெய்ய முடியாது. பூவில் உள்ள தேனை மட்டும் மென்மையாக உறிஞ்சும் பூச்சிகளைப் போல, பூமியைப் பயன்படுத்திக்கொண்டு நுகர்வைக் குறைத்துக்கொள்வதும், இயற்கை வளங்களைச் சீர்குலைக்காமல் இயற்கையோடு இயைந்த வளர்ச்சியே அனைவருக்குமான வளர்ச்சி என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இப்போது வலியுறுத்துகிறார்கள். இதைப் பண்பாட்டுத் தொடர்ச்சியாகவே பழங்குடிகள் பின்பற்றி வருகிறார்கள்.
நாகரிகம், வளர்ச்சி என்று தொடர்ச்சியான மாற்றங்களுக்கு மனித சமுதாயம் உள்ளாகிக்கொண்டே வந்திருக்கிறது. அறமற்ற நுகர்வுப் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்டு வணிக நோக்குடன் இயற்கை வளங்களை அபகரித்து வியாபாரமாக்கும் பொருளாதாரத் திட்டங்களை உலகெங்கும் செயல்படுத்தி வருகிறோம். இதனால் புவி வெப்பமடைந்து, பருவநிலை மாறிக்கொண்டிருக்கிறது. வரும் தலைமுறை வாழ்வதற்குத் தகுதியற்றதாகப் பூவுலகை மாற்றிவிட்டோம்.
இப்படி மனிதனின் பேராசையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு பழங்குடிகளிடம் இருக்கிறது. நற்கூறுகளைக் கொண்ட அவர்களுடைய வாழ்க்கை முறையை மற்றவர்களும் கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் தேவை. காடுகளைப் பாதுகாக்க பழங்குடிகளையும் சேர்த்தே பாதுகாத்தாக வேண்டும்.
உலகின் மூத்தகுடிகளான பழங்குடிகளின் மரபான வாழிடமான காட்டின் மீதான உரிமைகள் மறுக்கப்படுவது, காடு ஆக்கிரமிப்பு, அரசின் தவறான வனக்கொள்கை, வளர்ச்சி என்ற பெயரில் சூழலுக்குப் பொருந்தாத திட்டங்கள் ஆகியவற்றால் பழங்குடிகள் தொடர் நெருக்கடிக்கு ஆளாகிவருகிறார்கள். இவற்றால் எதிர்காலம் குறித்த அச்சம் அவர்களிடையே பெருகியுள்ளது. இந்த அச்சமும் நெருக்கடியும் அவர்களுடன் முடிந்துவிடப் போவதில்லை என்பதை காடுகளுக்கு வெளியே இருக்கும் மக்கள் உணராதவரை மாற்றம் சாத்தியமல்ல, பூவுலகைக் காப்பதும் சாத்தியமல்ல.
கட்டுரையாளர்,
பழங்குடியினர் உரிமைக்கான செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: dhanamradhai@gmail.com