

வேட்டையாடிப் பறவைகள், விலங்குகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘வேட்டையாடிப் பூச்சிகள்’ (Hunting insects) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பருந்து, கழுகு, வல்லூறு போன்ற பறவைகளைப் போலவும், சிங்கம், புலி, சிறுத்தை போன்ற பாலூட்டிகளைப் போலவும் இரையை வேட்டையாடி உண்பவை ‘வேட்டையாடிப் பூச்சிகள்’.
ஒருபுறம் வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் பறந்துகொண்டே தேனைச் சேகரிப்பது போலத் தும்பி, காட்டு ஈ, பெருமாள் பூச்சி (Praying Mantis), சங்கிலிப் பூச்சி (Hanging Fly), பச்சை ஈ உள்ளிட்ட பூச்சி வகைகள் தங்களது இரையை, பறக்கும்போதே வேட்டையாடும் திறனைப் பெற்றுள்ளன. தும்பிகள் பறக்கும்போது வேட்டையாடுவதை, எங்களுடைய வீட்டிலேயே பார்த்திருக்கிறேன்.
இரையை வேட்டையாடுவதற்கான உடல் தகவமைப்பை ஊனுண்ணிகளும் பறவைகளும் மரபுவழி இயல்பூக்கத்திலேயே (instinct) பெற்றிருப்பதைப் போலவே, வேட்டையாடும் பூச்சிகளின் உடலும் தகவமைப்பைப் பெற்றுள்ளது.
மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பறக்கும் தும்பிகள், இரையைப் பிடிக்கும் நேரத்தில் 50 கி.மீ. வேகத்தில் பறப்பதுடன், இரையை வேட்டையாடுவதற்கும் பிடிப்பதற்கும் ஏற்ற வகையில் தும்பி, காட்டு ஈ, சங்கிலிப் பூச்சி போன்றவற்றின் வலுவான ஆறு கால்கள் பங்காற்றுகின்றன. அவற்றின் வாழ்வில் கால்களின் பங்கு அளப்பரியது. வேட்டையாடிப் பிடித்த இரையைப் பாதுகாப்பதிலும், காற்றின் வேகத்துக்கு ஏற்ப உடல் சமநிலையைக் காப்பதிலும், உட்காருவதிலும் கால்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
தோட்டக்காடு
2000-களின் தொடக்கத்தில் பல வார இறுதி நாட்களில் கதிரவனின் முதல் ஒளிக் கிரணம் எட்டி பார்க்கும்போது, மீஞ்சூரை அடுத்துள்ள தோட்டக்காட்டுக்குப் போய் விடுவேன். அங்கிருக்கும் வயல்வெளிகளில் பூச்சிகளைத் தேடியலைந்த நாட்களில், தும்பிகளும் ஊசித்தும்பிகளும் இரையைப் பறக்கும் நிலையிலேயே வேட்டையாடுவதைப் பல முறை பார்த்துப் பிரமித்திருக்கிறேன்.
அடுத்துப் பெயர் தெரியாத பல பூச்சிகளை நன்மங்கலம் காப்புக் காட்டில் படம் எடுத்திருக்கிறேன். ஆந்தைத் தும்பி (Owl fly), காட்டு ஈ (Robber fly), சங்கிலிப் பூச்சி (Hanging fly) போன்ற பூச்சிகள் அடிக்கடி தட்டுப்பட்டன. ஒவ்வொரு முறையும் புதுப்புது ஆச்சரியங்களையும், புது வகைப் பூச்சிகளையும் தந்துகொண்டிருந்தது அந்தக் காடு. இப்படியாகச் சின்னஞ்சிறு பூச்சிகள் மீது ஈர்ப்பு வர முதன்மை காரணமாக அமைந்தது தோட்டக்காடும் நன்மங்கலமும்தான்.
வீடு தந்த அனுபவம்
இந்தக் காடுகளுக்கு இணையாகப் பூச்சிகளின் களமாக எங்கள் வீடும் அமைந்திருந்தது என்பது மிகையான கூற்றல்ல. இதுவரை நாற்பதுக்கும் குறையாத பூச்சிகளை வீட்டிலேயே பார்த்திருக்கிறேன். மே பிளை (May fly), பெரிய மஞ்சள் வளையத் தும்பி, நிறமற்ற பட்டாம்பூச்சி (Transparent Moth), அடர்மஞ்சள் பட்டாம்பூச்சி ஆகியவற்றையும், கருஞ்சிவப்பு வண்ணத்துப்பூச்சியின் (Common Mormon) நான்கு வாழ்நிலை பருவங்களைப் படமெடுக்கும் அரிய வாய்ப்பையும் எங்கள் சிறு தோட்டம் வழங்கியது.
பூச்சி உலகம்
மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இந்தப் பூவுலகம் பூச்சிகளால் நிரம்பியுள்ளது. ஒருவேளை கட்டுப்பாடற்ற நிலையில் பூச்சிகள் பெருத்துவிட்டால், தரையிலிருந்து நான்கு முதல் ஐந்தடி வரை பூச்சிகளால் இந்த உலகம் நிரப்பப் பட்டுவிடும்.
அந்த வகையில் பூச்சி களைக் கட்டுப்படுத்த இயற்கை பல வழிகளை வைத்துள்ளது. பெரும்பாலான பறவைகள், வெளவால்கள், சில கொறி விலங்குகள் பூச்சிகளை இரையாகக்கொண்டு அவற்றின் எண்ணிக்கை பெருகிவிடாமல் கட்டுப்படுத்துகின்றன. அந்த வரிசையில், ‘வேட்டையாடிப் பூச்சிகளும்’ மற்றப் பூச்சிகளைக் கட்டுப்படுத்திச் சூழல் சமநிலையைப் பராமரிக்க முக்கியப் பங்காற்றுகின்றன.
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com