சென்னைக்கு வந்த கிராம சந்தை!

சென்னைக்கு வந்த கிராம சந்தை!
Updated on
1 min read

பளிங்கு கற்கள், பளபளப்பான கண்ணாடிகள், சீருடை அணிந்த பணியாளர்கள், துளி அழுக்கில்லாத தரை, கணினி ரசீது என எவ்வளவுதான் வசதியாய் இன்று நம்மால் 'ஷாப்பிங்' செய்ய முடிந்தாலும், கிராமத்துச் சந்தை தரும் அனுபவமே அலாதிதான்!

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் இன்றைய குழந்தைகள், ஏன் பெரும்பாலான பெரியவர்களேகூட ஊர்ச் சந்தைகளைப் பார்த்திருக்காத சூழலில், சென்னையில் கடந்த 3-ம் தேதி ஓர் ஊர்ச் சந்தை கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

செம்மை குடும்பம் சார்பில் 'பிரண்டைத் திருவிழா' என்கிற பெயரில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா ஜெம் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில்தான், இந்த ஊர்ச் சந்தை காணக் கிடைத்தது.

சோர்வை அகற்றுவோம்

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ம. செந்தமிழனிடம் பேசியபோது, "பிரண்டை என்பது தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமான மூலிகை. கடுமையான வறட்சி, வெள்ளம் என எந்தச் சூழ்நிலையிலும் பிரண்டையால் தாக்கு பிடித்து நிற்க முடியும். அதேபோல எந்தத் துன்பத்திலும் தமிழர்கள் சோர்ந்து விடாமல், பிரண்டையின் இயல்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இத்திருவிழாவுக்கு 'பிரண்டைத் திருவிழா' என்று பெயர் சூட்டினோம்.

பிரண்டை என்பது நமது மரபின் குறையீடு. மரங்களில் பனை மரம் எப்படியோ, அப்படித் தாவரங்களில் பிரண்டை என்று சொன்னால் அது மிகையில்லை. ஆடல், பாடல், மரபு விளையாட்டுகள், கருத்தரங்குகள் என்பதோடு மட்டும் நில்லாமல், கிராமத்தில் நடப்பது போன்ற ஊர்ச் சந்தைகளையும் நகர மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அது இந்த விழாவில் சாத்தியப்பட்டது" என்கிறார்.

பனைக்கு வரவேற்பு

இந்த ஊர்ச் சந்தையில் பனை மற்றும் பனை ஓலை சார்ந்த பொருட்களைச் சந்தைப்படுத்திய திருநெல்வேலியைச் சேர்ந்த பனை பொருட்கள் விற்பனையாளர் இசக்கி கூறியபோது, "கிராமப்புறங்களில் மட்டுமே காணக் கிடைக்கிற இந்த ஊர்ச் சந்தையை, நகரத்தில் நடத்த முயன்ற இந்த முயற்சி நமது மரபுகளை மீட்டெடுக்கக்கூடியது.

நகர மக்களுக்குப் பனை பொருட்களை வாங்கும் திறன் இல்லையே தவிர,நல்ல வரவேற்பு இருக்கிறது. பனை பொருட்களில் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், உணவுப் பொருட்களைக் குழந்தைகள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினராலும் ஊர்ச் சந்தைகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்த ஊர்ச் சந்தை நகரங்களில் மாதா மாதம் நடந்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

தொடரும் சந்தை

அதை அமோதிப்பது போலச் சிறுதானிய வியாபாரிகள், இயற்கை உணவு விற்பனையாளர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் இருந்தும் இந்த முயற்சிக்கு நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்தச் சந்தையை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்த உள்ளோம் என்கிறார் செந்தமிழன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in