Last Updated : 21 Mar, 2015 11:14 AM

 

Published : 21 Mar 2015 11:14 AM
Last Updated : 21 Mar 2015 11:14 AM

இயற்கையின் கடைசிப் புகலிடங்கள்

சர்வதேச காடு நாள்: மார்ச் 21

நமது வீடோ, அலுவலகமோ இருக்கும் இடத்தில் என்றைக்கோ ஒரு நாள் ஒரு காடு இருந்திருக்கும். காடுகள், நாம் வாழும் நிலப் பகுதிகளின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுவிட்ட மோசமான நிலை இன்றைக்கு நிலவுகிறது.

எஞ்சியுள்ள காடுகள்தான் நம் வாழ்க்கைக்கு ஆதாரமான தண்ணீர், சுத்தமான காற்று, வெப்பநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது போன்ற பல இலவச இயற்கைச் சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழகம் எங்கும் காடுகள் எஞ்சியிருக்கும் பகுதிகளில் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் முக்கிய சரணாலயங்களின் அவசியமும் சிறப்பும் என்ன? இயற்கையைக் கூர்ந்து அறியவும், நாம் இளைப்பாறிக் கொள்ளவும் இந்தக் காடுகள் எப்படியெல்லாம் உதவும்? ஒரு பார்வை:

பழமையும் பெருமையும்: முதுமலை

உலகப் புகழ்பெற்ற நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மையப் பகுதிதான் முதுமலை காட்டுயிர் சரணாலயம். யுனெஸ்கோவின் உலக மரபு சின்னம் பரிந்துரை பட்டியலில் இந்தச் சரணாலயம் இடம்பெற்றுள்ளதே இதன் பெருமையைச் சொல்லும்.

எங்கே:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்தச் சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக, கேரளம், கர்நாடக எல்லைகளின் முச்சந்திப்பில் உள்ளது.

தொடக்கம்:

1940 - தமிழகத்தின் பழமையான சரணாலயங்களில் ஒன்று. மொத்தப் பரப்பு - 321 சதுர கீ.மீ.

சிறப்பு:

வடக்கே கர்நாடகத்தில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், மேற்கே கேரளத்தில் வயநாடு காட்டுயிர் சரணாலயத்தையும் கொண்ட இப்பகுதி ஒவ்வொரு பருவக் காலத்திலும் பல்வேறு உயிரினங்களின் இடம்பெயர்வுக்கு வழித்தடமாகத் திகழ்கிறது.

உயிரினங்கள்:

யானை, வேங்கைப் புலி, சிறுத்தை, செந்நாய், கழுதைப்புலி, நரி, கரடி, புனுகுப் பூனை, மரநாய், வெளிமான், மந்தி, தேவாங்கு, மலபார் மலையணில், பறக்கும் அணில் முதலிய பாலூட்டிகளும், அரிய வகைத் தாவரங்களும் இங்கே உள்ளன. 266 வகைப் பறவையினங்கள் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முக்கியத்துவம்:

மாயாறு உட்படப் பல காட்டு ஓடைகள் இந்தக் காட்டுப் பகுதியில் உருவாகிப் பவானி ஆற்றுடன் கலக்கின்றன. அத்துடன் ஒரு காலத்தில் தமிழகமெங்கும் பரவலாகத் தென்பட்ட பாறு எனும் பிணந்தின்னிக் கழுகுகள் (Gyps Vulture spp.) தற்போது 99% அழிந்து, ஒரு சில பறவைகளே எஞ்சியுள்ளன. மிகவும் ஆபத்துக்குள்ளான பறவையினங்களில் ஒன்றான இவை, தமிழகத்தில் முதுமலைப் பகுதியில் மட்டுமே எஞ்சியுள்ளன.

சென்னையின் நுரையீரல்: கிண்டி

மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு சில தேசியப் பூங்காக்களில் ஒன்று கிண்டி தேசியப் பூங்கா. சென்னையின் நுரையீரல் என்று போற்றப்படுகிறது.எல்லோரும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் கிண்டி சிறுவர் பூங்கா, பரந்த தேசியப் பூங்காவின் ஒரு சிறு பகுதிதான். தேசியப் பூங்காவுக்குள் முன் அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல முடியும்.

எங்கே:

சென்னை மாநகரின் மத்தியில் ஆளுநர் மாளிகை, ஐ.ஐ.டி.க்கு இடைப்பட்ட பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஐ.ஐ.டி., புற்றுநோய் நிறுவனம், தலைவர்களின் நினைவு இல்லப் பகுதி முன்பு காடாக இருந்தவைதான்.

