ஞெகிழி பூதம் 26: மதத் தலங்கள் பூமியைக் காக்குமா?
கிருஷ்ணன் சுப்ரமணியன்
தினசரி நூறு முதல் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வந்து செல்லும் இடமாகக் கோயில், மசூதி, தேவாலயம் போன்ற மதத் தலங்கள் அமைந்துள்ளன. மனிதர்கள் அதிகம் கூடும் இடத்தில் பயன்படுத்தித் தூக்கி எறியும் பொருட்களும் அதிகம் சேர்கின்றன.
காசி எனப்படும் வாராணசியில் உள்ள முக்கியக் கோயில்களில் மட்டும் ஆண்டுக்கு 7,30,000 கிலோ குப்பையைக் கையாள வேண்டியிருக்கிறது. இந்தியாவின் முக்கிய தர்கா ஒன்றில் தினசரி 2,000 கிலோ ரோஜா மலர் பயன்படுத்தப்படுகிறது. பல தேவாலயங்களுக்கும் கோயில்களுக்கும் சொந்தமான நிலங்கள் ஏராளம். அதனால் நிலப்பரப்பில் உயிர்ச்சூழலை அதிகரிப்பதற்கும், மக்கள் கூடும் இடங்களில் குப்பையை முறையாக மறுசுழற்சி செய்வதற்கும், ஞெகிழி போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தைப் பரப்புவதற்கும் மதத் தலங்கள் முன்முயற்சிகளை எடுக்க முடியும்.
ஞெகிழி உறைகளைத் தவிர்த்தல்:
கோயிலுக்குள் மட்டும் அல்ல, கோயில் வளாகத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் ஞெகிழிப் பைகளை முழுமையாகத் தடை செய்ய வேண்டும். பைகளை மட்டும் தடை செய்தால் போதாது. நெய், எண்ணெய், பால், குங்குமம், மஞ்சள், ஊதுபத்தி போன்ற அனைத்துப் பூஜைப் பொருட்களும் ஞெகிழி உறை அல்லது காகித உறைகளைச் சுற்றியோ அல்லது வீட்டில் இருந்தே கொண்டுவரும்
பாத்திரங்களில் வாங்கியதாகவோ இருக்க வேண்டும். கோயிலில் இருந்து கொடுக்கப்படும் பிரசாதங்களைப் பனைப் பெட்டி அல்லது வாழை இலையில் கட்டிக் கொடுக்கலாம்.
பூ, மக்கக்கூடிய பொருட்கள்:
பூக்கள், துளசி, பழத் தோல், மரத்தில் இருந்து உதிரும் இலைச்சருகு ஆகிய அனைத்தும் மக்கக்கூடிய பொருட்கள். இவற்றை மக்கவைத்து உரமாக்கி, மீண்டும் மண்ணுக்குக் கொடுப்பதே கோயில்களின் கடமை. குப்பைத் தொட்டியில் போட்டால், அது குப்பைக் கூடங்களில் பயனற்றுப் போய்விடும். கோயில் வளாகத்திலேயே மக்கும் குழிகள், கூடைகளை வைத்துப் பராமரிக்க வேண்டும். இதைப் பார்க்கும் பக்தர்களுக்கும் தங்கள் வீடு, நிறுவனங்களில் தூக்கி எறியப்படும் மக்கும் குப்பையைத் தாங்களே கையாள வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
மறுசுழற்சி:
துணி போன்றவற்றை மறுசுழற்சி முறையில் வேறு பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றலாம். பூக்களை இயற்கைச் சாயங்களாக, நறுமணமூட்டிகளாக மாற்றி, அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிக்கலாம். ஓரிடத்தில் இருந்து எதுவும் தூக்கி எறியப்படவில்லை என்ற நிலைக்கு மாற்றலாம்.
காடு வளர்ப்பு:
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம் என்றால், ஒரு சிறிய கோயிலில் பத்து மரமாவது வளர்க்கலாம். கோயிலுக்குள் உள்ள மரங்களைப் பற்றி பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். கோயில்கள் மட்டுமே நகரத்துக்கு உள்ளேயும் பல ஆண்டு முதிர்ந்த மரங்களைப் பாதுகாத்துப் பராமரிக்க சாத்தியமுள்ளவை.
நீர் ஆதாரங்கள்:
கோயிலுக்குள் மழைநீர் சேகரிப்பு மிக முக்கியம். கிணறுகளை பார்த்ததே இல்லை என்ற இன்றைய இளைய சமூகத்துக்குக் காட்டுவதற்குக் கோயில்கள் மட்டுமே கிணறுகளைக் கொண்டிருக்கின்றன. தகுந்த முறையில் மழைநீரைச் சேமித்தால் அந்தக் கிணற்றில் நீரை எப்பொழுதும் தக்கவைக்க முடியும். பெரிய கோயில்களில் உள்ள தெப்பகுளங்களுக்குள் நீர் வரும் பாதைகளை மீட்டுவாக்கம் செய்ய வேண்டிய கடமையும் கோயில்களையே சேரும்.
கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org
