

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மட்டுமின்றி நாட்டின் மற்ற வனவிலங்கு சரணாலயங்களிலும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நிகழும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு அது. கடும் வறட்சி காரணமாகக் காய்ந்து போன காட்டில், யானைகள் அடுத்தடுத்து இறந்துபோகும் நிகழ்வுகளையே குறிப்பிடுகிறேன். கடந்த மூன்று மாதங்களில் குறைந்தது 10லிருந்து 15 யானைகள் வரை பல்வேறு காடுகளில் இறந்திருக்கின்றன. ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை 4 முதல் 5 யானைகள் இறந்துபோயிருக்கின்றன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. முந்தைய வருடங்களிலும் இறப்பு விகிதத்தில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
வனத்துறையில் உள்ள கால்நடை மருத்துவரோ அல்லது அருகிலுள்ள மருத்துவரின் உதவியுடனோ செய்யப்படும் பிரேதப் பரிசோதனைகள் நுணுக்கமாகச் செய்யப்படுபவை அல்ல. நேரமின்மையும் ஆள் பற்றாக்குறையுமே இதற்குக் காரணம். அத்துடன் பல நேரம் உண்மை வெளிவருவதால் நேரும் சங்கடங்களை முன்கூட்டியே தவிர்க்கும் மனப்பான்மையும் அதிகம் இருக்கிறது! மேலும் எல்லாக் கால்நடை மருத்துவர்களும் டாக்டர் கே எனப்பட்ட யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அல்ல என்பதும் முக்கியமான உண்மை.
உண்மைக் காரணம் என்ன?
இறப்புக்கு நீர்ச்சுருக்கு (Dehydration), அல்லது மலக்குடல் அடைப்பு அல்லது இறுக்கம் (Compaction) அல்லது குடற்புழு நோய் - போன்றவை காரணமாக இருந்தாலும், இந்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதை அறிய யாருக்கும் பொறுமையும் இல்லை, முனைப்பும் இல்லை. அந்த அளவுக்கு முனைந்து பணியாற்றும் திறன் கொண்டவர்களும் இல்லை.
இந்தப் பின்னணியில் வனவிலங்கு ஆர்வலர்கள், இயற்கையை நேசிப்பவர்களின் அனுபவங்களுடன், எனது அனுபவத்தில் அடிப்படையில் சில விஷயங்களை விவாதிக்கலாம். கீழ்க்கண்டவைதான் யானை இறப்புக்குக் காரணங்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும், இவை நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூற முடியாது.
கருவேல விஷம்
குளிர் மற்றும் இளவேனில் காலங்களில் முதுமலை, பந்திபூர், பிலிகிரி ரங்கன் காட்டுப் பகுதிகளிலிருந்து சத்தியமங்கலம் பகுதிக்கு வலசை வரும் யானைகள், கோடையில் அதே பகுதிகளுக்குத் திரும்ப இயலாதவகையில் சில வருடங்களில் எல்லாப் பகுதிகளிலும் கடும் வறட்சி வந்துவிடும். கோடை மழையும் பொய்த்துவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அப்போது அவை தீவனம் இன்றி, குடிக்க நீரும் இன்றி பசுமை கருகிப் போன காட்டில் அலைய நேரிடுகிறது.
யானையைப் போன்ற பேருடல் கொண்ட விலங்குகளுக்கு இந்நிலை பெரும் கஷ்டத்தைக் கொடுத்துவிடும். அப்போது ஓரளவு பசுமையாகத் தழைத்துக் காணப்படும் தாவரம் சீமை கருவேலம் (Prosopis juliflora). மட்டுமில்லாமல், கடும் கோடையில்தான் அவை பூத்துக் காயாகிப் பழுக்கின்றன. துரதிருஷ்டவசமாக, சத்தியமங்கலம் காடுகளிலும் மற்றச் சரணாலயங்களிலும் இத்தாவரம் வேரூன்றிவிட்டது. சில இடங்களில் காட்டிலிருந்த இயற்கையான உள்நாட்டு தாவரங்களையும் அவை அழித்துவிட்டன. அறுபதுகளில் இடப்பட்ட அந்த விஷவிதை இப்படிக் காடுகளை அழிக்கும் சக்தியாக உருவெடுத்து, காட்டுயிர்களைக் காவு வாங்குவதாகவும் உருவாகிவருகிறது.