தொடக்கம்:

1976, மொத்தப் பரப்பு 2.7 சதுர கி.மீ.

சிறப்பு:

இந்தியாவின் மிகச் சிறிய தேசியப் பூங்காக்களில் ஒன்று என்ற பெருமையும் இதற்கு உண்டு. தென்னகத்தின் அரிய வகை வாழிடமான கடலோர வறண்ட பசுமைமாறா புதர் காடுகளைக் கொண்டது.

உயிரினங்கள்:

நரி, வெளி மான், புள்ளி மான், பல வகை பாம்புகள், பறவைகள், தாவரங்களைக் கொண்டது.

முக்கியத்துவம்:

மாநகரின் நெருக்கடிகளை மீறி வெளிமான், நரி போன்றவை இன்னமும் இப்பகுதியில் எஞ்சியுள்ளன. திட்டமிட்டுப் பாதுகாத்தால், எத்தனை பெரிய நெருக்கடிக்கு மத்தியிலும் இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

குறிஞ்சி நிலம்: கொடைக்கானல்

பண்டைக் காலம் தொட்டுக் குறிஞ்சி நிலப் பகுதிக்குப் புகழ்பெற்ற பழனி காட்டுப் பகுதி, 20 ஆண்டு காலப் பரிந்துரைகளுக்குப் பிறகு சமீபத்தில் கொடைக்கானல் காட்டுயிர் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

எங்கே:

திண்டுக்கல், தேனி மாவட்டம்

தொடக்கம்:

2013, மொத்தப் பரப்பு 608.95 சதுர கி.மீ.

சிறப்பு:

முட்புதர் காடு, இலையுதிர் காடு, பசுமைமாறா காடு, ஈர இலையுதிர் காடு, மழைக்காடு, சோலைக்காடு, மலையுச்சிப் புல்வெளி எனப் பல வகையான வாழிடங்கள் இங்கே உள்ளன.

உயிரினங்கள்:

யானை, வேங்கைப் புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, வரையாடு, நரை அணில், மலபார் மலையணில், கட மான், கேளையாடு, காட்டெருது முதலிய பாலூட்டிகளும், பல அரிய தாவர வகைகளும், 100 வகைப் பறவையினங்களும் இங்குத் தென்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிடவாழ் பறவைகளான நீலகிரி காட்டுப்புறா (Nilgiri wood pigeon), நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit), குட்டை இறக்கையன் (White-bellied blue robin) முதலிய அரிய பறவைகளும் இப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.



நரைத்த அணிலின் வீடு: ஸ்ரீ வில்லிப்புத்தூர்

தென்னிந்தியாவிலும், இலங்கையில் மட்டுமே தென்படும் நரை அணில் எனப்படும் மலையணில் வகையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது ஸ்ரீவில்லிப்புத்தூர் நரை அணில் சரணாலயம்.

எங்கே:

விருதுநகர், மதுரை மாவட்டம். மேற்குப் பகுதியில் கேரளத்தின் பெரியாறு புலிகள் காப்பகமும், வட மேற்குப் பகுதியில் மேகமலை காப்புக்காடும், கிழக்கில் சிவகிரி காப்புக் காடும் சூழ்ந்துள்ளன.

புலிகளைப் பாதுகாப்பதற்காகச் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட சத்தியமங்கலம் காட்டுயிர் சரணாலயம் பல வகை காட்டுயிர்கள், குறிப்பாக யானைகளின் இடம்பெயர்வுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் மிகப் பெரிய சரணாலயம் இது.

எங்கே:

விருதுநகர், மதுரை மாவட்டம். மேற்குப் பகுதியில் கேரளத்தின் பெரியாறு புலிகள் காப்பகமும், வட மேற்குப் பகுதியில் மேகமலை காப்புக்காடும், கிழக்கில் சிவகிரி காப்புக் காடும் சூழ்ந்துள்ளன.

தொடக்கம்:

1989, மொத்தப் பரப்பு 480 சதுர கி.மீ.

