

தேயிலை விற்பனை சரிவு
விற்பனை விலைக் குறைவால் 3.92 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை குன்னூரில் தேங்கியுள்ளது என குன்னூர் தேயிலை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜூலை மூன்றாம் வாரத்தில் ஒரு கிலோ தேயிலை ரூ.79.10க்கு விலை போனது. இது அதற்கு முந்தைய வார விலையைவிட ரூ.5 குறைவாகும். மேலும், கடந்த 12 மாதங்களில் இதுதான் மிகக் குறைந்த விலை என வியாபாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.
இயற்கை விவசாயம் அதிகரிப்பு
இயற்கை விவசாயம் 27.7 லட்சம் ஹெக்டராக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய உழவுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இது 23.02 லட்சம் ஹெக்டராக இருந்தது. இந்திய அளவில் மத்தியப் பிரதேசம் இயற்கை விவசாயத்தில் முதலிடம் வகிக்கிறது. 7.55 லட்சம் ஹெக்டர் பரப்பில் அந்த மாநிலத்தில் இயற்கை விவசாயம் நடக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் இயற்கை விவசாயத்தில் 4.11 லட்சம் ஹெக்டர் பரப்புடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. மகாராஷ்டிரம், ஒடியா ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்த இடங்களைப் பெறுகின்றன.
வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்பத் துறையின் சார்பில் ‘தயார்நிலை உணவு தயாரித்தல்’ பயிற்சி நடத்தப்படவுள்ளது. இந்த மாதம் 26, 27 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.1,500. பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்குத் துறைத் தலைவரை 0422 6611268 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவேண்டும்.
தொகுப்பு: விபின்