உண்ணப் பசுந்தழையும் புற்களும் இல்லாத காட்டில் சீமை கருவேல மரங்களின் இலைகளும் காய்களும் யானைகளைக் கவர்வதில் வியப்பில்லை. பல வருடங்களாக இத்தாவரம் காட்டில் இருப்பதைக் கண்டும், அவற்றை ஒரு உணவுச் செடியாக யானைகள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இத்தாவரத்தின் விஷத்தன்மையும் உடலின் நீர்ப் பற்றாக்குறையும் யானைகளின் பெருங்குடல், மலக்குடலைப் பாதிக்கின்றன. சீமை கருவேலத்தில் உள்ள வேதிப்பொருளான டேனின் (Tanin) என்ற விஷத்தை முறிக்கப் பல மடங்கு நீர் தேவை. அதாவது, சாதாரணமாக அருந்தும் நீரைவிட. கடும் வறட்சியில் நீர் கிடைக்காது. அல்லது நெடுந்தூரம் நீரைத் தேடிச் செல்ல நேரிடும். இவை யானைகளின் உடல்நலனைப் பாதிக்கும். குறிப்பாகக் கருவுற்ற பெண் யானைகளும் குட்டிகளும் பெரும் இடரைச் சந்திக்கின்றன. கடந்த ஆண்டும், இந்த மாதமும் சத்தியமங்கலத்தில் நிகழ்ந்த இறப்புகள், இந்த உண்மையை உணர்த்துகின்றன.
"சீமை கருவேலத்தின் வித்துகள், நெற்றுகளை அதிகம் உண்ணும் ஆடுமாடுகள் இறந்து போகின்றன. இந்த விதைகள் மலக்குடலை அடைத்து, செரிமானக் கோளாறை உண்டாக்கிக் கால்நடைகளை மெதுவாகக் கொல்கின்றன. இயற்கையாக உண்டாகும் நுண்ணுயிரிகளையும் (பாக்டீரியா) இவை அழிக்கின்றன" என்கின்றன கென்ய நாட்டு ஆய்வுகள்.
இயல் தாவர அழிவு
காட்டில் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட மரம் செடி, கொடிகள் பூத்துக் காய்க்கும் இயற்கையான சுழற்சி உண்டு. இதன் விளைவாக எல்லாப் பருவத்திலும் காட்டுயிர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். சத்தியமங்கலத்தி்ல் இயற்கையாகக் காணப்படும் இயல்தாவரங்கள் (உள்நாட்டு தாவரங்கள்) வெகுவாகக் குறைந்ததுடன், அவற்றைப் பெருக்கத் தகுந்த நடவடிக்கை இல்லாததும், இந்த இயற்கைச் சுழற்சியையும் காட்டுயிர்களையும் பாதித்துள்ளது.
உதாரணமாக வெள்வேலம் மரமும், ஆச்சா மரமும் கடுங் கோடையில்தான் துளிர்த்துப் பூத்துக் காய்க்கும். கோடையில் இம்மரங்கள் செறிந்த சின்ன காடுகளில் யானைகளைக் காணலாம். ஆனால், இந்த மரங்கள் தற்போது அருகி வருகின்றன. சீமை கருவேலத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி, ஊடுருவல் மற்றும் தவறான மரம் நடு கொள்கை போன்றவை இந்த இயல் மரங்களின் அடர்த்தியைக் குறைக்கின்றன.
