

அலைகள் ஆர்ப்பரித்து எழுந்து அடங்குகின்றன. சென்னையின் பழைய கடற்கரையாக இருந்த திருவொற்றியூர் சாலையைத் தொட்டுச் செல்கின்றன சில பேரலைகள். அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சின்ன சந்தில் நுழைந்து குறுகலான பாதை வழியே மூன்றாவது மாடிக்குப் போனால், ஒரு குட்டிக் கள்ளிக் காடு வரவேற்கிறது. பைப், தொட்டி, கற்கள், குட்டி குட்டி சிப்பிகள் எனக் கிடைத்த பொருட்களில் எல்லாம் பசுமையாய்த் தலைகாட்டுகின்றன கள்ளிகள். யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாத கள்ளிச் செடிகளில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் அங்கே இருக்கின்றன.
எனது தியானம்
"செடிகளுக்குத் தண்ணீர்விடுவதும் பராமரிப்பதும்தான் எனக்குத் தியானம் மாதிரி" என்று தத்துவார்த்தமாகப் பேச ஆரம்பிக்கும் லாசர், ஆயிரம் கள்ளிச் செடிகளைச் சேர்க்கும் நோக்கத்துடன் இந்த ஆர்வம் துளிர்விட்டதாகக் கூறுகிறார். சென்னை துறைமுகச் சுங்கத் துறையில் கிளியரிங், பார்வர்டிங் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
பராமரிப்பு குறைந்த கள்ளிகள்தான் என்றில்லை, நுணுக்கமான பராமரிப்பு தேவைப்படும் ஜப்பானியக் குறுந்தாவரங்களான போன்சாய், இதமான தட்பவெப்பநிலை நிலவும் இடங்களில் மட்டுமே வளரும் ஆர்கிட் போன்றவற்றையும் சீராட்டி வளர்த்து வருவது, தாவரங்களின் மீதான அவருடைய பிரியத்துக்கு அடையாளம்.
சேகரிக்கும் ஆர்வம்
நாகர்கோவிலைச் சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு, சின்ன வயதிலிருந்தே ஏதாவது ஒன்றைச் சேகரிப்பதில் அதீத ஆர்வம். 60-களில் தீப்பெட்டி படங்கள் சேர்க்க ஆரம்பித்தார். பிறகு இவருடைய உறவினரான பாதிரியார் கிரிகோரி ரோமில் இருந்து அனுப்பிய கடிதங்களில் இருந்து வெளிநாட்டு அஞ்சல் தலைகளைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இயற்கை வளம் கொழிக்கும் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில், வாரஇறுதிகளில் ஆர்கிட் தாவரங்களைத் தேடி எடுத்துவந்து வளர்க்கும் பழக்கம் சின்ன வயதிலேயே இவருக்கு இருந்திருக்கிறது. அப்போதே தாவர ஆர்வம் துளிர்த்திருந்தாலும், அது வளர்ந்து கிளை பரப்ப நாளானது.
1972-ல் சென்னை துறைமுகச் சுங்கத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். 1982-ல் இருந்து நாணயங்களைச் சேகரிப்பதில் அவருடைய ஆர்வம் திரும்பியது. அஞ்சல் தலைகளில் ஆயிரம் வகை, நாணயங்களில் ஆயிரம் வகையைச் சேர்க்கும் இலக்குகளோடு செயல்பட்டார். இப்படி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இவருடைய சேகரிக்கும் ஆர்வத்தில் ஒரு புதிய துறை சேர்ந்துவந்துள்ளது.
ஆயிரம் தாவரங்கள்
சென்னையில் 1991-ல் வீடு கட்டிய பிறகு, சுமார் 600 சதுர அடி கொண்ட மாடியில் தாவரங்களை வளர்க்க ஆரம்பித்தார். அப்போதுதான் ஆயிரம் வகைகளைச் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் கள்ளிகளைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார்.
