

காலம் கடந்து பெய்யும் மழை பயிர்களுக்குப் பிழையாக ஆகிவிடும் என்பதற்குக் கொங்கண் பகுதி உதாரணமாக ஆகியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் கொங்கண் பகுதி, உலகம் முழுவதும் விரும்பப்படும் அல்போன்சா ரக மாம்பழங்கள் அபரிமிதமாக உற்பத்தியாகும் இடம். கர்நாடகத்தைப் பொறுத்தவரை மே மாதத்தில்தான் மழைக் காலம் தொடங்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பெய்த மழையால் ஏறக்குறைய 1.5 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வளர்க்கப்பட்டிருந்த அல்போன்சா மாம்பழத் தோட்டங்கள் அழிந்துள்ளன.
மழை நோய்கள்
கடந்த ஆண்டில் கொங்கண் பகுதியின் சிந்துதுர்கா, ரத்னகிரி மாவட்டங்களிடையே 40 முதல் 50 ஆயிரம் பெட்டி மாம்பழங்கள் (ஒரு பெட்டியில் 60) விற்பனைக்குத் தயாராயின. இந்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே விற்பனைக்குத் தயாராகி உள்ளன என்று தகவல் தருகிறது மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்கம்.
"எதிர்பாராத மழையால் மாம்பழங்களில் கரும்புள்ளியும் மரத்தில் பூஞ்சை பாதிப்பு களும் ஏற்பட்டுள்ளன. இதனால் மரம் பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல், அதனால் பழங்களில் ஏற்பட்ட பாதிப்பால் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது" என்கிறார் கொங்கண் அல்போன்சா மாம்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்கத்தின் தலைவரான விவேக் பிடே.
பொதுவாக மே மாதத்தில் கொங்கண் பகுதியிலிருந்து நாட்டின் பல மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஒரு நாளைக்கு 1.25 லட்சம் அல்போன்சா மாம்பழப் பெட்டிகள் அனுப்பப்படும். இதிலிருந்து அங்கு உற்பத்தியாகும் மாம்பழங்களின் அளவை கணக்கிட்டுக் கொள்ளலாம்.
உற்பத்தி பிரச்சினைகள்
மாம்பழ விவசாயிகளுக்கு வங்கியின் மூலமாக அரசு அளிக்கும் கடன் உதவியை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால், எதிர்பாராத மழையின் காரணமாகப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மரங்களைக் காக்க விவசாயிகள் அதிகப்படியான பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தியதால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட உற்பத்தி செலவு அதிகமாகி இருக்கிறது என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.
உற்பத்திக் குறைவு மற்றும் அதிகரித்திருக்கும் உற்பத்தி செலவின் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மாம்பழத்தின் விலை மேலும் குறையும். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
அல்போன்சா மாம்பழங்களின் விலை மார்ச் மாதத்தில் தொடங்கும்போது உச்சத்தில் இருக்கும். ஒரு பெட்டி ரூபாய் 4 ஆயிரம் வரை விற்கப்படும். மே மாதத்தில் ரூ. 800-லிருந்து ரூ. 1000-க்கு விற்பனையாகும். இந்த முறை மாம்பழச் சீசனின் தொடக்கத்தில் மழையாலும், முடிவில் உற்பத்திப் பிரச்சினைகளாலும் மாம்பழ விவசாயிகள் இழப்பைச் சந்திக்க உள்ளனர்.
தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் என்பதற்கு இது நல்ல உதாரணம். "இந்த ஆண்டு பகல் மற்றும் இரவு வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருந்ததும், பெரும்பாலான மரங்கள் ஆண் பூக்களை உற்பத்தி செய்ததும் உற்பத்தி குறைவதற்கான காரணங்கள்" என்று வேளாண்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.