இந்தத் தொடர்பை விளக்கும் கென்யாவில் நடந்த ஆய்வின் முடிவு: இல் கேமஸ் என்ற பழங்குடியினர், சீமை கருவேலத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்கின்றனர். ஏனென்றால், அது நிலத்தடி நீரை உறிஞ்சி பூமியை வறண்டுபோகச் செய்கிறது. அதனால் மற்ற இயல் மரங்கள் பட்டுப்போகின்றன. மற்றத் தாவரங்களையும் அவை அழித்து வளர்வதால், நாம் இதுவரை பயன்படுத்தி வந்த நாட்டுத் தாவரங்கள் இல்லாமல் போகின்றன"
காடு ஆக்கிரமிப்பு
சத்தியமங்கலம் பகுதியில் பூதிக்குப்பை, சுஜ்ஜல்குட்டை, குமரன் சாலை, மணல்மேடு, கெம்பொறை போன்ற பகுதிகளில் பழங்குடி அல்லாதோரின் ஆக்கிரமிப்பும், காட்டை விளைநிலமாக்கும் போக்கும் கூடுதலாகக் காணப்படுகிறது. யானைகள் இயற்கையாக நீர்நிலையைத் தேடிவரும் வழியில் - அதாவது பவானிசாகர் காட்டிலிருந்து வரும் வழியில் - இந்த ஆக்கிரமிப்புகளும் விளைநிலங்களும் அமைந்துள்ளன. எனவே, மனித - விலங்கு எதிர்கொள்ளல் (Man - Animal Conflict) அதிகமாக நடைபெறும் இடமாக இப்பகுதிகள் உள்ளன. வெளியிலிருந்து காட்டுப் பகுதிக்குப் புலம்பெயர்ந்து ஆக்கிரமித்தோ, அத்துமீறியும் செயல்படுகின்றனர். இதற்காகக் காட்டுயிர்களைக் கொல்லவும் தயங்குவதில்லை. அரசியல் ஆதரவு, தலையீடும்கூட இதற்கு உண்டு! இந்தக் காரணங்களால்தான், அடுத்துள்ள ஊர்களில் காட்டுயிர்கள் நுழைகின்றன அல்லது பயிர்களை நாசம் செய்கின்றன.
இந்த மோதலில் இறக்கும் விலங்குகளைப் பிரேதப் பரிசோதனை செய்யும்போது, பெரும்பாலும் உண்மைக் காரணம் வெளிவருவதில்லை. ஏனென்றால் அக்காரணங்கள் சொல்லப்பட்டால், துறை சார்ந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். புதிதாகப் புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற வேண்டிவரும். நீதிமன்றம், வழக்கு என்று விஷயம் நீளும். ஆனால், ஒரு நியாயமான நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பதை யானை டாக்டர் கேயின் வார்த்தைகளிலேயே கேட்கலாம்!
"காட்டுக்குள்ளே சாகிற ஒவ்வொரு மிருகத்தையும் போஸ்ட்மார்ட்டம் பண்ணியாகணும்னு முப்பது வருஷமா நான் போராடிட்டு வர்றேன். எவ்வளவு அழுகிய சடலமா இருந்தாலும் பண்ணனும். முன்னெல்லாம் அப்படிக் கிடையாது. காட்டில் சாகிற மூணுல ஒரு பெரிய மிருகம் கொல்லப்படுகிறது. ரொம்ப அழுகிப் போனாலும், ஏதாவது ஒரு தடயம் கிடைக்கும். கண்டுபிடிக்க ஒரு வழிமுறை இருக்கு, நானே அதைப் பத்தி எழுதியிருக்கேன்."
காட்டையும் காட்டுயிர்களையும் நாம் உண்மையிலேயே பாதுகாக்க வேண்டும் எனக் கருதினால் மேற்சொன்ன காரணங்களை அவசியம் பரிசீலிக்க வேண்டும். நமது பார்வை தொலைநோக்குடனும், இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதாகவும் இருந்தால், நம் காடுகளையும் காட்டுயிர்களையும் நிச்சயம் பாதுகாக்கலாம்.
கட்டுரையாளர், இயற்கை ஆர்வலர்- தொடர்புக்கு: hkinneri@gmail.com