"எல்லோருக்கும் பிடித்ததும் தெரிந்ததுமான தாவரங்களின் அரசி (குவீன் ஆஃப் பிளான்ட்ஸ்) ரோஜாவை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதற்குப் பதிலாகத் தாவரங்களில் அழகானவை (பியூட்டிபுல் ஆஃப் பிளான்ட்ஸ்) எனப்படும் கள்ளிகள், தாவரங்களின் அரசன் (கிங் ஆஃப் பிளான்ட்ஸ்) எனப்படும் ஆர்கிட்கள், கலைத்தன்மை மிகுந்த தாவரங்கள் (ஆர்ட் ஆஃப் பிளான்ட்ஸ்) எனப்படும் போன்சாய் ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
ஒவ்வொரு தாவரத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான பராமரிப்பு தேவைப்படும். இங்கே இருக்கும் தாவரங்களின் பராமரிப்பு, வளர்ப்பு முறை எல்லாம் தன்னார்வமா நானே கத்துக்கிட்டதுதான்.
கவனம் தேவை
கள்ளியை வளர்ப்பது ஏனோதானோ விஷயம் கிடையாது, அதிலும் நிறைய நுணுக்கங்கள் உண்டு. அதிகமாகத் தண்ணி ஊத்திடக்கூடாது, ஆர்கிடுக்கு நேரடி வெயில் படக்கூடாது. ஓரளவு நிழலும் சூரிய ஒளியும் தேவை. போன்சாயை பார்த்துப் பார்த்துப் பராமரிக்கணும்"என்று சொல்லும் இவருடைய தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சிகள், தையல் சிட்டு போன்றவை இனப்பெருக்கம் செய்துள்ளன.
கள்ளிகள் அரிதாகவே பூக்கின்றன. இப்போது இவரிடம் உள்ள சில கள்ளி வகைகள் பூத்திருக்கின்றன. பூக்க 6 மாதக் காலம் எடுத்துக்கொள்ளும் ஆர்கிட் வகையில் ஒரு தாவரத்தின் 10 துணை வகைகள் தற்போது இவரிடம் உள்ளன. அரசு, ஆலம், இந்தியன் ஜேடு போன்ற போன்சாய் தாவரங்களும் உள்ளன. சாதாரணமாக ஒரு போன்சாய் தாவரம், ஓரளவுக்காவது பெரிய மரத்தைப் போன்ற தோற்றத்தைப் பெற 10-15 ஆண்டுகள் ஆகும். அதை 6-7 ஆண்டுகளுக்குள்ளாகவே கொண்டுவந்துள்ளதாகக் கூறுகிறார். முதிர்ந்த போன்சாயை உருவாக்க 40-50 ஆண்டுகள் ஆகுமாம்.
தாவர அர்ப்பணிப்பு
இப்படி முழுக்க முழுக்க தாவரங்கள், சேகரிப்புகளுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற லாசருடைய மனைவி ராஜேஸ்வரி பள்ளி ஆசிரியை. இரண்டு மகள்கள் நிக்கி, நிம்மி. குடும்பச் செலவுகளைத் தாண்டி, தன்னுடைய சேகரிப்புகளுக்கு லாசருக்கு எப்படிப் பணம் கிடைக்கிறது?
குறிப்பிட்ட எண்ணிக்கையில் தாவரங்களைச் சேர்க்க வேண்டும், போன்சாய் போன்றவற்றை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் தாவரங்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஒரு போன்சாய் வளர்க்கக் கற்றுத் தருவதற்கே ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் மாற்று வழி கண்டுபிடித்திருக்கிறார் லாசர்.
தன்னுடைய தனிப்பட்ட செலவுகளைக் குறைத்துக்கொண்டு, சேகரிப்புகளுக்குச் செலவிடுகிறார். பல விலை மதிப்புமிக்க தாவரங்களைக் காசு கொடுத்து வாங்காமல், தன்னிடம் உள்ள அரிய தாவரத்தை மற்றத் தாவர ஆர்வலர்களிடம் கொடுத்துப் பண்டமாற்று செய்துகொள்கிறார். புதிய தாவர வகைகள் எந்த ஊரில் கிடைத்தாலும் சென்று பெற்றுவருகிறார்.
"சேகரிப்புகளுக்காக என்னுடைய சம்பாத்தியத்தைத் தந்துவிட்டேன். ஆர்வம் உள்ளவர்கள் உதவி செய்தால், இந்தச் சேகரிப்புகளைக் கண்காட்சியாக வைத்து எல்லோருக்கும் காட்ட முடியும்" என்கிறார். அவரிடம் இருக்கும் அரிய தாவரங்கள் ஊருக்குக் காட்டப்பட வேண்டிய பசுமைப் பொக்கிஷம் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
படங்கள்: ஏ. சண்முகானந்தம்
லாசர் தொடர்புக்கு: 9445232746