

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும் பின்வரும் வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டன, ‘போர் இன்னும் முடியவில்லை, பூச்சிகளின் மீதான போர் தொடரும்' என்பது போன்ற வாசகங்கள், பூச்சிகளை மனிதக் குல எதிரியாகச் சித்தரித்தன. இதேபோலக் களைகளையும் கொடுமையான எதிரிகளாகக் காட்டும் போக்கு பசுமைப்புரட்சியின் தொடர்ச்சியாக ஏற்பட்டது.
கடந்த மார்ச் மாதம் தேசங்களிடையிலான புற்று நோய் ஆராய்ச்சி முகமை (International Agency for Research on Cancer - IARC) வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் உழவர்களை மட்டுமல்லாமல், நுகர்வோரையும் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்றே எச்சரித்தார்கள்
'பூச்சிக்கொல்லிகள்தாம் உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பவை, களைக்கொல்லிகள் அல்ல. ஒரு வித்திலைத் தாவரங்கள் அல்லது இருவித்திலைத் தாவரங்கள் என்று குறிப்பிட்ட வகை தாவரங்களை மட்டும் கொல்லக்கூடியவை அவை. அவற்றால் பாலூட்டிகளுக்கு எந்தத் தீங்கும் இல்லை' என்று உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சூழலியல் பாதுகாவலர்கள் தொடக்கம் முதலே இவற்றை எதிர்த்துவந்தனர்.
குறிப்பாகக் களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்லும் தன்மை கொண்டவை என்பது மட்டுமல்லாமல், இயற்கையில் உள்ள சாதாரணக் களைகள் வலுவான களைகளாக (super weeds) மாற்றிவிடும் தன்மை கொண்டவை என்றும் விமர்சிக்கப்பட்டது.
புதிய ஆய்வு
இதைத் தொடர்ந்து மறுத்துவந்த பெருநிறுவனங்கள். தங்களுடைய களைக்கொல்லிகளைச் சந்தையில் பெரிய அளவில் விற்றுவந்தன. ஆனால் கடந்த மார்ச் 20-ம் தேதி, உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) ஒரு பிரிவான தேசங்களிடையிலான புற்று நோய் ஆராய்ச்சி முகமை, கிளைஃபோசேட் என்று அழைக்கப்படும் பாபனோ மித்தைல் கிளைசின் என்ற களைக்கொல்லி புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது என்று அறிவித்திருக்கிறது. மான்சாண்டோ நிறுவனத்தால் 'ரவுண்டப் ரெடி' என்ற வணிகப் பெயரில் இந்தக் களைக்கொல்லி சந்தையில் விற்கப்பட்டுவருகிறது.
தே.பு.ஆ.மு. (IARC) ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மதிப்புமிக்க அமைப்பு. இதன் பெருமை உலக அளவில் சிறப்புக்குரியது. அதனால், அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் மான்சாண்டோவுக்கு மிகப் பெரிய அடியாக மாறியுள்ளது. அந்நிறுவனத்தின் விற்பனை மதிப்பில் பாதிக்கும் மேல் 'ரவுண்டப் ரெடி' களைக்கொல்லியும், விதைகளும்தான். எனவே, இந்த அறிவிப்பை மறுக்க மான்சாண்டோ நிறுவனம் முயலும் என்பதில் மற்றுக் கருத்து இருக்க முடியாது.
பூச்சிக்கொல்லிகளுக்குப் பின்னரே களைக்கொல்லிகள் தோன்றியிருந்தாலும், 1970-களில்தான் கிளைஃபோசேட் வகை களைக்கொல்லிகள் சந்தையில் தடம் பதித்தன. பின்னர் மான்சாண்டோ நிறுவனத்தால் இதற்குக் காப்புரிமை பெறப்பட்டது.
தமிழக அவல நிலை
டென்மார்க்கைச் சேர்ந்த பன்றிப் பண்ணையாளர் ஜான் பீட்டர்சன் முதன்முதலாக 2012-ம் ஆண்டில் தனது பன்றிகளுக்கு மரபீனி மாற்றப்பட்ட சோயா மொச்சையைக் கொடுத்துவந்துள்ளார். அதில்தான் கிளைஃபோசேட் களைக்கொல்லியின் தீங்கு கண்டறியப்பட்டது. இதன் பின்னர் உலகம் முழுவதும் இது மிகப் பெரிய சர்ச்சையாக மாறியது. ஐரோப்பா மட்டுமல்லாமல் அர்ஜென்டீனா, ஈக்வடார் என்று தென் அமெரிக்கா நாடுகளிலும் இதன் தீங்குகளைப் பற்றி ஆய்வுகள் வந்துவிட்டன.
ஆனால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், தனது இணையதளத்தில் கிளைஃபோசேட் களைக்கொல்லியைப் பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமல்ல ஜெர்மனி போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஃபுளுகுளோரலின் என்ற களைக்கொல்லியையும் பரிந்துரைத்துள்ளது. இதை மாற்றிக்கொண்டு சூழலியலைக் காக்கும் நடவடிக்கையில் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் விருப்பம்.
களைக்கொல்லிகள் பொதுவாக மண்ணுக்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பவை. கிளைஃபோசேட் வகை புற்றுநோய்க்கான காரணியாகவும், மகப்பேறு காலத்தில் தீங்குகளை ஏற்படுத்துபவையாகவும் உள்ளது என்று தே.பு.ஆ.மு.வின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
அத்துடன் சூழலியலில் மிக மோசமான, வலுவான களைகளை உருவாக்கி, எந்தக் கொல்லிகளாலும் அவற்றை அழிக்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். அது மட்டுமல்லாமல், எல்லா வளத்தையும் தரும் மண்ணும் மெல்ல மெல்ல வளமிழந்து பாறைபோல இறுகிப் போய்விடும்.
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com