

இணைய வர்த்தகத்தில் மீன்கள்
இணையத்தில் மீன் விற்பனை தொடங்கப்படவுள்ளது. இணையமயமாகிவிட்ட காலத்தில் மீன் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டத்தைக் மத்தியக் கடல் மீன்கள் ஆராய்ச்சிக் கழகம் செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. மீனின் விலை நிலவரம், ஏலம் விடுவதைப் பற்றிய தகவல் போன்றவற்றை இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் மீன் சந்தை வணிகத்தை அதிகரிக்கும் என மத்தியக் கடல் மீன்கள் ஆராய்ச்சிக் கழகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கான நிதியை ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய மீன்வள ஆனையம் அளிக்கிறது. இதன் முன்னோட்டமாக மத்தியக் கடல் மீன்கள் ஆராய்ச்சிக் கழகம் அமைந்துள்ள கேரளத்தில் மொத்தம் 50 சந்தைகளில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தக்காளி விலை அதிகரிப்பு
மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் பருவமழை காரணமாக டெல்லிச் சந்தைக்குக் காய்கறிகள் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் இருந்துதான் டெல்லிக்கு அதிகமாகத் தக்காளி வருகிறது. அதனால் கிலோ ரூ. 10-30 விற்றுவந்த தக்காளி ரூ. 60-80 ஆக உயர்ந்துள்ளது. இது நகரத்துக்கு வெளியில் இருக்கும் அனைத்துக் கடைகளிலும் இதே நிலைமைதான்.
கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாடுகள் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2012-ன் புள்ளிவிவரத்தின்படி சென்னையில் 12,
771-ஆக இருந்த பசு, எருமை ஆகியவற்றை எண்ணிக்கை தற்போது 46,000 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல், காஞ்சிபுரத்தில் 7 லட்சத்து 19 ஆயிரமாக இருந்த மாடுகள் 7 லட்சத்து 98 ஆயிரமாகவும், திருவள்ளூரில் 5 லட்சத்து 33 ஆயிரமாக இருந்த மாடுகள், தற்போது 6 லட்சத்து 45 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. இந்தத் தகவலைத் தமிழ்நாடு கால்நடை வளர்ப்புத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
தொகுப்பு: சிவா