உயிரினங்கள்:

யானை, வேங்கைப் புலி, சிறுத்தை, வரையாடு, கட மான் அல்லது மிளா (Sambar Deer), கேளையாடு, முள்ளம்பன்றி, சோலைமந்தி, நீலகிரி கருமந்தி, வெள்ளை மந்தி, தேவாங்கு எனப் பல வகை பாலூட்டிகள் இருந்தாலும், இங்குத் தென்படும் நரை அணிலே (Grizzled Giant Squirrel) இந்தச் சரணாலயத்தின் சிறப்பு. 220 வகை பறவையினங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 வகை ஓரிடவாழ்விகள்.

வெளிமான்களும் வலசை பறவைகளும்: கோடிக்கரை

வெளிமான்கள் இயற்கையாக வாழும் பகுதியைப் பாதுகாக்க உருவானது கோடிக்கரை காட்டுயிர் சரணாலயம். இங்குள்ள சதுப்புநிலப் பகுதி, உப்பங்கழிகளுக்கு வரும் 34 வகை பறவைகள் வட துருவத்திலிருந்து வலசை வருபவை. அத்துடன் இந்தியாவில் உள்ள மொத்தப் பறவை வகைகளில் 20 சதவீதத்துக்கும் மேல் இங்கே வருகை தருகின்றன.

எங்கே: நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோரப் பகுதி

தொடக்கம்: 1967, மொத்தப் பரப்பு 17.26 சதுர கி.மீ.

சிறப்பு: முத்துப்பேட்டை-அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள கடலோர அலையாத்திக் காடுகள்.

உயிரினங்கள்:

புள்ளிமான், காட்டுப்பூனை, நரி, கீரி முதலிய பாலூட்டிகளையும், கடலோர மணற்பாங்கான பகுதிகளில் முட்டையிடும் பங்குனி ஆமைகளையும், கடலில் ஓங்கில்களையும் (Dolphins) பார்க்கலாம். 274 வகைப் பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரிய பூநாரை, சிறிய பூநாரை, கூழைக்கடா, பல வகை உள்ளான்கள் (Waders), ஆலாக்கள் (Terns), கடற்காகங்கள் (Gulls) உள்ளிட்ட பறவையினங்களை இங்கே பார்க்கலாம்.

முக்கியத்துவம்:

வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் வலசை வரும் லட்சக்கணக்கான பறவைகளுக்குப் புகலிடமளிக்கும் முக்கியமான பகுதி கோடிக்கரை. உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், புதர்க் காடுகள், கடலோரம், கழிமுகம், உவர் நீர்நிலைகள், நன்னீர்நிலைகள் எனப் பல வகை வாழிடங்கள் இருப்பதால் பலதரப்பட்ட பறவை வகைகளைக் காண முடிகிறது.

பறவை பாதுகாப்பில் இப்பகுதி மிக முக்கியமான இடமாக (Important Bird Area) அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளையும், நீர்வாழ் பறவைகளின் வாழிடங்களையும் அங்கீகரிக்கும் ராம்சர் அமைப்பின் சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற இடம்.

பொதிகைத் தென்றல்: களக்காடு - முண்டந்துறை

தமிழ் பண்பாட்டு வரலாற்றில் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான பொதிகை மலை உள்ள காட்டுப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய சோலைமந்திகள், புலிகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை களக்காடு - முண்டந்துறை காட்டுயிர் சரணாலயங்கள். அருகருகே அமைந்துள்ள இவை இரண்டும் இணைந்து, தமிழகத்தின் இரண்டாவது மிகப் பெரிய சரணாலயமாகின்றன.

எங்கே: திருநெல்வேலி மாவட்டம்.

தொடக்கம்:

களக்காடு (1977). மொத்தப் பரப்பு: 253 சதுர கி.மீ., முண்டந்துறை (1962), மொத்தப் பரப்பு: 567 சதுர கி.மீ.

சிறப்பு:

சோலைமந்திகளின் (சிங்கவால் குரங்கு - Lion-tailed Macaque) பாதுகாப்புக்காகவே களக்காடு பகுதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த ஜே.சி. டேனியல் 1971-ல் இப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டு, தமிழக அரசுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப, இந்தச் சரணாலயம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த காட்டுயிர் ஆராய்ச்சியாளரான ஏ.ஜே.டி. ஜான்சிங் 1983-84-களில் முண்டந்துறை பகுதியில் களப்பணி மேற்கொண்டு இந்த இடத்தைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கப் பரிந்துரை செய்தார். 1988-ல் இரண்டு பகுதிகளும் இணைந்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டன.

