

பூச்சிக்கொல்லிகள் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி 'பூச்சிக்கொல்லிகள்: சில முக்கிய தகவல்கள்' நூலில் இருந்து ஒரு பகுதி:
பூச்சிக்கொல்லிகள் மனிதர்களுக்கு எப்படி தீங்கு விளைவிக்கின்றன?
பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாமல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தவுடன் வயல்களில் வேலை செய்வது, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஆகிய செயல்பாடுகளின் மூலம் மண், தண்ணீர், காற்று, உணவு போன்றவற்றின் வழியாக பூச்சிக்கொல்லிகள் உடலுக்குள் ஊடுருவி மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.
# நுரையீரல், ஜீரண மண்டலம், தோல் ஆகியவற்றின் வழியாகப் பூச்சிக்கொல்லிகள் நமது உடலுக்குள் செல்கின்றன. சில பூச்சிக்கொல்லிகள் உடல்நலனை உடனடியாகப் பாதிக்கின்றன. வேறு சில, கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலில் வருடக்கணக்கில் சேர்ந்து பாதிப்பை உண்டாக்குகின்றன.
# தலைவலி, மங்கலான பார்வை, தலைசுற்றல், வாந்தி, இயல்பற்ற மார்புத் துடிப்பு, தசைத் தளர்வு, மூச்சுத் திணறல், மனக்குழப்பம், வலிப்பு, கோமா, இறப்பு போன்றவை உடனடியாக ஏற்படும் பாதிப்புகள்.
# பூச்சிக்கொல்லிகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர்வதால் புற்றுநோய், நரம்பு மண்டல நோய்கள், கல்லீரல், பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகள் வெளியே தெரிவதற்குப் பல ஆண்டு காலம் ஆகிறது. அதற்குப் பிறகு எந்த நோய் எந்தக் கொல்லியால் ஏற்பட்டது என்று கண்டுபிடிப்பது கடினமாகிவிடுகிறது.
# ஒரு சில பூச்சிக்கொல்லிகள் கருவில் வளரும் சிசுவை பாதித்துக் கருச்சிதைவை உண்டாக்கலாம். குறை பிரசவம், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றுக்குக் காரணமாகலாம். மரபணுக்களில் மாறுபாட்டை ஏற்படுத்தி, நமது குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.
பூச்சிக்கொல்லி ஏற்படுத்தும் பாதிப்புகள்:
1. டி.டி.டி. (D.D.T.) – இந்தப் பூச்சிக்கொல்லி, எல்லா வகை பூச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது. கல்லீரல் பாதிப்பு, நாளமில்லா சுரப்பி கோளாறு (Endrocrine disorder), இனப்பெருக்க பாதிப்பு, தடுப்பாற்றல் குறைவு, மார்புப் புற்றுநோய், நரம்பு அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. என்டோசல்ஃபான் (Endosulphan) – இந்த பூச்சிக்கொல்லி, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் உடலில் ஊடுருவி கட்டுப்படுத்துகிறது. இது கருவிலிருக்கும் குழந்தை, கல்லீரல் பாதிப்பு, தடுப்பாற்றல் குறைவு, புற்றுநோய், ஆணுறுப்பில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
3. டைஎல்டரின் (Dieldrin) – இந்த பூச்சிக்கொல்லி, விளக்குப் பூச்சிகள், கால்நடைகளைத் தாக்கும் பூச்சிகள், துணிகளைத் தாக்கும் பூச்சிகள், கேரட், முட்டைகோஸ் ஆகிய காய்கறிகளைத் தாக்கும் வேர் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இந்த பூச்சிமருந்தை பயன்படுத்துவதால் கல்லீரலைத் தாக்கும் நோய்கள், பார்கின்சன் நோய், அல்சீமர் நோய் (Alzheimer’s disease) ஆகியவை ஏற்படுகின்றன.
பூச்சிக்கொல்லிகளால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுகின்றனர்?
