

இதுவரை எங்கள் காட்டில் சுமார் 110 வகைப் பறவைகள், ஏறக்குறைய 250 வகையான புழு-பூச்சி-ஊர்வன ஆகிய உயிரினங்களைப் பார்த்தாயிற்று. மரம், செடி கொடி வகைகளை இதுவரை கணக்கெடுக்கவில்லை.
பறவையியலாளர் ஜெகநாதனின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இங்கு காணும் (மரம், செடி, கொடி அல்லாத பிற வகை) உயிரினங்கள் பலவற்றின் ஒளிப்படங்களை iNaturalist இணையத்தளத்தில் பதிவுசெய்துள்ளோம் (https://www.inaturalist.org/lifelists/parithi; marathottam lat=11.5355379824 and lng=77.2599106691).
உயிர்ப் பன்மை அழிந்தால் வேளாண்மை - குறிப்பாக, கரிம வேளாண்மை (organic farming) -
சாத்தியமே இல்லை. வலசை வரும் பறவைகள், இங்குள்ள பறவைகள், பிற உயிரினங்கள் அனைத்தும் பூச்சிக் கட்டுப்பாட்டிலும் மகரந்தச் சேர்க்கையிலும் பெரும் பங்காற்றுகின்றன.
வீட்டுக்குள் வந்த இலைப்பூச்சி
இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் இலைப்பூச்சியைக் காண்பது கடினமே! இலையின் பச்சை வண்ணத்தில் இருப்பதால், அது நகர்ந்தால் மட்டும் நம் கண்களுக்குப் புலப்படும். ஒருநாள் என் புடவையில் அது ஒட்டிக்கொண்டு இருந்திருக்கிறது.
நானும் அதைக் கவனிக்காமல் வீட்டினுள் வந்துவிட்டேன். செடிகளுக்கு இடையில் அதற்குக் கிடைக்கும் பல்சுவை விருந்து வீட்டினுள் கிடைக்குமா? எதற்கு என்னுடன் ஒட்டிக்கொண்டதோ? உண்பதற்கு இன்றி வாடுமே என்று ஒரு வாளியுள் அதை இறக்கி வெளியில் விட்டதும் ஆடிய ஆட்டம் மிக அழகு. நாங்கள் அந்த அழகில் சற்று நேரம் ஆழ்ந்திருந்தோம்.