Published : 04 Apr 2015 14:46 pm

Updated : 04 Apr 2015 14:46 pm

 

Published : 04 Apr 2015 02:46 PM
Last Updated : 04 Apr 2015 02:46 PM

வேளாண்மைக்கு வேட்டு?

வேளாண் சமூகத்தின் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையை இறக்கி வைக்கும் எந்த முற்போக்கான அறிவிப்புகளும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இல்லை. வேளாண்மைக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தெளிவாக விளக்கியுள்ள நிதி அமைச்சர், அதற்கான தீர்வை மட்டும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து தேடுவது முற்றிலும் முரண்பட்டது.

நாளுக்கு நாள் சாகுபடிச் செலவு உயர்ந்துகொண்டு வரும் வேளையில் இந்தியச் சந்தையை உலகுக்குத் திறந்துவிட்ட பின்னர், மானிய விலையில் பல வெளிநாட்டு பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிகின்றன. இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.


சில எடுத்துக்காட்டுகள் மூலம் இதை விளக்கலாம். தேங்காய்க்கான விலை உயரும்போது, சந்தையில் பனை எண்ணெய் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. உடனடியாகத் தேங்காயின் விலையும், கடலையின் விலையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கின்றன. இதேபோல் பருத்திக்கு அமெரிக்கா மானியங்களை அளித்து, அங்கே கிடைக்கும் விளைச்சலை மட்டும் மற்ற நாடுகளின் மீது திணிப்பது மூன்றாம் உலக நாடுகளை பாதிக்கத் தானே செய்யும்.

எங்கே மானியம் அதிகம்?

கடந்த 2010-ம் ஆண்டு வேளாண் பொருட்களுக்கு அமெரிக்கா கொடுத்த மானியம் 12,000 கோடி அமெரிக்க டாலர்கள். இந்தியா கொடுத்த மானியம் 1,200 கோடி அமெரிக்க டாலர்கள். அதேநேரம் அமெரிக்க மக்கள்தொகை ஏறத்தாழ 32 கோடி, இந்தியாவிலோ ஏறத்தாழ 120 கோடி. இந்நிலையில் இந்தியா தற்போது தரும் மானியத்தையும் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய, அமெரிக்க வளர்ந்த நாடுகள் நெருக்கடி கொடுத்துவருகின்றன.

அதற்கான அநீதியான ஒப்பந்தங்களில் நமது ஆட்சியாளர்கள் கையெழுத்து போட்டுவிட்டு, அதற்கு உகந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரித்துக்கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவில் மானியங்களை அரக்கு நிறப் பெட்டிகளில் (மானியங்களை அரக்குப் பெட்டி, பச்சைப் பெட்டி, நீலப் பெட்டி என்று பிரித்துக் கொடுக்கும் ஒரு வகை உத்தி) இருந்து பச்சைப் பெட்டித் தொகுப்புக்கு மாற்றி, தங்களது உழவர்களைக் காக்கின்றனர். ஆனால், நமது நிதி அமைச்சர் உழவர்களைப் பாதுகாக்கும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

விலகி ஓடும் அரசு

அரசு கொள்முதல் நிலையங்களைக் குறைத்து வெளிச் சந்தைகளில் அரிசி, கோதுமையை வாங்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதாவது தேவையான உணவு தவசங்களில் 25% மட்டுமே, அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்வது என்று முடிவாகிவிட்டது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆக, உழவர்களுக்கு ஓரளவாவது விலையை நேரடியாக உறுதிப்படுத்துவது கேள்விக்குறியாகிவிட்டது.

இனித் தரகர்களும், பன்னாட்டு முதலீட்டாளர்களும் விளைபொருட்கள் விளையும்போது அடிமாட்டு விலைக்கு வாங்கி, சந்தையில் அதிக விலைக்கு விற்பார்கள். ஏற்கெனவே தற்சார்புடன் சாகுபடி செய்து பிழைத்துவந்த உழவர்களை, சந்தையைச் சார்ந்து உற்பத்தி செய்ய வைத்து அழித்தார்கள். இப்போது எந்தச் சந்தைப் பாதுகாப்பும் வழங்காமல், இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தை வாய்ப்பையும் தட்டி பறிக்கும் போக்கை என்னவென்று சொல்வது?

காப்பாற்றப் போவது யார்?

குறைந்த அளவாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வேளாண் பணிகளுடன் இணைத்து, அதன் மூலமாகக்கூட உழவர்களைக் கைதூக்கிவிட முடியும். இதன்மூலம் வேளாண் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். வேளாண்மையும் ஓரளவு கட்டுப்படியானதாக மாறும்.

ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை வேளாண் துறைக்கு உண்மையாகத் தேவைப்படும் ரூ. 61,000 கோடிக்குப் பதிலாக, ரூ. 34,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது! அதேநேரம் பெரு நிறுவனங்களுக்கான வரி 30%-லிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் வேளாண்மைக்கான ஊக்குவிப்பைக் குறைத்துவிட்டு இயல்பாக வேளாண்மையை நலிவடையச் செய்வதற்கான வழி ஏற்படுத்தப்படுகிறது. மற்றொருபுறம் நிலத்தை விற்க வைக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் கொண்டுவந்து, இந்திய உழவர்களை முற்றிலும் மண்ணைவிட்டு அகற்றும் கொடுமையைத் தடுக்கப் போவது யார்?

- கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com


ஏரின்றி அமையாது உலகுபாமயன்தொடர்வேளாண்மைவிவசாயம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author