30 ஆண்டுகளாக மாறாத கொடுங்கையூர்

30 ஆண்டுகளாக மாறாத கொடுங்கையூர்
Updated on
1 min read

‘இந்தியாவைச் சுத்தப்படுத்துவோம்' என்னும் பிரதமரின் முழக்கத்தை நிறைவேற்றுவதுபோல, ஒரு முறம் அளவுக்குச் சேர்ந்திருக்கும் குப்பையைக் காட்டி ஃபோட்டோ எடுத்துப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் பலர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக வடசென்னை கொடுங்கையூர் பகுதியில் 35 ஏக்கரில் குப்பையைச் சென்னை மாநகராட்சி கொட்டிவருகிறது. தினமும் 1,000 முதல் 1,500 டன் குப்பைகள் இங்கே கொட்டப்படுகின்றன.

"கொடுங்கையூரில் கொட்டப்படும் குப்பையைச் சென்னை மாநகராட்சி அகற்றுவதற்கு உங்களுடைய ஆதரவைத் தாருங்கள்" என்று இந்தப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ விவேக் இணையம் வழியாக நடத்திவரும் பிரசாரத்துக்கு, பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மாநிலம், நாடு, மொழி, இனம் பாகுபாடில்லாமல் எண்ணற்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பல வகை குப்பை

கொடுங்கையூர் பகுதியில் டி.டி.சி.பி. சான்றுகளுடன் 1972-ல் வீடு கட்டுவதற்கான மனைகள் விற்கப்பட்டிருக்கின்றன. 1985-லிருந்து இங்கே குப்பை கொட்டுவது தொடங்கியது. இன்றைக்கு மருத்துவக் கழிவுகள், மக்கும் குப்பைகள், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் என எல்லாம் கலந்து மலைமலையாகக் கொட்டப்பட்டு வருகின்றன.

பொதுவாகக் குடியிருப்புப் பகுதி இருக்கும் இடங்களில் இது போன்று குப்பை கொட்டக்கூடாது என்னும் விதியை மீறி, இங்கே பல ஆண்டுகளாகக் குப்பை கொட்டப்பட்டுவருகிறது.

நோய் அதிகரிப்பு

பணக்கார நகர், எழில் நகர், ராஜரத்தினம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகள், குப்பை சேமிக்கப்படும் இடத்துக்கு மிக அருகில் உள்ளன. இதிலிருந்து வரும் துர்நாற்றம், கிருமித் தொற்று போன்றவற்றால் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. தோல் வியாதி, சந்தர்ப்பவாத நோய்கள், நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமை போன்றவற்றால் கொடுங்கையூரைச் சுற்றியிருக்கும் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் பல குழந்தைகள், இளம் வயதினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாருடைய பொறுப்பு?

இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு முறையான பாதுகாப்புடன், இந்த இடத்தில் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்.

2004-ல் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவே கொடுங்கையூரிலிருந்து குப்பை கொட்டும் இடம் மாற்றப்படும் என அறிவித்திருந்தார். பத்து ஆண்டுகளில் ஆட்சிகள் மாறி, இப்போது அதே கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால், குப்பைகள் கொட்டப்படும் அதே காட்சிதான் கொடுங்கையூரில் இன்னமும் தொடர்கிறது. இங்கிருக்கும் குப்பையை அகற்றுவதில் நம்முடைய பொறுப்பும் அடங்கியிருக்கிறது. ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் கொட்டும் குப்பையும், அங்கேதானே கொட்டப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in