ஐக்கிய நாடுகள் அமைப்பு 1983-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 40,000 பேர் இறக்கின்றனர். பாதிக்கப்படுபவர்களில் பாதி பேரும், இறப்பவர்களில் முக்கால்வாசிப் பேரும் வளரும் நாடுகளில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2004-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின்படி, ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 2.5 லட்சம் பேர் இறக்கின்றனர்.
நாம் உண்ணும் உணவு பூச்சிக் கொல்லிகளால் பாதிக்கப்பட்டுள்ளதா?
உண்ணும் உணவின் மூலமாகவும் குடிக்கும் நீரின் மூலமாகவும் பல்வேறு பூச்சிக்கொல்லிகள் நம் உடலை வந்தடைகின்றன. அதிகபட்ச பூச்சிக்கொல்லி எச்சம், அனுமதிக்கப்படக்கூடிய தினசரி அளவு போன்ற அளவுகள் அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட அளவு. பூச்சிக்கொல்லிகள் மனிதர்களைப் பெரிதாக பாதிப்பதில்லை என்று நம்பச் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட அளவுகள் இவை. ஒரு குறிப்பிட்ட அளவுவரை பூச்சிக்கொல்லிகள் நம் உடலுக்குள் செல்வது பாதுகாப்பானது அல்லது ஆபத்தற்றது என்று உறுதியாகக் கூறமுடியாது.
நாம் சாப்பிடும் உணவு வகைகள் நபருக்கு நபர், கலாசாரத்துக்குக் கலாசாரம் வேறுபடுகிறது. குறிப்பிட்ட பூச்சிக்கொல்லி, ஊட்டம் மிகுந்த ஒருவரை பாதிக்காமல் இருக்கலாம். ஏனெனில், அவருடைய உடலில் இந்தப் பூச்சிக்கொல்லியின் விஷத்தை எதிர்க்கும் திறன் இருக்கலாம். ஆனால், அதேநேரம் சிறு குழந்தைகளும் ஊட்டக்குறைவு உள்ளவர்களும் நஞ்சை எதிர்க்கும் திறனுடன் இல்லாததால், அவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
மேலும், இந்த அளவுகள் இரண்டு பூச்சிக்கொல்லிகள் ஒன்று சேரும்போது ஏற்படும் விளைவுகளையும், பூச்சிக்கொல்லிகள் முறியும்போது வெளிப்படும் முறிபொருள்களையும் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால், உணவுப் பொருட்களில் எச்சம் சேர்கிறது.
எல்லா உணவுப் பொருட்களிலும் பூச்சிக்கொல்லி எச்சத்தின் அளவு அதிகரித்துள்ளதாக 1999-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆய்வு தெரிவிக்கிறது. உணவுப் பொருட்களில், பரிந்துரைக்கப்பட்ட “அதிகபட்ச பூச்சிக்கொல்லி எச்ச அளவை”விட, 20 சதவீதம் அதிகமாக உள்ளது. உத்திரப் பிரதேசம், கேரள மாநிலங்களில் விளையும் விளைப்பொருட்களில், பூச்சிக்கொல்லி எச்சம் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 40 சதவீதம் அதிகமாக உள்ளது. அதேபோல் பாலில், லின்டேன் (Lindane) என்ற பூச்சிக்கொல்லி 78 சதவீதமும், டி.டி.டி. 43.4 சதவீதமும் அதிகபட்ச பூச்சிக்கொல்லி எச்ச அளவைவிடவும் கூடுதலாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு, அகில இந்திய ஆராய்ச்சித் திட்ட (All India Coordinated Research Project) அறிக்கையின்படி, பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள எச்சம், அதிகபட்ச பூச்சிக்கொல்லி எச்ச அளவைவிட 61 சதவீதம் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.
பூச்சிக்கொல்லிகள்: சில முக்கிய தகவல்கள்,
கே.விஜயலட்சுமி,
லலிதா சக்திவேல் வெளியீடு:
இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம்,
தொலைபேசி 044- 2447 1087.