Last Updated : 06 May, 2014 01:48 PM

 

Published : 06 May 2014 01:48 PM
Last Updated : 06 May 2014 01:48 PM

இயற்கையின் அழகிய குரல்

இயற்கை ஆர்வலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சர் டேவிட் அட்டன்பரோவுக்கு மே 8-ம் தேதி 88-வது பிறந்த நாள். ஆங்கிலம் பேசும், கேட்கும் உலகில் இவரைத் தெரியாத யாருமே இருக்க முடியாது. அவருடைய குரலும் தோற்றமும் 60 ஆண்டுகளையும் தாண்டி மக்களை ஆண்டுவருகின்றன.

இலங்கை வானொலியின் காலம்சென்ற கே.எஸ். ராஜா, தற்போதைய பி.ஹெச். அப்துல் ஹமீது ஆகியோருக்கெனத் தனி இடம் உள்ளதுபோல், இவருடைய ஆங்கிலத்துக்கும் மிகப் பெரிய மவுசு உண்டு. இவர் வழங்கும் நிகழ்ச்சிகள் 'அட்டன்பரோ பிரசென்ட்ஸ்...' என்றுதான் விளம்பரம் செய்யப்படுகின்றன. இதுவே, உலக அளவில் அவருடைய குரல் பெற்றுள்ள அங்கீகாரம்.

அவருடைய குரலுக்கு உள்ள மதிப்பைப் போலவே அவருடைய நிகழ்ச்சிகளுக்கும் புத்தகங்களுக்கும் அப்படி ஒரு மரியாதை.

அட்டன்பரோ இங்கிலாந்தின் விலைமதிப்பற்ற சொத்தாகவே கருதப்படுகிறார். 2002-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் மிகச் சிறந்த 100 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘காந்தி' படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பிதான் டேவிட் அட்டன்பரோ.

இயற்கைக் காதலர்

இயற்கை மீது டேவிட் அட்டன்பரோவுக்கு உள்ள அளவற்ற ஈடுபாடு, இயற்கை குறித்து அவர் வழங்கிய நிகழ்ச்சிகள், அவர் எழுதிய புத்தகங்கள் யாவுமே புகழ்பெற்றவை. பி.பி.சி-க்காக அவர் எழுதி வழங்கிய 'லைஃப் சிரீஸ்' என்ற தொலைக்காட்சி தொடர் இன்றைய வன உயிர் ஆவணப்படங்களுக்கெல்லாம் முன்னோடி. இயற்கை தொடர்பான விஷயங்களை, அழகியல் உணர்வுடனும், மொழி அழகுடனும், தொழில்நுட்பத்துடனும் சேர்த்துக் கொடுத்ததன் மூலம் ஒரு சகாப்தத்தையே தொடங்கிவைத்தவர் அட்டன்பரோ.

பி.பி.சி. 2 தொலைக்காட்சி அலைவரிசையின் இயக்குநராகவும் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். பி.பி.சி. 2-ல் ஒளிபரப்பப்பட்ட 13 தொகுதிகள் அடங்கிய 'மேற்கத்திய கலைகளின் வரலாறு' நிகழ்ச்சியைத் தயாரிக்க அனுமதி வழங்கியது இவர்தான். வண்ணத் தொலைக்காட்சியின் சக்தியை உணரவைத்த நிகழ்ச்சி அது.

‘லைஃப் ஆன் எர்த்' தொடரின் வெற்றிக்குப் பிறகு 'த லிவிங் பிளானெட்' தொடர் பி.பி.சி-யில் ஒளிபரப்பப்பட்டது. இயற்கை, சுற்றுச்சூழல் பிரக்ஞை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்தத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. பறவைகளின் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 1998-ல் அட்டன்பரோ எடுத்த 'த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்' தொடர் அவருடைய வாழ்வில் மிகவும் கவித்துவமான பகுதியாகும். எப்பேர்ப்பட்ட பறவையையும் மயக்கித் தன் அருகில் வர வைக்கக்கூடிய திறமை வாய்க்கப்பெற்றவர் அவர். பறவைகளின் பாடல்களும் அவருக்கு அத்துப்படி. சக பறவையொன்றைப் போலவே பறவைகள் அவரைக் கருதின.

2006-ல் பி.பி.சி. தயாரித்த 'பிளானெட் எர்த்' நிகழ்ச்சிதான் தொலைக்காட்சி ஆவணப் படங்களிலேயே 'ஹை டெஃபனிஷன்' கேமரா கொண்டு எடுக்கப்பட்ட மிகப் பெரிய நிகழ்ச்சி. விவரணையாளராக அட்டன்பரோ அந்தப் படத்துக்கு மேலும் அழகூட்டினார்.

தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் வானொலியிலும் அட்டன்பரோ பங்களித்துள்ளார்.

சமீபத்தில் பி.பி.சி. 4 வானொலிக்காக இவர் தொகுத்தளித்த 'ட்வீட் ஆஃப் த டே' நிகழ்ச்சியில் இங்கிலாந்திலுள்ள 265 பறவைகளின் பாடல்களையும் குரல்களையும் தொகுத்தளித்தார். குரல்வழியே இங்கிலாந்தின் பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு இது ஓர் அற்புத வழிகாட்டி.

கௌரவம்

கறுப்பு-வெள்ளை, வண்ணம், ஹை டெஃபனிஷன், முப்பரிமாணம் ஆகிய நான்கு வகைகளிலும் பேஃப்டா (British Academy of Film and Television Arts) விருதைப் பெற்ற ஒரே நபர் அட்டன்பரோதான். இங்கிலாந்து அரசு அவருக்கு சர் பட்டம் அளித்துக் கௌரவித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையின் அற்புதமான காதலர் என்ற விருதை உலக மக்கள் இவருக்கு அளித்திருக்கிறார்கள். எனவே, ஏதாவது வலசைப் பறவையைப் பார்த்தால் 'டேவிட் அட்டன்பரோ எப்படி இருக்கிறார்?' என்று கேட்டுவையுங்கள்.

- ச.மாறன், ஆங்கில இணைப் பேராசிரியர், தொடர்புக்கு: rathidevimaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x