

அமெரிக்காவின் அணு ஆயுதப் பரிசோதனைக்கு எதிரான போராட்டத்தின் வாயிலாக 1950, 60களில் பெரும் கவனத்தைப் பெற்றார் பேரி காமனர் (Barry Commoner).
அவர் நவீன சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முன்னோடி, உயிரியல் பேராசிரியர், சோஷலிசவாதி, மனித உரிமை ஆர்வலர், போருக்கு எதிரான செயல்பாட்டாளர், முதலாளித்துவத்தின் கடுமையான விமர்சகர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.
சூழலியல் அழிவுக்கான காரணங்களைச் சோஷலிசக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து எழுதிய நூல்களால் 1970, 80-களில் அமெரிக்காவைத் தாண்டியும் புகழ்பெற்றார். 1971-ம் ஆண்டில் வெளிவந்த அவரது ‘மூடிவரும் வட்டம' (The Closing Circle) எனும் நூல், சூழலியல் அழிவுக்கான சமூகப் பொருளா தாரக் காரணங்களை விளக்கும் குறிப்பிடத்தக்க படைப்பு. அந்நூலில் அவர் முன்வைத்த 'சூழலியலின் நான்கு விதிகள்' என்ற கருத்தாக்கம், இன்றளவிலும் பல சூழலியல் ஆர்வலர்கள், எழுத்தாளர்களால் எடுத்தாளப்படுகிறது.
சூழலியல் சிக்கல்களை இடதுசாரிப் பார்வையிலிருந்து ஆராய்ந்து, மக்களிடம் அதைக் கொண்டு சேர்த்த விதத்தில் காமனர் தவிர்க்கமுடியாதச் சூழலியல் அறிவியலாளர். பெருகிவரும் பசி, பஞ்சம், சூழலியல் சிக்கல்களுக்கு மிகை மக்கள்தொகைக் காரணமல்ல, முதலாளித்துவச் சமூகத்தின் உற்பத்தி முறையே இச்சிக்கல்களுக்குக் காரணம் என்ற வாதத்தை வலியுறுத்தியவர்களில் முதன்மையானவர்.
உயிரியலே முதன்மை
1917-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த காமனர், ரஷ்ய யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1937-ம் ஆண்டில் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பின், 1941-ம் ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1966-ம் ஆண்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 'இயற்கை நடைமுறைகளின் உயிரியல்' எனும் மையத்தை நிறுவினார். அதன் நோக்கம்: "இயற்கை உயிரியலின் சூழலியலைப் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதனால் அழிக்கப்பட்டு வரும் உயிர்வாழ்வை பாதுகாக்க முடியும்".
அடித்தளம் அமைப்பு
சூழலியல் பாதுகாப்புக்குப் பெரும் பங்களிப்பு செய்த காமனர், 95வது வயதில் 2012-ல் காலமானார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சோஷலிசச் சூழலியல் அறிவியலாளராகத் திகழ்ந்த காமனரின் எழுத்து, தற்போது பெருகி வரும் சூழலியல் சிக்கல்களுக்கான தீர்வுகளை நோக்கி நாகரிகச் சமூகத்தை இட்டுச்செல்வதாக உள்ளது. அவரது எழுத்துகளும் செயல்பாடுகளும் கோருவது ஒன்றே ஒன்றைத்தான், அது ஒட்டுமொத்த மனிதச் சமூகத்துக்குமான சோஷலிச மாற்று.
அருண் நெடுஞ்செழியன்- கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். தொடர்புக்கு: arunpyr@gmail.com
பேரி காமனர் பிறந்த நாள்: மே 28