Published : 20 Jul 2019 12:08 PM
Last Updated : 20 Jul 2019 12:08 PM

தண்ணீர் பிரச்சனை: கிராமங்களைக் கொல்லும் சென்னை

நித்தியானந்த் ஜெயராமன் 

சென்னையின் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி யாராவது பேச ஆரம்பித்தால், 34 வயதான மணிமாறனுக்குக் கடும் கோபம் வந்துவிடுகிறது. அவரைப் பொறுத்தவரை பிரச்சினை நீரில் இல்லை; மாறாக, சென்னை என்ற மாநகரம்தான் பிரச்சினைக்குக் காரணம் என்கிறார். மணிமாறனின் ஊர் சென்னையிலிருந்து 75 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் அமைந்திருக்கும் படாளம் என்ற கிராமம். வெள்ளையான மணற்பரப்புக்கும் செழிப்பான நிலத்தடி நீருக்கும் பெயர் பெற்றது பாலாறு.

சென்னையில் கட்டுமானத் தொழில் தீவிரமடைந்தபோது ரியல் எஸ்டேட் முதலாளிகள் பாலாற்றின் மணலைக் கட்டுப்பாடில்லாமல் அள்ளத் தொடங்கினார்கள். விளைவாக, அப்பகுதியின் நிலத்தடி நீர் மிகவும் கீழே செல்லத் தொடங்கியது. குளிர்பான நிறுவனங்களும் சாராய ஆலைகளும் கிராமப்புற – நகர்ப்புற நுகர்வோருக்காக நீரை உறிஞ்ச ஆரம்பித்தன.

“நாங்கள் பாலாற்றுக்குப் பக்கத்தில் வாழ்கிறோம். ஆனால், எங்களுக்கும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. எங்கள் வீட்டுக் குழாயில், மஞ்சள் நிறத்தில் - மிராண்டா குளிர்பானத்தின் நிறத்தில் தண்ணீர் வருகிறது. வேறு வழியில்லாமல், 20 லிட்டர் குடிநீரை 10 ரூபாய் கொடுத்து வாங்கியே குடித்துவருகிறேன்”, என்கிறார் மணிமாறன்.
சென்னையின் இன்றைய அசுர வளர்ச்சிக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய விலை, நீராதாரங்கள்தாம். 1980-ல் 47 ச.கி.மீட்டராக இருந்த சென்னையின் கட்டிடப் பரப்பு, 2010-ல் 402 ச.கி.மீட்டராக அதிகரித்திருக்கிறது. இதே காலத்தில் சென்னையின் சதுப்பு நிலப் பகுதிகளின் பரப்பு 186 ச.கி. மீட்டரிலிருந்து 71 ச.கி.மீட்டராகக் குறைக்கப்பட்டுவிட்டது என்று சென்னையைச் சேர்ந்த ‘கேர் எர்த்’ என்ற அரசுசாரா நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது.

கண்மூடித்தனமான வளர்ச்சி!

ஏறக்குறைய ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்பு சென்னையில் முதல் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சென்னை மாநகரின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் புழல் என்ற ஊரை ஆங்கிலேய அரசு 1876-ல் கையகப்படுத்தியது. 50 கோடி கன அடியாக இருந்த புழல் ஏரியின் கொள்ளளவு , 330 கோடி கன அடியாக அதிகரிக்கப்பட்டது. செங்குன்றம் ஏரி என்று பெயர் மாற்றப்பட்ட இந்த நீர்த்தேக்கம், தற்போது உள்ள மையப்படுத்தப்பட்ட பல நீர்த்திட்டங்களில் முதன்மையானது.

தொழில்நுட்ப வளர்ச்சி, உள்ளூர் நீராதாரங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அழித்துவிட்டதன் விளைவாக, உள்ளூர் தண்ணீர், நிலத்துடனான மக்களின் சார்பு வெகுவாகக் குறைந்தது. ஓராண்டில் வெள்ளம், மறு ஆண்டில் வறட்சி என்று சென்னை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாகி விட்டது.
ஆனால், சென்னை மாநகரம் வளர்ந்த விதத்திலேயே நீரை மதிக்காததன்மை இருந்ததையும், அதுதான் வெள்ளம் - வறட்சி என்ற இரட்டைப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதையும் நாம் உணரத் தவறிவிட்டோம். மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட்ட நிலையில், அரசும் லாப வெறி கொண்ட தனியார் நிறுவனங்களும் பேரழிவையும் நெருக்கடிகளையும் பயன்படுத்தி, சமூகரீதியாக ஒடுக்கும் தன்மைகொண்ட, அறிவுபூர்வமற்ற திட்டங்களான கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், நதிகளை இணைக்கும் திட்டம் போன்றவற்றைக் கொண்டுவருகின்றன.

