

ரசாயன வேளாண்மை இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பு இந்திய உழவர்களின் சாகுபடி முறை முற்றிலும், தேவையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சந்தையை நோக்கி விளைவிக்கும் எந்த முறையையும் அப்போது அவர்கள் செய்யவில்லை, அதை விரும்பவும் இல்லை. உழவர்களைச் சந்தையை நோக்கித் திருப்பும்போதெல்லாம், அவர்கள் அதை எதிர்த்தே வந்துள்ளனர். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு சம்ரான் போராட்டம்.
ரசாயனங்களின் வருகை என்பது உழவர்களை மெல்லச் சந்தையை நோக்கித் தள்ளிவிட்டது. தேவைக்கான உற்பத்தி என்பது மாறி, சந்தைக்கான உற்பத்தி என்று ஆகிவிட்டது. இதனால் சந்தையால் உழவர்கள் சூறையாடப்பட்டனர். தாங்கள் விளைவிக்கும் பொருட்களைச் சந்தையில் கொண்டுபோய் விற்கும்போது வணிகர்களால் ஏமாற்றப்படுகின்றனர். பின்னர் தங்களது தேவைக்கான பொருட்களைச் சந்தையில் வாங்கச் செல்லும்போதும் ஏமாற்றப்படுகின்றனர்.
லாபம் ஒன்றே குறிக்கோள்
சந்தை என்பது வணிகத்துக்கான முதன்மைக் களம். வணிகம் தழைத்தோங்கச் சந்தை அவசியம். வணிகத்தின் நோக்கம் அறம் என்பது மாறி, லாபம் என்று உருமாறியபோது உழவர்களின் நிலை மேலும் சிக்கலுக்கு உள்ளாகிறது. விளைவிப்பவர்களின் பங்கைப் பெரிதும் சுரண்டி, அதை வாங்கி விற்பவர்கள் பெரும் லாபம் பார்க்கின்றனர். இதன் விளைவாகவே உழவர்களின் வாழ்க்கை மிக மோசமடைந்துவிட்டது.
திறந்துவிடப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில், அதாவது உலகமயமாக்கத்தில் எந்தப் பொருளையும் எங்கும் கொண்டு விற்கலாம் என்று கூறிவிட்டு, எப்போதெல்லாம் வேளாண் பொருள் விலை ஏறுகிறதோ அப்போதெல்லாம் அதற்குத் தடை போடுவார்கள். அது மட்டுமல்லாது தேங்காய் விலை ஏறும்போது செம்பனை எண்ணெயை (பாமாயிலை) இறக்குமதி செய்து உழவர்களின் வயிற்றில் அடிப்பது, நமது அரசுகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.
இயற்கை விளைச்சல்
இந்தச் சூழ்நிலையில் தற்சார்பை இழந்த உழவர்களின் வாழ்க்கையில் சிறிய அளவாவது ஒளி பாய்ச்ச முனைவது, இயற்கைவழி வேளாண்மை எனப்படும் தற்சார்பு வேளாண்மை. வெளிப் பொருட்களைப் பெரிதும் குறைத்துக்கொண்டு, பண்ணையில் கிடைக்கும் கழிவுகளைக்கொண்டே சாகுபடியைக் கையாளும் முறை இது.
உலகம் முழுமையும் பெருகிவரும் இந்த ரசாயனம் அல்லாத வேளாண்மையை உயிர்ம வேளாண்மை (Organic farming) என்று குறிப்பிடுகின்றனர். இயற்கை வேளாண்மை என்ற சொல்லாடல் (Natural farming) இயற்கையையே வேளாண்மை செய்யவிட்டு, அதை நாம் அறுவடை செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். இதை ஜப்பானைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகா உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இது ஒரு வகையான முறை. இதன் மூலம் இயற்கை தரும் இயல்பான விளைச்சலே கிட்டும்.
உயிர்ம வேளாண்மை
ஆனால், ரசாயனம் அல்லாத வேளாண்மையான உயிர்ம வேளாண்மை முறையில் பல நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன, பல நொதிப்புக் கரைசல்கள் பயன்படுத்தப்படும். ஆனால், ரசாயனம் பயன்படுத்தப்படுவதில்லை. அதாவது உயிரியல் காரணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வேளாண்மை, உயிர்ம வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது. இதைக் குறிப்பதற்கு அங்கக வேளாண்மை என்ற சொல்லைச் சிலர் பயன்படுத்துகின்றனர்.
அங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு உறுப்பு அல்லது உடல் என்று பொருள். எங்கும் இதற்கு உயிர் என்ற பொருளே கிடையாது. ஆனால், அதில் இருந்து தவறாக அங்ககம் என்ற சொல்லை ஆக்கிக்கொண்டனர். சொல்லாக்கத்தில் இது பலப்பல சிக்கல்களைப் பின்னர் உருவாக்கப்போகிறது.
இது ஒருபுறம் இருக்க உயிர்மக் காரணிகளையும், நுண்ணுயிர்களையும் கொண்டு செய்யப்படும் உயிர்ம வேளாண்மைக்குத் தமிழகத்தில் இன்னும் ஒரு கொள்கை உருவாக்கப்படவில்லை என்பதுதான் சோகம். புகழ்பெற்ற உயிர்ம வேளாண்மை வல்லுநர்கள் தமிழகத்தில் உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து, பலர் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர்.
மற்ற மாநிலங்களில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம், சிக்கிம், மிசோரம், மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், நாகாலாந்து, அண்மையில் குஜராத் போன்ற பல மாநிலங்கள் உயிர்ம வேளாண்மைக்கான கொள்கையை வெளியிட்டு, அதற்கான திட்டங்களையும் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன. இதுவரை ஒன்பது மாநிலங்கள் உயிர்ம வேளாண்மைக் கொள்கைகளை அறிவித்துள்ளன. கர்நாடக அரசு 200 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்தக் கொள்கை ஏன் வேண்டும் என்றால், ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒரு கொள்கை வேண்டும். முதலில் கொள்கை உருவாக்கப்பட்டு அந்தக் கொள்கைக்கு ஏற்ற திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதன் பிறகு அதற்கான துறை உருவாகும். திட்டங்கள் மக்களைச் சென்றடையும்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com