

பாலையாதலைத் தடுக்கும் நாள்: ஜூன் 17
சஹாரா பாலைவனம் ஒரு காலத்தில் மிகப் பெரிய காடாக இருந்ததாகவும், நீண்ட காலத்துக்குப் பிறகுதான் உயிர்ச் சுவடே இல்லாத பாலைவனமாக அது மாறியதாகவும் சுற்றுச்சூழல் வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படி மாறியதற்கான உத்தரவாதமான காரணம் என்னவென்று தெரியவில்லை. நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் சஹாரா வளம் இழந்து போனதென்னவோ உண்மை.
சஹாராவின் கதை வரலாறாகவே இருந்துவிட்டுப் போகட்டும். கஜகஸ்தான்-உஸ்பெகிஸ்தான் அருகே மத்திய ஆசியாவில் இருந்த ஏரல் கடல் வெறும் 40 ஆண்டுகளில் காணாமல் போய், மொட்டைப் பாலைவனமாக உருமாறியிருக்கிறது. உலக வரைபடங்களில் இருந்து, இன்றைக்கு அது காணாமல் போய்விட்டது. ஏரலின் கதை, நம் கண் முன்னே உருத் தெரியாமல் அழிந்த ஒரு கடலின் கதை.
கண் எட்டும் தொலைவுக்கு
நாம் அன்றாடம் கடந்து செல்லும் மற்றொரு ஏரியல்ல அது, உலகின் நான்காவது மிகப் பெரிய ஏரி. பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாகக் கடலைப் போலிருந்தாலும், நீர்நிலை வரையறைப்படி மிகப் பெரிய உப்பு நீர் வடிகால் ஏரிதான். கண் எட்டும் தூரம் மட்டும் 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பரந்து விரிந்திருந்தது. அதிலிருந்து கிளைத்த சிற்றேரிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் 5.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்தன.
இந்த ஏரிக்கு அமு தார்யா, சிய்ர் தார்யா நதிகள் நீரெனும் அமுதத்தை வழங்கிவந்தன. முன்னாள் சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த 15 நாடுகள் இந்த ஏரியை நம்பி இருக்கின்றன.
ஆட்சி செலுத்திய பருத்தி
1960-களில் மத்திய ஆசியப் பகுதி பல்வேறு மூலப் பொருட்களின் உற்பத்தி மையமாக விளங்கியது. குறிப்பாக, ஏரல் கடலைச் சுற்றி அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. இந்தப் பகுதியின் ஈரப்பதம் அதிகமில்லாத தட்பவெப்பம், உத்தரவாதமான பாசன வசதி, ஏரல் கடல்-துணை நதிகளில் ஓடிய தண்ணீர் போன்றவைதான் பருத்தி உற்பத்திக்கு ஆதாரமாக இருந்தன.
ஏரல் கடலின் சோவியத் பகுதியில் பாசன வசதி அற்புதமாக இருந்தது. 1980-களில் 70 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடலைச் சுற்றியிருந்த மக்கள்தொகையும் 2.7 கோடியாக உயர்ந்தது. விவசாயம், மக்கள்தொகை உயர்வால் 1960-களில் இருந்ததைவிட 120 கியூபிக் கிலோமீட்டர் தண்ணீர்ப் பயன்பாடு அதிகரித்தது. இருந்தாலும் 90 சதவீதத் தண்ணீர் விவசாயத்துக்கே போனது. பருத்தித் தாவரங்கள் தண்ணீரைக் குடிக்கக்கூடியவை என்பதுதான் காரணம்.
சீர்குலைவு
இந்தப் புள்ளியில்தான் பிரச்சினை ஆரம்பித்தது. அதுவரையில் நிலவிவந்த நீர்ச் சமநிலை சீர்குலைக்கப்பட்டது. உடலில் ஓடும் நரம்பைப் போல நிலமெங்கும் ஓடி வளம் சேர்த்துவந்த சின்னச் சின்ன ஆறுகள் சுரண்டப்பட்டு, அமு தார்யா, சிய்ர் தார்யா பெரு நதிகளில் நேரடியாகக் கலக்குமாறு செய்யப்பட்டன.
