

‘இது இந்தியன் பிட்டா, (தோட்டக்கள்ளன்)நவம்பர் தொடங்கி மார்ச்வரை காஷ்மீர் பகுதியிலிருந்து தமிழகத்துக்கு வருகிறது. இது மலபார் விசிலிங் த்ரஷ். (சீகாரப் பூங்குருவி) செமையா விசிலடிச்சுப் பாடும். மருதமலையில் நிறைய பார்க்கலாம். இது மலபார் டிரோகன் (தீக்காக்கை), பூச்சிகளை மட்டும்தான் சாப்பிடும். ஒரு மரப் பொந்துக்குள்ளே என்ன இருக்குன்னு தேடினப்ப எடுத்த படம் இது!’
எதைப் பற்றி பேச ஆரம்பித்தாலும், கடைசியில் பறவைகளில் வந்து நின்றுவிடுகிறார் பட்டாம்பூச்சி சுப்பிரமணியன். கோவை வடவள்ளி, திருவள்ளுவர் நகரில் உள்ள இவரது வீடு பல ஆண்டுகளாக வெள்ளை காணாது தூர்ந்து போய்க் கிடக்கிறது. வீட்டுக்குள் நுழைந்தால் தரையெங்கும் செய்தித்தாள் விரிக்கப்பட்டிருக்கிறது.
தத்ரூபக் காட்சிகள்
ஒரு அலமாரியில் நூற்றுக்கணக்கில் சட்டமிடப்பட்ட படங்களின் குவியல். சட்டமிடப்பட்ட அந்தப் படங்களில் படிந்திருக்கும் தூசியைத் துடைத்துத் திருப்பினால்... பிரமிக்கத்தக்க வண்ண, வண்ணப் பறவைகள், பட்டாம்பூச்சிகள், யானைகள், சிறுத்தைகள், குரங்குகள் எனக் காட்டுயிர்களின் தத்ரூபக் காட்சிகள்.
இன்னொரு அலமாரியில் தூசி படிந்து கிடக்கும் எண்ணற்ற கேடயங்கள், பரிசுச் சான்றிதழ்கள். எல்லாம் மாநில, தேசிய டென்னிஸ், கராத்தே போட்டிகளில் பெற்ற சாம்பியன்ஷிப்புக்கான அடையாளங்கள். இப்படிப் போட்டது போட்டபடி கிடக்கும் தட்டுமுட்டுச் சாமான்களுக்குள் இருந்து வெளியே எட்டி பார்க்கிறது ஓர் ஆந்தை, பார்வையிழந்த கழுகு, இறக்கை முறிந்த புறா.
சுப்பிரமணியனின் செல்லங்கள்
‘வாடா. தைரியமா வாடா!’ என்று பறவைகளை அழைக்கிறார். கழுகு தத்தித் தத்தி வந்து கைகளில் ஏறி அமர்ந்துகொள்கிறது. ‘குட்டிக் கழுகு.. பாவம் இவனுக்குக் கண்ணு தெரியாது. நானாக வாயைத் திறந்து ஊட்டினால்தான் இரையைச் சாப்பிடுவான். இனி ஆயுளுக்கும் இவனுக்கு நான்தான். வெளியே பறக்கவிட்டா எங்கே போவான்?!’ என்று தாயின் வாஞ்சையுடன் அதைக் கொஞ்சுகிறார்.
‘எதற்கு வீடு முழுக்கச் செய்தித்தாள்களை விரித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இவனுங்க (கழுகு, ஆந்தை) எச்சமிட்டு அசிங்கம் பண்ணிடுவான்கள்ல? தாள்ல இருந்தா சுத்தம் செய்யறது ஈஸியில்லீங்களா?’ என்று திருப்பிக் கேட்கிறார்.
ஒரு காலத்தில் டென்னிஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்று, பின்னர் டென்னிஸ் கோச்சாக மாறி, பல மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றியுள்ளார். தன் மகன், மகளையும் மாநில, தேசியச் சாம்பியன் ஆக்கி பார்த்தார்.
இருவரும் தற்போது அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். ஆறாண்டுகளுக்கு முன்பு திடீரென்று நோய்வாய்ப்பட்டு மனைவி இறந்த துக்கத்தில் இருந்து ஆறுதல் பெறுவதற்காகப் பறவைகளை நோக்கிப் புறப்பட்டார். இன்றைக்குப் பறவைகளே தன் உயிர் போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
பறவைகளும் பட்டாம்பூச்சிகளும்
கோவை - கேரள எல்லை மழைக்காடுகளில் காணப்படும் 173 வகை பறவைகளைப் படம்பிடித்து, அவற்றின் குடும்பம், உயிரியல் பெயர் உள்பட அனைத்துக் குறிப்புகளுடன் ‘Amazing Birds of Coimbatore’ என்ற காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் உள்ள பறவை இனங்கள் அனைத்தின் படங்களுடன் ஒரு காபி டேபிள் புத்தகத்தைக் கொண்டுவரும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார்.
மேற்குத் தொடர்ச்சி மழைக்காடுகளில், குறிப்பிட்ட பருவக் காலங்களில் வரும் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகளைத் தனது கேமரா கண்களால் சுட்டு ஆல்பம் ஆக்கி, அவற்றைப் பற்றி வகுப்பும் எடுக்கிறார். மாணவ, மாணவிகளுக்கு அறிவூட்டும் சூழலியல் கண்காட்சிகளை நடத்துகிறார். அதனாலேயே இவருக்கு 'பட்டாம்பூச்சி சுப்பிரமணியன்' என்ற பெயர் வந்ததாம்.
காயமடைந்த பறவைகள்
ஆனைகட்டியில் இருக்கும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தோடு இணைந்தும் பணிபுரியும் இவர், அங்குள்ள விஞ்ஞானிகளுடன் சேர்ந்தும் சில வேலைகளைச் செய்கிறார். மனிதர்களாலோ, விபத்திலோ அடிபட்டுக் கண்டெடுக்கப்படும் பறவைகளை இவரிடம்தான் ஒப்படைக்கிறார்களாம். அவற்றுக்குச் சிகிச்சையளித்துக் காப்பாற்றி, காட்டில் விடும் பணியையும் செய்து வருகிறார். அப்படி வந்தவைதான் இவரிடம் தற்போதுள்ள கழுகு, ஆந்தை, புறாக்கள்.
மனைவியை இழந்து தனிமையில் இருக்கும் இவரை அமெரிக்காவுக்கு வருமாறு மகனும் மகளும் அழைக்கிறார்களாம். "நான் போய்ட்டா இவனுங்க என்ன செய்வான்க பாவம்?" தன்னிடம் உள்ள கழுகு, ஆந்தை, புறாக்களைக் காட்டிக் கேட்கிறார் சுப்பிரமணியன்.