நம் நெல் அறிவோம்: பலத்தைக் கொடுக்கும் குருவிக்கார்

நம் நெல் அறிவோம்: பலத்தைக் கொடுக்கும் குருவிக்கார்
Updated on
1 min read

பல பாரம்பரிய நெல் ரகங்களைப் போல வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி குருவிக்கார் நெல் ரகம் மகசூல் கொடுக்கும். இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான ஐந்தடி உயரம்வரை வளரும்.

அதிக நெல் மணிகளைக் கொண்டிருக்கும். பயிரில் சொரசொரப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதல் இருக்காது. களை கட்டுப்படும்.

தமிழகம் முழுக்க

பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகம் இது. ஏக்கருக்கு இருபத்தைந்து முதல் முப்பது மூட்டைவரை மகசூல் கிடைக்கும். இந்த நெல் ரகம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது.

பழுப்பு நிற அரிசி, மோட்டா ரகம். பெரும்பாலும் இட்லி, தோசை, இடியாப்பம், முறுக்கு, பலகாரங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. வீட்டு விசேஷங்களில் விருந்துக்கு இந்த ரக அரிசியைப் பயன்படுத்துகிறார்கள். இதன் அவல் ருசியாக இருக்கும். இதன் பழைய சாதம் சீக்கிரமாகக் கெட்டுப் போகாது. இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.

நீரிழிவு நோயாளிகளுக்கு

குருவிக்கார் நெல் ரகத்தில் அதிகமான மருத்துவக் குணங்களும், புரதச் சத்துகளும் உள்ளன. நார்ச்சத்து அதிகம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை மீண்டும் பெறலாம்.

பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து சீக்கிரம் குணமடைவார்கள். குழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும்.

கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு நீங்கும். நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம்.

கால்நடைகளுக்கு

குருவிக்கார் நெல் ரகத்தின் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகள் அதிக வலிமையுடனும் நோய் எதிர்ப்புச் சக்தியுடனும் இருக்கும். பசுக்கள் கொடுக்கும் பால் அடர்த்தியாகவும் அதிகச் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

காளை மாடுகள் நீண்ட நேரம் உழைக்கும். எளிமையான விவசாயத்தின் மூலமாகவே அதிக மகசூல் எடுக்கக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களில் குருவிக்கார் முதன்மையானது.

நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 94433 20954

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in