அதற்காகக் குறுக்குநெடுக்காக வெட்டப்பட்ட கால்வாய்கள், மோசமான கழிவு நீர் வசதி காரணமாக நீர் தேங்கியது, உப்பேற்றமும் அதிகரித்தது. மற்றொரு புறம் விவசாயத்தால் பூச்சிக்கொல்லி, உரப் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக நிலப்பரப்பு மாசுபட்டது. தொடர்ச்சியாக 40 சதவீத வயல்கள் பாதிக்கப்பட்டன. நிலத்தடி நீரும், வளமான மேல் மண்ணும் வரலாறாகி இருந்தன.
1960-களிலிருந்து ஏரல் கடல் உலர்ந்துபோக ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக 60,000 ஹெக்டேர் பரப்புள்ள 50 பாசன ஏரிகள் வறண்டு போயின. 1990-களை ஒட்டி ஏரல் கடலை ஒட்டிய 95 சதவீதச் சதுப்புநிலங்கள், நீர்நிலைகள் மடிந்துபோய் வானம் பார்த்தன. வோஸ்ரோஷ்டெனி தீவிலிருந்து கிழக்குக் கடற்கரை இடையிலான பகுதியில் மிகப் பெரிய உப்புப் பாலைவனம் விரிவடைந்துவருகிறது.
இப்போது பாலைவனமாகிவிட்ட ஏரல் கடலின் பரப்பளவு 40,300 சதுர கிலோமீட்டர். ஒரு காலத்தில் கடல் மட்டத்திலிருந்து 53 மீட்டர் உயரத்துக்கு நீர் தளும்பி நின்ற ஏரல் கடல், இன்றைக்கு 36 மீட்டருக்குச் சரிந்துவிட்டது. அதன் மொத்தப் பரப்பு கால்வாசியாகவும் நீர் அளவு அதைவிடக் குறைவாகவும் சுருங்கிவிட்டன.
வாழ்வாதாரம் போனது
இந்தக் கடலின் நீரில் இருந்த கனிமச் சத்து நான்கு மடங்குக்குக் கீழே குறைந்துவிட்டது. கனிமச் சத்து இல்லாதபோது, மீன்கள் மட்டும் எப்படி ஊட்டமாக உயிர் வாழும்? ஏரல் கடலை மையமாகக் கொண்டிருந்த மீன்களும் உயிரினங்களும் மடியத் தொடங்கின. ஒரு காலத்தில் இந்த ஏரியில் ஆண்டுதோறும் 40 லட்சம் கிலோ மீன் பிடிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டுடன் மீன்பிடித்தல் நின்றுபோனது.
உள்ளூர் மக்களின் எதிர்காலத்தை வளமாக்கப் போகும் திட்டமாகப் பருத்தி விவசாயத்துக்கான நீர்ப்பாசனத் திட்டம் 60-களில் முன்வைக்கப்பட்டது. இன்றைக்கு அதுவே காற்றுப் போன பலூனாக உள்ளூர் மக்களின் எதிர்காலத்தைப் பறித்துவிட்டது.
பருத்தி விவசாயிகள் மட்டுமல்லாமல், இயற்கை வளங்களைச் சார்ந்து இயங்கிய மீனவர்கள் உள்ளிட்ட அனைவரும் வேலை இழந்து, வாழ்வாதாரத்தைத் துறந்து நிற்கின்றனர்.
பரவும் உப்பு
முன்பு கரையோரத்தில் இருந்த ஊர்கள், இன்றைக்கு நீர் இருக்கும் பகுதியிலிருந்து 70 கி.மீ. தள்ளி இருக்கின்றன. வானம் பார்த்துக் கிடக்கும் தரிசு நிலப்பகுதியில் பாளம்பாளமாக உப்பு படிந்து கிடக்கிறது. அதிலிருந்து பூச்சிக்கொல்லி எச்சத்துடன் எழும் மண்ணும் தூசியும், 250 கி.மீ. பரப்புக்கு அடித்துச் செல்லப்பட்டுச் சுற்றுச்சூழலைச் சீர்கெடுத்துவருகின்றன.