உயிரினங்கள்:

வேங்கைப் புலி, சிறுத்தை, காட்டுப் பூனை, செந்நாய், யானை, காட்டெருது, கட மான், வரையாடு, காட்டுப் பன்றி, கரடி, தேவாங்கு, முதலை, நரை அணில், காட்டுக் கோழி.

ஓரிட வாழ்விகளின் சொர்க்கம்: ஆனை மலை

உலகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே உள்ள வரையாடு, சோலைமந்தி, பெரிய இருவாச்சி போன்ற சிறப்புயிர்கள் வாழும் இடம் ஆனைமலை இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான இப்பகுதியில் காணப்படும் பல்லுயிரியம் உலகப் புகழ்பெற்றது.

எங்கே:

கோவை மாவட்டம். கேரளத்தின் பரம்பிகுளம் புலிகள் காப்பகம், சின்னாறு காட்டுயிர் சரணாலயம், வாழச்சால் காப்புக் காடு, எரவிகுளம் தேசியப் பூங்கா எனத் தொடர்ச்சியான காட்டுப் பகுதிகள் சுற்றிலும் அமைந்துள்ளதால், பல வகை காட்டுயிர்களுக்கும், யானைகளுக்கும் மிக முக்கியமான வழித்தடமாக இந்தச் சரணாலயம் உள்ளது.

தொடக்கம்:

1976, மொத்தப் பரப்பு 850 சதுர கி.மீ.

சிறப்பம்சம்:

குடைசீத்த மரங்களைக் கொண்ட தரைக் காடுகள், புல்வெளிகளையும் புதர்களையும் கொண்ட வெட்டவெளிப் பகுதிகள், மழைக் காடுகள், இலையுதிர் காடுகள், ஆற்றோரக் காடுகள், மலையுச்சிப் புல்வெளிகள், சோலைக் காடுகள் எனப் பல வகை வாழிடங்களைக் கொண்டது. இதனால் தாவர, உயிரினங்களின் பன்மைத்தன்மை இங்கே அதிகம்.

உயிரினங்கள்:

வேங்கைப் புலி, சிறுத்தை, செந்நாய், நரி, கரடி, யானை, கட மான் அல்லது மிளா (Sambar Deer), கேளையாடு, காட்டெருது, தேன் இழிஞ்சான் (Nilgiri marten), ஓரிடவாழ்விகளான (Endemic species) வரையாடு, நீலகிரி கருமந்தி, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), பழுப்பு மரநாய், சின்ன பறக்கும் அணில் முதலிய பாலூட்டிகளும், ஆனைமலை சாலியா ஓணான், மலபார் குழிவிரியன் முதலிய ஊர்வனவும், காலில்லா பல்லிகள் (Caecilians), கொட்டான் எனும் கேழல்மூக்கன் தவளை எனப் பல அரிய உயிரினங்களைக் கொண்டுள்ள பகுதி இது. பெரிய இருவாச்சி, கருங்கழுகு என 218 வகைப் பறவைகள் இப்பகுதியில் தென்படுகின்றன, இவற்றில் 12 வகைப் பறவைகள் ஓரிட வாழ்விகள்.

வேங்கையும் வேழமும்: சத்தியமங்கலம்

எங்கே:

ஈரோடு மாவட்டம். கர்நாடக மாநிலத்திலுள்ள கொள்ளேகால் வனக்கோட்டம், பிலகிரி ரங்கஸ்வாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், ஈரோடு வனக் கோட்டக் காட்டுப் பகுதிகள் இந்தச் சரணாலயத்தைச் சூழ்ந்துள்ளன.

தொடக்கம்:

2014, மொத்தப் பரப்பு 1,411 சதுர கி.மீ.

சிறப்பு:

புதர் காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரி ஆற்றின் கரையோரமாக நீர்மத்தி (Terminalia arjuna) நிறைந்த ஆற்றோரக் காடு முதலிய வாழிடங்களைக் கொண்டது இப்பகுதி.

உயிரினங்கள்:

நரை அணில், யானை, சிறுத்தை, கரடி, ஆற்று நீர்நாய், செம்புள்ளிப் பூனை, அலுங்கு, குள்ள மான், கட மான் போன்ற 35 வகை பாலூட்டிகளும், மீன்பிடி கழுகு, மஞ்சள்திருடிக் கழுகு போன்ற 100-க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை போன்ற ஊர்வனவும் இச்சரணாலயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தகவல் உதவி: ப.ஜெகநாதன், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x