

வேளாண்மையில் உற்பத்தித் திறன் என்ற கருத்தாக்கம் அடிக்கடி முதன்மைப்படுத்தப்படுவது உண்டு. உலக வேளாண்மை வரலாற்றில் மனிதர்கள் தங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி, உணவுத் தேவையை நிறைவு செய்துகொண்டனர். பின்னர், பண்ணை விலங்குகளைப் பயன்படுத்தி உணவு பெறும் நுட்பங்களைப் பெருக்கினர். இப்படியாக வேளாண்மை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு புது வடிவத்தைப் பெற்றது.
தேவைக்கான உற்பத்தி
அதன் பயனாகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வேளாண்மை பேசப்படும் அண்மைக் காலங்களில், ஓர் ஏக்கரில் அல்லது ஓர் ஹெக்டேரில் எவ்வளவு விளைச்சல் எடுக்கப்படுகிறது என்ற கணக்கை முன்வைத்து விவாதிக்கப்படுகிறது. முன்னர்த் தேவைக்கான உற்பத்தி என்றிருந்தபோது, இந்தக் கணக்கு முன்வைக்கப்படவில்லை. தனக்கும் தனது அண்டைச் சமூகத்துக்கும் தேவையான உற்பத்தி நடந்தால் போதுமானது என்ற பார்வையே இருந்தது.
ஆனால், வணிகமயமாகிவிட்ட வேளாண் சூழலில் விளைச்சல் கணக்கு பெரிதும் முதன்மைப்படுத்தப்படுகிறது. இதை உற்பத்தித் திறன் (productivity) என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட இடத்தில் அதிகபட்ச விளைச்சல் எடுப்பவர், சிறந்த உற்பத்தியாளர் யார் என்று கவனிக்கப்படுகிறார். இது ஒரு வகையான ஒப்பீட்டு கணக்காகப் பார்க்கப்படுகிறது.
ஒப்பீட்டு கணக்கு
குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்ட உழவர்களின் விளைச்சலையும் ஈரோடு மாவட்ட விவசாயிகளின் விளைச்சலையும் ஒப்பிட்டு, ஈரோடு மாவட்ட விவசாயிகளின் உற்பத்தி அதிகமாக உள்ளதால், அவர்களுடைய உற்பத்தித் திறன் அதிகம் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.
அதேபோல விளைச்சலை நாட்டுக்கு நாடு ஒப்பிட்டுக்கொள்கின்றனர். இந்திய உழவர்களைவிட, சீன உழவர்கள் உற்பத்தித் திறன் மிக்கவர்கள். அமெரிக்க உழவர்கள் அதைவிட அதிக உற்பத்தித் திறன் மிக்கவர்கள் என்று ஒப்பிடுவார்கள்.
நாட்டுக்கு நாடு
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் 2011-ம் ஆண்டு ஒரு ஹெக்டேருக்கு 3,590 கிலோ நெல் விளைந்துள்ளது, சீனாவில் ஹெக்டேருக்கு 6,686 நெல் கிலோ விளைந்துள்ளது. ஆகவே, இந்திய உழவர்களின் வேளாண் முறை, திறன் குறைந்தது என்ற கருத்தை முன்வைப்பார்கள்.
அதேபோல, இந்தியாவில் ஹெக்டேருக்கு 1,661 கிலோ கோதுமை விளைந்துள்ளது, சீனாவிலோ ஹெக்டேருக்கு 4,838 கிலோ கோதுமை விளைந்துள்ளது என்றும் நமது கொள்கை வகுப்பாளர்கள் கூறுவார்கள். இதேபோல அமெரிக்கா ஹெக்டேருக்கு 7,500 கிலோ நெல்லை உற்பத்தி செய்துள்ளது. மேலும் அது ஹெக்டேருக்கு 3,110 கிலோ கோதுமையை உற்பத்தி செய்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நம்பகத்தன்மை கொண்டவைதாம். ஏனெனில், இதை வெளியிட்டவர்கள் உணவு, வேளாண்மை நிறுவனத்தினர் (F.A.O.).
இது சரியா?
ஆகவே, இதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு நம்முடைய வேளாண்மை பிற்போக்கானது, பத்தாம் பசலித்தனமானது, மிகுந்த உற்பத்தி எடுக்கும் வித்தக நாடுகளின் பின்னால் சென்று அவர்களுடைய முன்னேற்றமான -முற்போக்கான உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அதற்காக அவசர அவசரமாகத் திட்டங்களை வகுக்கின்றனர். அதிக அளவு எந்திரங்கள், அதிக அளவு வேதி உரங்கள் என்று மிகவும் செலவு பிடிக்கக்கூடிய எந்திரமயமான மேற்கத்திய வேளாண்மையை வலிந்து புகுத்துகின்றனர்.
உண்மையில் உற்பத்தித் திறன் எது என்பது, இவர்கள் கூறும் அளவுகோல்களை வைத்துப் பார்த்தால் மேற்கண்டவாறே தோன்றும். ஆனால், இது ஒரு குறையுடைய பார்வை.
எப்படிப் பார்க்க வேண்டும்?
உற்பத்தித் திறனை அதாவது உண்மையான உற்பத்தித் திறனை, நீடித்த உற்பத்தித் திறனை அளவிட வேறு சில அளவீடுகளும் (parameters) தேவைப்படுகின்றன. ஆனால் ரசாயன, எந்திர வேளாண்மை ஆதரவாளர்கள் (கருவிகளை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மையை முழுமையாக மறுக்க வேண்டுமென்பதில்லை. எந்திரமயத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட வேளாண்மையைத்தான் எதிர்க்கிறோம்.) அந்த அளவீடுகளைக் கணக்கில் எடுப்பதில்லை.
இதில் ஒன்றுதான் ஆற்றல் திறன்மை (energy efficiency) எனப்படும் அளவீடு. அதாவது, ஓர் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும்போது எவ்வளவு ஆற்றலை உள்ளீடு செய்கிறீர்கள், எவ்வளவு ஆற்றலை அதிலிருந்து திரும்பப் பெறுகிறீர்கள் என்பது முதன்மையானது. அப்படியான கணக்கில் பார்த்தால் சீனாவும், அமெரிக்காவும் மட்டுமல்ல ரசாயன ஆதரவாளர்களும் அதல பாதாளத்தில் போய் விழுந்துவிடுவார்கள்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com