ஏரல் கடல் சுருங்கிப் போனதால், சுற்றுவட்டாரத் தட்பவெப்பம் தலைகீழாகிவிட்டது. கடும் வெப்பமும் கோடை மழையும் பனிப்பொழிவற்ற நீண்ட குளிர்காலம் போன்றவை வழக்கமாகிவிட்டன. இப்போது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். தவிர, ஆண்டில் 3 மாதங்களுக்குத் தூசுப் புயல் வீசுகிறது.
சீர்கெட்ட சுகாதாரம்
இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோலச் சுகாதாரப் பிரச்சினைகளும் வரிசைகட்டி நிற்கின்றன. கரகால்பக்ஸ்தான் பகுதியில் குடிநீர் உப்பேறி, மாசுபட்டு இருக்கிறது. இந்தத் தண்ணீரில் ஸ்ட்ரான்ஷியம், துத்தநாகம், மாங்கனீஸ் போன்றவை அதிகமுள்ளன. இவை ரத்தசோகைக்கு வழிவகுக்கக்கூடியவை.
இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளில் மூச்சுக்குழாய் அழற்சி, கிட்னி, கல்லீரல் நோய் போன்றவை 30 மடங்கு அதிகரித்திருக்கின்றன. புற்றுநோயும் மூட்டுவலியும் 60 மடங்கு அதிகரித்திருக்கின்றன. பிறந்த குழந்தை இறப்பு விகிதம் உலகிலேயே இங்கு அதிகமாக இருக்கிறது. இப்படி, சுகாதாரப் பிரச்சினைகளின் பட்டியலுக்கு முடிவில்லை.
முதன்முறையாக 1988-ம் ஆண்டில் ஏரல் கடலின் அழிவை இயற்கைப் பேரழிவாக அன்றைய ரஷ்யா அறிவித்தது. அந்நாடு பிரிந்த பிறகு ஏரல் கடல் வடிகால் பகுதியை ஒட்டிய கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பேரழிவு
பருத்தி விவசாயம் தந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு, அன்றைக்கு நதிகள் வளைக்கப்பட்டன. முதல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியில் எந்தப் பெரிய முன்னேற்றமும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகச் சூழலியல் முற்றிலும் சீர்கெட்டுவிட்ட நிலையில், 'மாண்டவர் மீளாதது போல' ஏரல் கடல் மீள்வதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
இரண்டு நதிகளில் இருந்து விவசாயத்துக்காக அதிக அளவு தண்ணீர் சுரண்டப்பட்டதே, அது ஒட்டுமொத்தமாக உலர்ந்துபோனதற்கு முதன்மைக் காரணம். இந்த உலர்வு, சங்கிலித் தொடராக அப்பகுதியின் சூழலியலையும் நீர் ஆதாரத்தையும் ஒட்டுமொத்தமாகப் பாதித்திருக்கிறது. மனிதச் செயல்பாடுகளின் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவாக ஏரல் கடலின் அழிவு சுட்டிக்காட்டப்படுகிறது.
எங்கே போகிறோம்?
உலகம் முழுவதும் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது. வளங்களைச் சூறையாடும் வளர்ச்சிக்கு ஏரல் கடலின் அழிவு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றைக்கு விவசாயத்துக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் பேரணைகள் கட்டுவதற்கு முன்னதாகவும், பாசனத்துக்குத் தண்ணீர் திருப்பி விடப்படுவதற்கு முன்னதாகவும் ஏரல் கடலுக்கு நேர்ந்த கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
மீன்களும் மடிந்தன
தெற்கு ஏரல் கடல் பகுதியில் இருந்த முய்னாக் நகரத்தில் 1933-ல் உருவாக்கப்பட்ட முய்னாக் கேனரி நிறுவனத்தில் ஆயிரம் பேருக்கு மேல் வேலை பார்த்துவந்தனர்.
1958-ம் ஆண்டின்போது 2.1 கோடி தகரப்பெட்டி மீன்கள் அங்கே உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், 1970-களின் பிற்பகுதியில் மீன் பதப்படுத்துதல் நிறுத்தப்பட்டது. மீன்கள் குறைந்துபோனதே இதற்குக் காரணம். அப்போதே ஏரல் கடல் பாலையாவது தொடங்கிவிட்டது.