ஏரின்றி அமையாது உலகு: களையைப் பிடுங்காதீர்கள்!

ஏரின்றி அமையாது உலகு: களையைப் பிடுங்காதீர்கள்!
Updated on
2 min read

பொதுவாகக் களைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, முற்றிலும் அழிக்கக் கூடாது. இதைத்தான் திருக்குறள், ‘களை கட்டதனொடு நேர்' என்றும் ‘எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்று' என்று இரண்டு இடங்களில் களைகளைக் கட்டுப்படுத்துவது பற்றியே கூறுகிறது, முற்றிலும் அழிக்கக் கூறவில்லை. ஒரு மண்ணுக்குத் தேவையான சத்துகளைக் கூடுதலாக வழங்கவரும் நண்பர்களே களைகள்.

ஒரு நிலத்தில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வகையான களைகள் முளைப்பதில்லை. பருவத்துக்குப் பருவம் களைகள் மாறும். மண்ணில் வளம் அதிகரிக்க அதிகரிக்கக் களைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நிலத்தைத் தொல்லை செய்யாமல், அதன் போக்கிலேயே விட்டுவிட்டால் ஒரு குறிப்பிட்ட களை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு அது இடம் மாறிவிடும். இது இயற்கையின் நிகழ்வு, இயற்கை விதி.

களையோடு வளரும் மரம்

எடுத்துக்காட்டாக ஒரு வறண்ட நிலத்தில், கடுங்காற்று போன்ற பெருந்தொல்லைகள் இல்லாத, குறிப்பாக நம் நாட்டைப் போன்ற வெப்பமண்டல நிலங்களில், முட்புதர்கள் தோன்றும். ஆடு போன்ற கால்நடைகள் தின்றுவிடக்கூடும் என்பதால், பாதுகாப்பாக முட்களுடன் கூடிய களைகள் தோன்றும். அதன் பின்னர் ஒரு பறவை ஒரு வேப்பம் பழத்தைத் தின்று, தனது எச்சத்துடனான விதையை அப்புதருள் இட்டுச் செல்லும்.

அடுத்து வரும் மழைக்காகக் காத்திருக்கும் விதை, மழைத் துளி பட்டவுடன் துளிர்க்கும். அதைக் கால்நடைகள் கடித்துவிடாதபடி முட்புதர்கள் பாதுகாக்கும். பின்னர் மரம் வளர்ந்து பெரிதானவுடன், மரத்தின் நிழல் பட்டு முட்புதர்கள் வளர முடியாத நிலையை அடையும். இப்படியாக ஒரு மரம் களைகளுடன் வளர்ந்து பெரிதாகும். இந்த இயற்கை நிகழ்வோடு ஊடாடுவதற்கு முன், சில இயற்கை விதிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

16 பெற்றால் போதுமா?

குறிப்பிட்ட மண்ணில் குறிப்பிட்ட களைகள் மட்டும் தோன்றுவதற்குக் காரணம், அந்த மண்ணை அடுத்த கட்டப் பரிணாமத்துக்கு எடுத்துச் செல்வதற்குத்தான். இந்த அடிப்படையில்தான் ஓருயிரி முதல் மனித குலம்வரை இவ்வளவு காலம் வளர்ந்துவந்துள்ளன.

இன்னும் நுட்பமாகப் பார்த்தால், ஒரு பயிருக்குத் தேவைப்படும் சத்துகள் 16 என்று பயிரியல் அறிவியல் கூறுகிறது. என்னைக் கேட்டால் பதினாறுக்கும் மேல் (16+) தேவை என்று கூறுவேன். ஏனென்றால், பதினாறு சத்துகளை மட்டும் ஒரு குடுவையில் இட்டுத் தாவரத்துக்குக் கொடுத்துவிட முடியாது. அது பசிக்கு மாத்திரையைச் சாப்பிடுவதுபோல.

மேற்கூறிய சத்துகள் சில இடங்களில் பற்றாக்குறையாக இருக்கும். அதை நிறைவு செய்யக் களைகள் உருவாகின்றன. சுண்ணாம்பு நிலத்தில் துத்திச் செடி அதிகமாக இருப்பதாகப் பதிவுகள் உள்ளன. அதேபோலச் சில செடிகளில் குறிப்பிட்ட தனிமம் மற்றவற்றைவிட கூடுதலாக இருக்கிறது. மாங்கனீஸ் எனப்படும் தனிமம் ஆவாரை எனப்படும் தாவரத்தில் உள்ளது. அதேபோல எருக்கில் இரும்பு, போரான் போன்ற தனிமங்கள் கூடுதலாக உள்ளன.

ஆக ஒரு நிலத்தில் வளரும் களை, அந்த நிலத்துக்குக் குறிப்பிட்ட சத்தைக் கொடுப்பதற்காகத்தான் வந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் களைகளை வெட்டி அந்த மண்ணுக்கே உணவாக/உரமாகக் கொடுக்க வேண்டும். அதை விடுத்துக் களைகளை வெட்டி வரப்பில் போட்டுவிட்டால், வரப்பில்தான் பயிர் வளருமே அன்றி நிலத்தில் வளராது. களை என்றாலே வீணானது, பயிருக்கு எதிரானது என்ற எண்ணம் மிகப் பெரிய மூடநம்பிக்கை.

கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in