மீண்டும் மீண்டும் தவறு

சென்னையிலிருந்து ஒரு மணிநேர பயணத் தொலைவில் இருக்கும் சூலேரிக்குப்பமும், படாளத்தைப் போல பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஊர்தான். அந்தக் கிராமத்தின் அடிகுழாய்களில் 2011 வரை நன்னீர் கிடைத்து வந்தது. ஆனால், சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதிகளின் தண்ணீர் தேவைக்காக நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் நீர் வழங்கும், கடல் நீர் சுத்திகரிப்புத் திட்டம் இந்த ஊரில் செயல்பட ஆரம்பித்த பிறகு கிராமத்தின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இதற்காக நில மேற்பரப்பை ஒட்டியிருக்கும் நிலத்தடி நீரைக் காப்பாற்றிய மணற்குன்றுகளைச் சமப்படுத்தினார்கள். அஸ்திவாரப் பள்ளத்தில் சேர்ந்த நீரை வெளியேற்ற 24 × 7 மணி நேரமும் இயங்குகிற பெரிய பம்புகளை இயக்க ஆரம்பித்தார்கள். இப்போது கடலுக்குள் கட்டப்பட்ட கட்டமைப்புகளின் காரணமாகக் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவர்களின் வீடுகளை விழுங்கும் அளவுக்குக் கடல் நெருக்கமாக வந்துவிட்டது.
அடிகுழாய்களின் இனிப்பான நீர், உவர்ப்பாக மாறிவிட்டது. கடல் நீரை நன்னீராக்கிய பிறகு வெளியேற்றப்படும் அதிக உவர்ப்பு கொண்ட நீர் கடலில் கலக்கப்படுவதால், மீன்கள் தொலை தூரத்துக்கு நகர்ந்துவிட்டன.

இதற்கிடையில், சென்னையின் நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்துவந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்துக் கட்டப்பட்ட ஐ.டி. தொழிலவளாகங்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காகச் சுத்திகரிக்கப்பட்ட நீர் குழாய்களின் வழியே பயணப்பட்டது. ஏற்கெனவே செயல்பட்டுவரும் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகளால் ஏற்படுத்தப்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், மேலும் இரண்டு கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகளைக் கட்டப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது: நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் திறன் கொண்ட ஆலை ஜெர்மனியின் KfW என்ற வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடனும், 40 கோடி லிட்டர் திறன் கொண்ட ஆலை ஜப்பான் உதவியுடனும் கட்டப்பட இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூர் சதுப்பு நிலங்கள் மீது அதே ஜப்பான் நாட்டு முதலீடு செய்துள்ள சென்னை – பெங்களூரு தொழில் வளாகப் பகுதி அமைந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் வளம் மிக்க ஆரணியாறு – கொசஸ்தலையாற்றைச் சார்ந்த வேளாண் பகுதிகளை ஆக்கிரமிக்கும். இயற்கையான நீராதாரங்களை அது அழிக்கும். நரகம் போன்ற தொழிற்சாலைக் கழிவு நிறைந்த நிலப்பரப்பு உருவாக்கப்படும்.

நீராதாரங்களைக் கொல்லுதல்

தண்ணீரை ஒற்றைப் பரிமாணமாகவும், அதன் இருப்பு அல்லது பற்றாக்குறையை ஒரு தீர்வு அல்லது பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் நோய்க்குப் பின்னணியில் ஒரு வரலாற்று அம்சம் பொதிந்துள்ளது. தமிழக கிராமப்புறங்களில் பொ.ஆ. 500-ல் இருந்து ஆங்கிலேயரின் வருகைக்கு முன்புவரை, ஆறாயிரத்துக்கும் அதிகமான, மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களை ஏரி என்ற பெயரில் உருவாக்கியிருந்தார்கள். மழைநீரை ஆதாரமாகக் கொண்டு உழவு செய்யும் பண்பாட்டில் வந்த அவர்கள், பல்வேறு பயன்பாடுகளுக்குத் தகுந்தாற்போலவும், இயற்கை நீரிருப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த ஏரிகளை கட்டமைத்தார்கள்.

வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் பெயரால் இயற்கையின் மீதான நம்முடைய தலையீடுகள், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் அமையவில்லை என்றால், அழிவு நாளை நாம் நெருங்கும் காலம் விரைவாவது மட்டுமே நடக்கும். நமது எதிர்காலத் தலையீடுகள் அனைத்தும் இயற்கை நிலப்பரப்பையும் நிலத்தடி நீரையும் அதிகரிப்பதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்; உயிரினப் பன்மையை மேம்படுத்த வேண்டும்; உள்ளூர் பொருளாதாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும்; பருவநிலைப் பேரழிவின் விளைவாக வரவிருக்கும் அதிபயங்கரமான, தவிர்க்க இயலாத பருவநிலை அதிர்ச்சிகளைத் தாங்கும் திறன் கொண்டதாக நமது நிலத்தை மாற்றியாக வேண்டும்.

பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்துக்கும், பண்பாட்டுக்குமான அடித்தளமாகச் சதுப்பு நிலங்கள் அமைந்தன. குயவர்கள், மீனவர்கள், வேடர்கள், உழவர்கள், நெசவாளர்கள், கள் இறக்குபவர்கள், நாணல்- கைவினைஞர்கள், உணவு சேகரிப்பவர்கள் எனப் பல்வகை மக்களும் சதுப்புநிலப் பன்மைத் தன்மை நிறைந்த பூமியில் வாழ்க்கை நடத்திவந்தார்கள். நீர்ப்பாசனக் கால்வாய்கள், ஓடைகள் அல்லது நதிகளை இணைக்கும் கால்வாய்கள் அல்லது உருவாக்கப்பட்ட சதுப்பு நிலங்களின் கரைகளை ஒருபோதும் பூசியதில்லை.

உயிர்கள் எங்கும் இருக்கின்றன என்று அவர்கள் கருதினார்கள். நீர் பூமிக்குள் இறங்கிச் செல்ல விட்டனர். அதன் மூலம் தாழ்வான பகுதியில் உள்ள நீரோடைகளுக்கு உயிர் அளித்தார்கள். நவீன வளர்ச்சி இவை அனைத்தையும் மாற்றியது. உள்ளூர் பண்பாட்டாலும், உயிர்ச்சூழலாலும் புவியியலாலும் உருவாக்கப்பட்ட பாரம்பரியக் கைவினைப் பொறியாளர்களின் இடத்தை வகுப்பறைகளில் மட்டுமே பொறியியலைப் படித்த சிவில் இன்ஜினீயர்கள் பிடித்துக்கொண்டனர்.

கொடுக்கப்பட்ட விலை

1940களில் சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவில், பூண்டியில் நீர்த்தேக்கம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. 1942-ல் கொசஸ்தலை ஆற்றின் ‘முக்கொம்பு’ போன்ற இடத்தில், கூவம் ஆறு பிரியும் புள்ளியில், அணை ஒன்றை அரசு கட்டியது. கொசஸ்தலை ஆற்றின் நீர் முழுவதும் பூண்டிக்குத் திசை திருப்பப்பட்டு, அங்கிருந்து சென்னையைச் சென்றடைந்தது. சென்னையின் மக்கள்தொகை 1941 - 1951-க்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் 82% அதிகரித்து சுமார் 14 லட்சமாக உயர்ந்தது. இந்த அதிகரிப்புக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது.
இன்றைக்கு கூவம் தனது முதல் 40 கி.மீ. தொலைவுக்கு நீரின்றிக் கிடக்கிறது. கூவம் சென்னைக்குள் நுழையும் திருவேற்காட்டில்தான் நதியில் நீரைப் பார்க்க முடிகிறது. ஆனால், அது நீர் அல்ல, சாக்கடை. “கூவம் இறந்துபோகவில்லை. அது கொல்லப்பட்டது” என்கிறார் வரலாற்று ஆர்வலரும், சென்னை வரலாற்றுப் பதிவாளருமான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.

சென்னை மீளுமா?

சென்னை மாநகருக்கு ஒரு எதிர்காலம் இருக்க வேண்டுமென நினைத்தால், அது மக்கள்தொகை, பரப்பளவைச் சுருக்கிக்கொண்டாக வேண்டும். மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் அதைச் செய்யக் கூடாது. மாறாக, தமிழ்நாட்டின் உள் பகுதிகளுக்கு இடம்பெயர விரும்புபவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். சென்னை மாநகரைத் தீர்மானிப்பவை கடல், மழை, மழையின்மை ஆகிய மூன்றும்தான். நம்முடைய தண்ணீர் பிரச்சினை என்பது, வெறும் தேவை - உற்பத்தி சார்ந்த ஒன்று மட்டுமல்ல; மாறாக, நிலத்துக்கும் நீருக்கும் இடையிலான உறவு முறிந்துபோய்விட்டதன் அடையாளம் அது.

இயற்கையுடனான தன் உறவை பழுதுபார்த்துக் கொள்ளாதவரை, நீரால் ஆன கல்லறை அல்லது நீரேயில்லாத பாலைவனம் என்ற இரட்டை சாபத்துக்கு இலக்கான ஒரு மாநகரமாக சென்னை இருப்பதைத் தவிர்க்க முடியாது.
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: nity682@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x