

காபி குடிக்கலாம், செடி வளர்க்கலாம்!
காபி குடித்துவிட்டுக் கப்பை வீசியெறிந்தால் குப்பை வளரும் என்பது தெரியும்; ஆனால், செடிகள் வளர்கின்றன என்பது தெரியுமா? நீங்கள் குடிக்கும் காபி கோப்பையில் விதைகள் இருந்தால், வளரத்தானே செய்யும். அப்படிப்பட்ட கோப்பைகளை, அதாவது விதைகள் பதிக்கப்பட்ட இயற்கை முறையிலான கோப்பைகளை ரெடியூஸ்.ரீயூஸ்.குரோ என்ற அமெரிக்க நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
தூக்கியெறியப்படும் ஒரு கோப்பையிலிருந்து முளைக்கக்கூடிய மரம் 40 ஆண்டு காலத்தில் நம் வளிமண்டலத்திலிருந்து ஆயிரம் கிலோ கரிம வாயுவைக் குறைக்கக்கூடும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கோப்பைகளில் உள்ளூர் சூழலுக்கு இசைவான தாவரங்களின் விதைகள்தான் வைக்கப்பட்டிருக்கும் என்பது கூடுதல் தகவல். வாங்க ஒரு கப் காபி சாப்பிடலாம், சூழலைக் காக்க!
மாசுபாட்டின் வயசு தெரியுமா?
சென்னையின் காற்று மாசுபாடு பற்றி புகைபறக்க(!) நிறைய விவாதிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்புரட்சிக்குப் பிறகுதான் காற்று மாசுபாடு ஆரம்பித்ததாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், காற்று மாசுபாட்டுக்கு வயது அதிகம் ஓய்! ஆமாம், பெருவின் ஆண்டிஸ் மலைத் தொடரில் 500 ஆண்டுகளுக்கு முன்பே காற்று மாசுபட்டிருந்ததற்கான சான்றுகள் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்திருக்கின்றன. அந்த மாசுபாட்டுக்குக் காரணம் என்ன தெரியுமா? அண்டை நாடான பொலிவியாவில் இருந்த வெள்ளிச் சுரங்கங்கள்தான். எல்லை கடந்த மாசு பயங்கரவாதம்!
இனி மூக்கைப் பிடிக்க வேண்டாம்!
எவ்வளவு மோசமான வயிற்றுப்போக்காக இருந்தாலும், பொதுக் கழிப்பிடத்தை தூரத்தில் பார்த்தாலே தானாக நின்றுவிடும். தூய்மை இந்தியாவின் லட்சணம் அப்படி.
ஆனால், நிலைமை மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மும்பை ஜார்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் ராகுல் துலே புதிய கழிப்பறை உத்தியைக் கண்டுபிடித்திருக்கிறார். குடிநீருக்கும் சுகாதாரத்துக்குமான அமைச்சகத்தால் நடத்தப்பட்ட ‘இண்டோவேஷன்-2015’ நிகழ்வில் தனது கண்டுபிடிப்பை டாக்டர் ராகுல் முன்வைத்திருக்கிறார்.
ஒருவகையான பாக்டீரியாவைக்கொண்டு, மனிதக் கழிவை மட்கச் செய்யும் உத்திதான் இந்தக் கண்டுபிடிப்பில் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஃபிளஷிங்கில் பயன்படுத்தப்படும் நீரை, மறுசுழற்சி முறையில் இந்த பாக்டீரியாவைக் கொண்டு சுத்தம்செய்ய முடியும் என்றும் ராகுல் நிரூபித்திருக்கிறார். இந்த பாக்டீரியா, துர்நாற்றத்தை அகற்றுவதுடன் நீரையும் ஸ்படிகம் போல் ஆக்குகிறது.
இந்த வகையில் வடிவமைக்கப்பட்ட கழிப்பறை சாதனங்கள் மும்பையின் சேரிப் பகுதிகளில் இடம்பிடிக்கவிருக்கின்றன. இதன் விலை ரூ. 60,000 என்றாலும் 40-50 ஆண்டுகள்வரை நீடித்து உழைக்கக்கூடியது. லிட்டர் லிட்டராக நீரை வீணடிக்கும் நமக்கு இது பெரிய வரப்பிரசாதமல்லவா?!